2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

மீனவர் பிரச்சினை தொடர்பில் 7 அம்சக் கோரிக்கைகள் முன்வைப்பு

Princiya Dixci   / 2016 மே 11 , மு.ப. 03:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சொர்ணகுமார் சொரூபன்

'வடபகுதி மீனவர்களின் பிரச்சினைகளை 7 அம்ச தீர்மானங்கள் உள்ளடக்கிய வகையில் இந்திய வெளியுறவுத்துறையின் முன்னாள் மூத்த அதிகாரி ஜீ.பார்த்தசாரதியிடம் எடுத்துரைத்துள்ளோம்' என்று  யாழ். மாவட்ட கடற்றொழில் சம்மேளனத் தலைவர் என்.வி.சுப்பிரமணியம் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்துக்கு நேற்று செவ்வாய்க்கிழமை (10) விஜயம் மேற்கொண்ட இந்திய வெளியுறவுத்துறையின் முன்னாள் மூத்த அதிகாரி ஜீ.பார்த்தசாரதி உட்பட இருவர், யாழ்ப்பாணம் இந்திய துணைத் தூதரகத்தின் யாழ். அலுவலகத்தில் வடமாகாண மீனவ சங்க பிரதிநிதிகளுடன் சந்திப்பொன்றை மேற்கொண்டார்.

இந்தச் சந்திப்புத் தொடர்பில் யாழ். மாவட்ட கடற்றொழில் சம்மேளன தலைவர் கருத்துத் தெரிவிக்கையில்,

'வடமாகாணத்தின், நான்கு மாவட்டங்களின் மீனவத் தலைவர்கள் கொண்ட குழுவாக பார்த்த சாரதியைச் சந்தித்து எமது பிரச்சினைகள் தொடர்பாகத் தெளிவாக எடுத்துக் கூறியிருந்தோம்.
நாம் முக்கியமாக 7 கோரிக்கைகளை முன்வைத்திருந்தோம். எங்கள் கடற்றொழில் அழிவடைவதும் வளங்கள் பாதுகாக்கப்பட வேண்டியதும் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கை தொடர்பாகத் தெரிவித்தோம்.

கடல் வளங்களை அழித்து பல கோடிக்கணக்கான மீன் குஞ்சுகளை அழிப்பதுடன், கடற்றொழில் உபகரணங்களையும் சேதப்படுத்தி எங்கள் வாழ்வைச் சீரழிக்கும் இழுவைமடி படகு தொழிலை முற்றுமுழுதாக நிறுத்தல்,

அனுமதியின்றி எல்லைதாண்டும் மீனவர்களைக் கைது செய்து தண்டனை வழங்குதல்,
தனுஸ்கோடியில் இருந்து கோடிக்கரை வரையும், தலைமன்னாரில் இருந்து  பருத்தித்துறை வரையிலான இலங்கை மற்றும் இந்தியாவுக்கு இடையிலான எல்லைக் கோட்டை அடையாளப்படுத்துதல்,

ஒவ்வொரு கிலோ மீற்றர் இடைவெளியிலும் படகுகள் எல்லை தாண்டுவதை இனங்காட்டக்கூடிய வகையில் இயல்பாக ஒலி எழுப்பி ஒளிர கூடிய நிரப்புக்களை எல்லைகளில் போடுதல்,

பாரம்பரிய முறையில் வலிவலை தொழிலில் ஈடுபடும் வலைகள் மற்றும் படகுகள் கடல் நீரோட்டத்தின் வேகம் மாறும்பொழுது எல்லை தாண்டுவது நிருபிக்கும் பட்சத்தில் அவர்களை விடுதலை செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளல்,

கடல் வளங்களை அழித்து மீன் பெருக்கத்துக்கு பங்கம் விளைவிக்கும் அனைத்து தொழில் முறைகளையும் முற்றுமுழுதாக தடை செய்தல். அதனை கண்காணிப்பு செய்ய இலங்கை - இந்திய இருநாட்டு படையை கூட்டு ரோந்து பணியில் ஈடுபடுத்துதல், ஆகிய ஏழு தீர்மானங்களை நாம் கூறியிருக்கிறோம்.

 இது தொடர்பாக அவர்கள் இந்தியா சென்று மத்திய அரசுடன் கதைத்து, அதனை தம் நாட்டு ஊடகங்கள் வாயிலாக இப்பிரச்சினை சார்ந்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதாகவும் இதனூடாக இப்பிரச்சினை தொடர்பாக தம் நாட்டு மீனவர்கள் புரிந்து கொள்வதற்கான வாய்ப்பாக இது அமையும் எனவும் அவர்கள் எங்களிடம் தெரிவித்தனர்' என்று யாழ். மாவட்ட கடற்றொழில் சம்மேளனத் தலைவர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X