2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

மக்களின் வாழ்க்கைத்தரம் உயர அனுமதியுங்கள்

Niroshini   / 2016 மார்ச் 14 , மு.ப. 06:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

-குணசேகரன் சுரேன்

மக்களுக்கு கிடைக்கும் திட்டங்கள் மூலம் அவர்களின் வாழ்க்கைத்தரம் உயருகின்றது என்றால் அதற்கு அனுமதி அளியுங்கள். மாறாக அவர்கள் தொடர்ந்தும் ஒரே நிலையில் இருக்கவேண்டும் என்று நினைக்காதீர்கள் என வடமாகாண சபை எதிர்க்கட்சித் தலைவர் சின்னத்துரை தவராசா தெரிவித்தார்.

வடக்கு கிழக்கில் 65 ஆயிரம் வீடுகள் அமைக்கும் அரசாங்கத்தின் வீட்டுத்திட்டத்தில் அமைக்கப்பட்டு வரும் வீடுகள் இங்குள்ள மக்களுக்கு பொருத்தமான வீடுகளா? என அவரிடம் வினாவியபோதே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் தொடர்ந்து கூறுகையில்,

ஒரு வீடு அமைக்க 2.1 மில்லியன் ரூபாய் செலவாகின்றது. இதற்கு இன்னொரு வீடு அமைக்கலாம் என பலர் கருத்துச் சொல்லி வருகின்றனர். ஆனால் இதில் இருக்கும் நன்மைகளையும் கவனிப்பது முக்கியம். இந்த வீடுகள் புதிய முறையைக் கொண்டு செய்திருக்கிறார்கள். எமது மக்களுக்கு காஸ் அடுப்புக்கள் தேவையில்லையென முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கூறுகின்றார். ஆனால் அவர் எமது மக்களின் வாழ்க்கைத்தரம் உயர்கின்றது என்பதை கவனிக்கின்றார் இல்லை.

உரும்பிராயில் அமைக்கப்பட்ட வீட்டைச் சென்று பார்த்தேன், அந்த வீட்டைப் பெற்றுக்கொண்ட பயனாளியான பெண் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கின்றார். சமையல் பாத்திரங்கள் இல்லாதிருந்த தங்களுக்கு இது பெரும் வரப்பிரசாதம் எனக்கூறுகின்றார். 12 வயதுச் சிறுவன் ஒருவன் வாழ்க்கையில் முதன்முதலாக கனிணியைப் பயன்படுத்த சந்தர்ப்பம் கிடைக்கின்றது. இது மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துகின்ற விடயம்.

இந்திய அரசாங்கம் எங்களுக்கு 50 ஆயிரம் வீடுகள் தந்தது. வடமாகாணத்தில் சுமார் 1 இலட்சம் வீடுகள் இன்னமும் தேவையாகவுள்ளன. இந்நிலையில் இந்த 65 ஆயிரம் வீடுகள் கிடைப்பது நல்லது. வடமாகாண சபை வெளிநாடுகளிடம் கதைத்து வீட்டுத்திட்டங்களைப் பெற்றுக்கொடுக்க வேண்டிய நேரத்தில், கிடைக்கின்ற திட்டங்களை தள்ளிவைக்கக்கூடாது. இவ்வாறு தான் இரணைமடுவிலிருந்து யாழ்ப்பாணத்துக்கான குடிநீர் விநியோகத்திட்டத்தை தள்ளி வைத்து அது இன்று வரையில் நடைமுறைப்படுத்தப்படவில்லை.

இந்த வீடுகள் தங்களுக்கு வேண்டுமா இல்லையா என்பதை மக்களே தீர்மானிக்க வேண்டும். அவர்களுக்குத் தெரியும் தங்களுக்கு என்ன வேண்டும் என்று. 30 வருடங்கள் உத்தரவாதம் கொண்ட அந்த வீடுகளை அமைக்க அனுமதியுங்கள் என்றார்.

இந்த வீடுகள் மலசலகூடம் மற்றும் குளியலறையுடன் கூடிய வகையில் அமைக்கப்பட்டு வருகின்றன. 2 அறைகள், 1 சமையல் அறை மற்றும் வரவேற்பறை ஆகியவை உள்ளடங்கலாக நிலம் முழுவதும் மாபிள் பொருத்தப்பட்டு அமைக்கப்படுகின்றது.

ஒரு வீட்டில், 3 கட்டில்கள் அவைக்குரிய மெத்தைகள், 1 அலுமாரி, வரவேற்பு அறை இருக்கை, 2 கனிணி மேசைகள், 1 மடிக்கனிணி, தொலைக்காட்சி, 2 சுழல் கதிரைகள், இணையத்தள வசதி, சமையல் அறை தளபாடங்கள், சமையல் பாத்திரங்கள் ஆகியன உள்ளன.

இந்தவீடுகள் எமது மக்களுக்கு பொருத்தமில்லாத வீடுகள் என்றும், ஒரு வீட்டுக்கான செலவில் இரண்டு வீடுகள் அமைக்க முடியும் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X