2025 ஜூலை 19, சனிக்கிழமை

முள்ளிவாய்கால்; நினைவு தினம் அனுஷ்டிக்கப்படும்: பிரதி அவைத் தலைவர்

George   / 2016 ஜனவரி 09 , மு.ப. 11:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சொர்ணகுமார் சொரூபன், சண்முகம் தவசீலன்

முள்ளிவாய்க்கால் படுகொலை நினைவு தினத்தை அந்த நினைவாலயத்தில் அனுஷ்டிக்கும் உறுதியுடன் இதற்கென முதலமைச்சரால் நியமிக்கப்பட்ட குழு நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது என நினைவாலய அமைப்புப் பணிக்குழுத் தலைவராக முதலமைச்சரால் நியமிக்கப்பட்டுள்ள வட மாகாண சபை பிரதி அவைத் தலைவர் ம.அன்டனி ஜெயநாதன், சனிக்கிழமை (09) தெரிவித்தார்.

நினைவாலய அமைப்பு பணிக்கான முதற்கட்ட நடவடிக்கையாக அதற்கான நிதி மூலத்தைப் பெறுவதற்கு  முடிவு செய்யப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

'நினைவாலய அமைப்பு பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்படும். இந்த வருடம் முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தை; அனுஷ்டிக்க நாங்கள் உறுதிபூண்டுள்ளோம். இந்த வகையில், வட மாகாண சபை உறுப்பினர்கள் அனைவரும் தமது நிதி ஒருக்கீட்டில் இருந்து தலா ஒரு இலட்சம் ரூபாயை இதற்கென வழங்க ஒப்புதல் அளித்துள்ளனர்.

2009 இறுதி யுத்தத்தில் சிக்குண்ட பல ஆயிரக்கணக்கானவர்கள் முள்ளிவாய்க்கால் பகுதியில் வைத்துப் படுகொலை செய்யப்பட்டனர்.
இவ்வாறு படுகொலை செய்யப்பட்டவர்கள் நினைவாக அந்தப் பகுதியில் நினைவாலயம் ஒன்றை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுப்பெற்றுள்ளன.

இதனை வலியுறுத்தி வட மாகாண சபையில் உறுப்பினர் து.ரவிகரன் பிரேரணை ஒன்றையும் முன்மொழிந்தார். அந்தப் பிரேரணை சபையால் ஏற்று அங்கீகரிக்கப்பட்டது.

இதனையடுத்து கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 4ஆம் திகதி இது குறித்து முதலமைச்சர் தலைமையில் ஆராயப்பட்டது. முதலமைச்சர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்தச் சந்திப்பில் மாகாண சபை உறுப்பினர்கள், அமைச்சர்கள் கலந்துகொண்டனர்.

இந்தக் கூட்டத்தில் முள்ளிவாய்க்கால் நினைவாலய அமைப்புப் பணிகளை முன்னெடுக்க ஏதாவது குழுவொன்று நியமிக்கப்பட்டது. என்னுடைய தலைமையில் எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா, உறுப்பினர்களான மு.சிவனேசன், து.ரவிகரன். த.பசுபாதிப்பிள்ளை, த.சுகிர்தன், அயூப் அஸ்மின், ம.திஜாகராசா, க.சர்வேஸ்வரன் ஆகிய 9 பேர் இந்தக் குழுவில் உள்ளடங்கியுள்ளனர்.

இந்நிலையில், மாகாண சபையின் தீர்மானத்தின் பிரகாரம் முள்ளிவாய்க்கால் நினைவாலய அமைப்புப் பணிகள் குறித்து தீர்மானங்களை எடுக்க இந்தக் குழுவை முதலமைச்சர் அழைத்துள்ளார்.

எதிர்வரும் 12 திகதி இடம்பெறவுள்ள சபை அமர்வின்போது இக்குழுவுடன் முதலமைச்சர் நினைவாலய அமைப்புப் பணிகள் குறித்து ஆராயவுள்ளார். இந்தக் கூட்டத்தில் நினைவாலயத்துக்கான அனுமதி பெறுதல், இடம், அமைப்பு முறை, நிதிக் கையாள்கை உள்ளிட்ட முக்கிய விடயங்கள் குறித்து பேசி இறுதி முடிவுக்கு வரவுள்ளோம்' எனவும் அவர் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X