2025 செப்டெம்பர் 28, ஞாயிற்றுக்கிழமை

மாணவி கொலை: நீதவானுக்கு கடிதம் அனுப்பிய சந்தேகநபர்

Princiya Dixci   / 2017 மார்ச் 22 , பி.ப. 12:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.றொசாந்த்

புங்குடுதீவு மாணவி கொலை வழக்கில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஒன்பதாவது சந்தேகநபர், ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்ற நீதவானுக்குத் தான் கடிதம் எழுதியதாகவும், அதற்கு நீதவான் பதில் கடிதம் அனுப்பவில்லை எனவும் நீதிமன்றில் தெரிவித்தார்.

மாணவி, 2015 ஆம் ஆண்டு மே மாதம் 13 ஆம் திகதி வன்புணர்வுக்குட்படுத்தி படுகொலை செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் தொடர்பில் இதுவரையில் 12 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு, வழக்கு விசாரணைகள் ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் இடம்பெற்று வருகின்றது.

குறித்த வழக்கு, இன்று (22) ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் நீதவான் ஏ.எம்.எம்.றியால் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டது.

அதன்போது கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டு உள்ள 12 சந்தேகநபர்களும் மன்றில் முற்படுத்தப்பட்டனர்.

அதனை தொடர்ந்து நடைபெற்ற விசாரணைகளின் போது, சந்தேகநபர்கள், மன்றில் ஏதேனும் தெரிவிக்க விரும்புகின்றீர்களா? என நீதவான் வினவினார்.

அதற்கு, நான்காவது சந்தேகநபர், 'நாம் சுகவீனமுற்று நேற்றைய தினம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டேன். அங்கே முழுமையான சிகிச்சையை பெற முன்னர் தம்மை இன்றைய தினம் இங்கே அழைத்து வர வேண்டுமெனக் கூறி வைத்தியசாலையில் அனுமதிக்காது அழைத்து வந்து விட்டனர்' என தெரிவித்தார்.

அதனை தொடர்ந்து குறித்த வழக்கின் ஒன்பதாவது சந்தேகநபரான சுவிஸ்குமார் என அழைக்கப்படும் மகாலிங்கம் சசிக்குமார் தெரிவிக்கையில், 'நான் நீதவானுக்கு சிறையில் இருந்து கடிதம் ஒன்று அனுப்பி இருந்தேன். அந்த கடிதம் தொடர்பில் பதில் கடிதம் எதுவும் தனக்கு கிடைக்கவில்லை' என மன்றில் தெரிவித்தார்.

அதற்கு பதிலளித்த நீதவான், 'சந்தேகநபர் ஒருவர் நீதிவானுக்கு இவ்வாறு கடிதங்கள் அனுப்ப முடியாது. ஏதேனும் தெரிவிக்க விரும்பின் மன்றில் தெரிவிக்க முடியும்' எனத் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X