Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
எம். றொசாந்த் / 2019 மார்ச் 08 , பி.ப. 12:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில் உள்ள வீடொன்றின் மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல் மேற்கொண்டவர்கள் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நால்வரில் மூவர் சாட்சியால் அடையாளம் காட்டப்பட்டனர்.
அதனையடுத்து சந்தேகநபர்கள் நால்வரின் விளக்கமறியலை எதிர்வரும் 21ஆம் திகதிவரை நீடித்து யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் ஏ.எஸ்.பீற்றர் போல் உத்தரவிட்டார்.
யாழ்ப்பாணம் கொக்குவில் கருவப்புலம் வீதியில் உள்ள வீடொன்றின் மீது பெற்றோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதுடன், வீட்டின் முன் பக்கம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களும் தீக்கிரையாக்கப்பட்டன. இந்தச் சம்பவம் கடந்த பெப்ரவரி 19ஆம் திகதி மாலை இடம்பெற்றது.
வன்முறையை அடுத்து துரித விசாரணைகள் முடுக்கிவிடப்பட்டன.
சம்பவ நடைபெற்ற அன்றைய தினம், பெற்றோல் குண்டு வீச வந்த இளைஞர்கள் பயன்படுத்திய மோட்டார் சைக்கிளின் இலக்கங்களை கருவப்புலம் வீதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிரி காணொலி மூலம் அடையாளம் காணப்பட்டன.
அதனையடுத்து மறுநாளே சந்தேகத்தின் அடிப்படையில் ஒருவர் கைது செய்யப்பட்டார். அவரால் வழங்கப்பட்ட வாக்குமூலத்தின் அடிப்படையில் மேலும் மூவர் கைது செய்யப்பட்டனர்.
மல்லாகத்தைச் சேர்ந்த சுப்ரமணியம் துஷ்யந்தன், சுதுமலையைச் சேர்ந்த பாஸ்கரன் தனுசன், ஊரெழுவைச் சேர்ந்த சந்திரசேகரன் லதீசன், சுன்னாகத்தைச் சேர்ந்த ரதிகரன் துவாகரன் ஆகியோர் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து வாள்கள், கோடாரிகள் உள்ளிட்ட கூரிய ஆயுதங்களும் மோட்டார் சைக்கிளும் மீட்கப்பட்டன.
ஆவா குழுவைச் சேர்ந்த முக்கிய உறுப்பினர் ஒருவர் சம்பவ இடம்பெற்ற வீட்டில் முன்னர் வசித்தார். அவர் தற்போது அங்கு இல்லை. அவரை இலக்கு வைத்தே இந்த தாக்குதல் நடத்தப்பட்டது என்று பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர்கள் நால்வரும் நேற்று (07) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.
இந்தச் சம்பவம் தொடர்பான வழக்கு நேற்று (07) யாழ்ப்பாணம் நீதிமன்றில் நீதிவான் ஏ.எஸ்.பீற்றர் போல் முன்னிலையில் விசாரணைக்கு வந்த்து. சந்தேகநபர்கள் மன்றில் முற்படுத்தப்பட்டனர். முறைப்பாட்டாளர் மன்றில் முன்னிலையானார்.
சந்தேகநபர்கள் சாட்சியின் முன்னிலையில் அடையாள அணிவகுப்பை நடத்த மன்று கட்டளையிட்டது. அடையாள அணிவகுப்பை சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் நடத்தினர். சந்தேகநபர்கள் நால்வரில் மூவரை சாட்சி அடையாளம் காட்டினார்.
“சந்தேகநபர்கள் கோப்பாய் பொலிஸார் பொலிஸ் நிலையத்தில் வைத்தே சாட்சிக்கு காண்பித்துள்ளனர். அதனால் அவர்களை இனங்காண்பதில் சாட்சிக்கு இலகுவானது. இந்தச் சம்பவத்துடன், சந்தேகநபர்களுக்குத் தொடர்பில்லை. அவர்களுக்குப் பிணை வழங்க வேண்டும்” என்று சந்தேகநபர்கள் சார்பில் முன்னிலையான மூத்த சட்டத்தரணி மன்றில் விண்ணப்பம் செய்தார்.
சந்தேகநபர்களின் சட்டத்தரணி முன்வைத்த விண்ணப்பத்தை நிராகரித்த மன்று சந்தேகநபர்களின் விளக்கமறியலை எதிர்வரும் 21ஆம் திகதிவரை நீடித்தது. அன்றைய தினம்வரை வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.
22 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
1 hours ago