2025 ஜூலை 16, புதன்கிழமை

மக்கள் குடியிருப்புக்களுக்கு அருகில் கழிவுகளை கொட்டும் இராணுவம்

Niroshini   / 2016 பெப்ரவரி 21 , மு.ப. 10:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.என்.நிபோஜன்

யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கு, மருதங்கேணி உதவி அரச அதிபர் பிரிவிலுள்ள நித்தியவெட்டை - முள்ளியான் ஜே-433 கிராம அலுவலர் பிரிவில் அமைந்துள்ள இராணுவத்தின் 55ஆவது பிரிவு படை முகாமிலிருந்து கொண்டுவரப்படும் கழிவுகள், பொது மக்கள் வாழும் பிரதேசங்களுக்கு அருகில் அனுமதிக்கப்படாத இடத்தில் பாதுகாப்பற்ற வகையில் கொட்டப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனால்  துர்நாற்றம்  மற்றும்  சுகாதார  சீர்கேடு  ஏற்படுவதாக அக்கிராம மக்கள்  தெரிவிக்கின்றனர்.
அத்தோடு, கழிவுகள் கொட்டப்பட்ட பின்னர், அவற்றின் மீது நச்சு மருந்து வகைகள் ஊற்றப்படுவதாகவும் அதனால் அக்கழிவுகளை உட்கொள்ளும் கால்நடைகள் இறந்துவிடுவதாகவும் இதுவரை 11 மாடுகள் இறந்துள்ளதாகவும் மேலும் சில மாடுகள் உயிருக்குப் பேராடிக்கொண்டிருப்பதாகவும் பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை, இக்கழிவுகளை உட்கொள்கின்ற நாய், காகம் உள்ளிட்ட ஏனைய விலங்குகளும் இறப்பதாக  பிரதேச பொது மக்கள் தெரிவிக்கின்றனர். அது மட்டுமன்றி ஆங்காங்கே இறந்து கிடக்கின்ற மாடுகளை உணவாக உட்கொள்கின்ற நாய்கள் கூட, ஒரு சில நாட்களில் மயிர்கள் உதிர்ந்து குட்டை பிடித்து காணப்படுவதாகவும் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

பொதுமக்களால் குறித்த விடயம் 55ஆவது படைப்பிரிவு இராணுவ அதிகாரியிடம் தெரிவித்த போது, அது தொடர்பில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. குறித்த சம்பவம் தொடர்பில் கிராம அலுவலர் ஊடாக மருதங்கேணி உதவி அரசாங்க அதிபருக்கும் தெரியப்படுத்தியதை தொடர்ந்து, உதவி அரச அதிபர், கடந்த வெள்ளிக்கிழமையன்று, சம்பவ இடத்துக்குச் சென்று நிலைமைகளை பார்வையிட்டு சென்றுள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் இராணுவத்தினரால் கழிவுகள் கொட்டப்படுகின்ற இடத்தை பார்வையிட்டு அறிக்கையிட  ஊடகவியலாளர்கள் சென்ற போது, இராணுவத்தினரால் குறித்த இடம் தகரங்கள் கொண்டு அடைக்கப்பட்டு, கனரக இயந்திரம் கொண்டு கழிவுகள் புதைக்கப்பட்டுக் கொண்டிருந்தாகவும் அதனை புகைப்படம் எடுக்க இராணுவத்தினரால் ஊடகவியலாளர்கள் அனுமதிக்கப்படாது  திருப்பி அனுப்பட்டதாகவும் ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X