2025 செப்டெம்பர் 29, திங்கட்கிழமை

மணல் அகழ்வுக்கு தனியாருக்கு தடை

Gavitha   / 2016 நவம்பர் 22 , மு.ப. 09:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

“டிசெம்பர் மாதம் 31ஆம் திகதிக்குப் பின்னர், மன்னார் மாவட்டத்தில் தனியாருக்கு மண் அகழ்வதற்கான அனுமதிப்பத்திரம் வழங்குவதில்லை. மண் வளம் அதிகமுள்ள கிராம சேவகர் பிரிவுகள் இனங்காணப்பட்டு, அந்தப் பிரிவிலுள்ள பொதுமக்கள் சார்ந்த அமைப்புக்களின் பிரதிநிதிகளை உள்ளடக்கி அமைக்கப்படும் ஒன்றியத்தின் வழியாக, அவசியத் தேவையுள்ளவர்களுக்கு மாத்திரமே அனுமதி வழங்கப்படும்” என அமைச்சர் ரிஷாட் பதியுதீனும் நாடாளுமன்ற உறுப்பினர் மஸ்தானும் கூட்டாக விடுத்த அறிவிப்பை, மன்னார் மாவட்ட அபிவிருத்திக் குழு, ஏகமனதாக ஏற்றுக்கொண்டுள்ளது.

மன்னார் மாவட்ட அபிவிருத்திக்குழுக் கூட்டம்>  திங்கட்கிழமை, மன்னார் கச்சேரியில்  நடைபெற்றது.

அதன்போது, முசலிப் பிரதேச சபை ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் மண் அகழ்வுக்கு தடைவிதித்து மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தை சுட்டிக்காட்டிய முசலிப் பிரதேச செயலாளர், அந்தப் பிரதேசத்தில் வீடுகள் அமைப்பதற்காகவும் அபிவிருத்திப் பணிகளுக்காகவும் மணல் அகழ்வதற்கான தேவை  ஏற்பட்டுள்ளதாகவும் எழுந்துள்ளதாகவும் இது தொடர்பில், மாவட்ட அபிவிருத்திக்குழு தீர்மானங்களை முன்னெடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.

“100 கியூப் அளவிலான மண்ணை அகழ்ந்தெடுப்பதற்கான சட்டபூர்வமான அனுமதியை மட்டுமே பிரதேச செயலாளர்களினால் வழங்க முடியும். அதற்கு மேலதிகமாக தனியாரோ, கம்பனிகளோ மண்ணை அகழ்ந்தெடுப்பதற்கான கோரிக்கையை விடுக்கும் பட்சத்தில், அதற்கான மாற்றுவழியை சபை கவனத்தில் கொள்ள வேண்டும்” என அவர் கோரிக்கை விடுத்தார்.

அதனையடுத்து, வீடுகள் அமைப்பதற்கும் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கும் டிசெம்பர் மாதம்  31ஆம் திகதி வரை, பழைய அனுமதிப்பத்திர நடைமுறைகளை தொடர்வதெனவும் அதன்பின்னர், மன்னார் மாவட்டத்தின் மண் அகழ்வு குறித்து முறையான கட்டமைப்பின் படி அனுமதிப்பத்திரத்தை வழங்குவதெனவும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

கிராம சேவகர் பிரிவில் இயங்கும் கிராம அபிவிருத்தி சங்கம் கமநல சேவைகள் அமைப்பு பாடசாலை அபிவிருத்தி சங்கம் மற்றும் சமூக நல அமைப்புக்களை உள்ளடக்கிய ஒன்றியத்தின் ஊடாக அனுமதிப்பத்திரங்களை வழங்குவதன் ஊடாக சட்டவிரோத மண் அகழ்வை கட்டுப்படுத்த தீர்மானிக்கப்பட்டது.

கடந்த காலங்களில், மன்னார் மாவட்டத்துக்கு வெளியே உள்ளவர்கள், பணம் சம்பாதிக்கும் நோக்கில் இந்தப் பிரதேசத்துக்கு வந்து, மண் அகழ்வை முன்னெடுத்த நிலையில், இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X