2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

மக்களின் மனங்களில் வாழும் வீரர்களின் நினைவுகளை அழிக்க முடியாது: ஐங்கரநேசன்

Sudharshini   / 2015 நவம்பர் 28 , மு.ப. 04:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழினத்தின் விடுதலைக்காக உயிர் துறந்த உத்தமர்களின் நினைவாலயங்கள் நிர்மூலமாக்கப்பட்டுள்ளன. ஆனால், நினைவுச் சின்னங்களை அழித்தாலும் மக்கள் மனங்களில் இருந்து அவர்களது நினைவுகளை எவராலும் அழித்துவிட முடியாது. அவர்களின் நினைவாக மரங்களை நாட்டிப் போற்றுவோம் என்று வடக்கு விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார்.

மாவீரர் தினமான நேற்று உயிர் தியாகம்; செய்த போராளிகளை நினைவு கூரும் முகமாக இத்தாவில் பகுதியில் பொதுமக்களால் வெள்ளிக்கிழமை (27) மரநடுகை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் பொ.ஐங்கரநேசன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

உயிர் துறந்தவர்களின் நினைவு நாட்களை அனுட்டிப்பது உறவுகளின் மரபார்ந்த உரிமை. அதுவும், எமது அரசியல் விடுதலைக்காக உயிர் துறந்தவர்களின் நினைவை அனுட்டிப்பது எங்கள் எல்லோரதும் கடமை. கூட்டுப் பிரார்த்தனைக்கு வலு அதிகம். அதுபோன்றுதான், வௌ;வேறு காலப்பகுதிகளில் உயிர் துறந்தவர்களின் நினைவையும் கூட்டாக அனுட்டிக்கும்போது அதற்குக் கிடைக்கும் வலு அதிகம். அதனால் தான், அரசாங்கம் மாவீரர் தினத்தைக் கொண்டாட முடியாது என்று தடைவிதிக்கிறது. இந்தத் தடைகளுக்குப் பயந்து பணிவோமாக இருந்தால், நாம் தொடர்ந்தும் அடுத்தவர்களுக்கு அடிபணிந்தவர்களாகவே எப்போதும் வாழ நேரிடும்.

நாம் எவருமே இன்னுமொரு யுத்தத்தை விரும்பவில்லை. இதுவரையில் நாம் கொடுத்த உயிர்ப்பலிகள் போதும். எமது இளைய தலைமுறை மீண்டும் ஒருபோதும் வன்முறைப் பாதைக்குத் திரும்பக்கூடாது. ஆனால், அவ்வாறு நேர்ந்து விடுமோ என்று இப்போது அஞ்ச வேண்டி உள்ளது. அரசியல் கைதிகளின் விடயத்தில் அரசாங்கம் காட்டி வரும் அலட்சியம் காரணமாக ஒரு மாணவன் அநியாயமாகத் தன்னுயிரை மாய்த்துக் கொண்டிருப்பது சாதாரண ஒரு விடயமல்ல. அரசாங்கம் இதை ஒரு எச்சரிக்கையாக எடுத்து தொடர்ந்தும் அடக்குமுறைகளைப் பிரயோகிப்பதைத் தவிர்த்து தமிழ் மக்களுக்கு உரிய அரசியல் தீர்வை வழங்குவதற்கு முன்வர வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

இந்நிகழ்வில், மாகாணசபை உறுப்பினர்கள் சு.பசுபதிப்பிள்ளை, ப.அரியரத்தினம், இ.ஆர்னல்ட், பா.கஜதீபன் உட்பட பலர்; கலந்து கொண்டனர்.

மேலும், இந்நிகழ்வில் கலந்துகொண்ட பொதுமக்கள் அனைவருக்கும் தென்னை மரக்கன்றுகள் வழங்கப்பட்டதோடு உதவிப்பொருட்களும் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .