2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

முன்னாள் போராளிகள் மற்றும் அரசியல் கைதிகளின் குடும்பங்களுக்கு வாழ்வாதார உள்ளீடுகள்

George   / 2016 செப்டெம்பர் 29 , மு.ப. 05:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சண்முகம் தவசீலன்

 

புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகள், யுத்தத்தில் பிள்ளைகளை இழந்த முன்னாள் போராளிகளின் குடும்பங்கள், அரசியல் கைதிகளின் குடும்பங்கள், ஏனைய போராட்டக் குழுக்களில் இருந்து உயிர்நீத்த போராளிகளின் குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவிகள், நேற்றுப் புதன்கிழமை (28), யாழ்ப்பாணம் - ஆனைப்பந்தியிலுள்ள மாகாண கிராம அபிவிருத்திப் பணிமனையில் வைத்து கையளிக்கப்பட்டன.

மேற்படிக் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும், வடக்கு கிராம அபிவிருத்தி அமைச்சின் திட்டத்துக்கு அமைவாகவே, இந்த உதவித்திட்டம் வழங்கப்பட்டது. இதற்கமைவாக, 2016ஆம் ஆண்டுக்காக, யாழ் மாவட்டத்திலிருந்து தெரிவுசெய்யப்பட்ட ஒருதொகுதி பயனாளிகளுக்கே, இந்த உதவிப் பொருட்கள் கையளிக்கப்பட்டன.

குறித்த திட்டத்துக்காக, கடந்த ஆண்டில், வடக்கு கிராம அபிவிருத்தி அமைச்சுக்கான நிதியொதுக்கீட்டில், வடக்கு கிராம அபிவிருத்தி திணைக்களத்தினூடாக 43 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அத்துடன், இத்திட்டத்தின் கீழ் பயனடைவதற்காக, வடமாகாணம் முழுவதிலுமிருந்து சுமார் 12 ஆயிரத்து 494 பயனாளிகள் விண்ணப்பித்திருந்தனர்.

அவ்வாறு பதிவுசெய்யப்பட்டவர்களில் இருந்து, விசேட தேவை உடையவர்கள் என்னும் அடிப்படையில், 5 மாவட்டங்களிலும் தெரிவுகள் இடம்பெற்றன. அத்தெரிவுகளின் அடிப்படையில், ஒவ்வொரு குடும்பத்துக்கும் தலா 50 ஆயிரம் ரூபாய் வீதம், வாழ்வாதார உதவித் திட்டத்துக்கான உள்ளீடுகள், சுமார் 860 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டன. அதற்காக, ஒவ்வொரு மாவட்டத்திலும் தலா 147 குடும்பங்கள் வீதமும், சிறையில் உள்ள அரசியல் கைதிகளின் 125 குடும்பங்களுக்கும் வழங்கப்பட்டன.

அந்த வகையில், மீதமாக உள்ள பதிவு செய்த குடும்பங்களுக்கும் கடந்த ஆண்டு பதிவு செய்யத் தவறிய நிலையில், இந்த ஆண்டில் பதிவுகளை மேற்கொண்ட குடும்பங்களுடன், ஏனைய போராட்டக் குழுக்களில் இருந்து உயிரிழந்த அங்கத்தவர்களின் குடும்பங்களின் பதிவுகளும் உள்வாங்கப்பட்டு, இவ்வருடத்துக்கான உதவித்திட்டத்துக்கென 25 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இதன் முதற்கட்டமாகவே, யாழ். மாவட்டத்திலிருந்து தெரிவு செய்யப்பட்ட 45 பயனாளிகளுக்கான உதவித் திட்டங்கள், நேற்று வழங்கப்பட்டன. இவர்களுக்கான வாழாவாதார உதவிகளாக, பசு, ஆடு வளர்ப்பதற்கான காசோலைகள்,

மரவேலை செய்வதற்கான இயந்திர உபகரணங்கள், இரும்பு ஒட்டு வேலைகள் செய்வதற்கான இயந்திர உபகரணங்கள், அலுமினிய வேலைகளுக்கான இயந்திர உபகரணங்கள், கடைகளுக்கான குளிர்சாதனப் பெட்டிகள், வாடகைப் பாத்திரங்கள், தோட்டச் செய்கை செய்வதற்கான நீர் இறைக்கும் இயந்திரங்கள், தையல் தொழிலை செய்கின்ற பயனாளிகளுக்கான தையல் இயந்திரங்கள் அவற்றுடன் தொடர்புடைய பொருட்கள் என வெவ்வேறு வாழ்வாதார உள்ளீடுகள் வழங்கப்பட்டன.

இவ்வாறாகத் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கான வாழ்வாதார உதவித்திட்டம் வழங்கும் நிகழ்வுகள், மாகாணத்தின் ஏனைய 3 மாவட்டங்களிலும் விரைவில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.​


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X