2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

மதுபானசாலைகள், மாமிசக்கடைகளை 'இன்று மூடவும்: புனிதம் பேணவும்

Gavitha   / 2016 மார்ச் 07 , மு.ப. 03:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

சண்முகம் தவசீலன்

மஹா சிவராத்திரியான இன்றைய தினத்தில், மதுபானசாலைகள், மாமிசக் கடைகள் யாவும் மூடப்பட்டு, புனிதம் பேணப்பட வேண்டும் என, இந்து சமயக் குருமார்கள் மற்றும் இந்து சமயத் தலைவர்கள்  வலியுறுத்தியுள்ளனர்.  

சுன்னாகம் கதிரமலைச் சிவன் தேவஸ்தானப் பிரதம குரு நா.சர்வேஸ்வரக் குருக்கள், மருதனார்மடம் சுந்தர ஆஞ்சநேயர் ஆலயப் பிரதம குரு சிவஸ்ரீ இ.சுந்தரேஸ்வரக் குருக்கள், யாழ். சின்மயா மிஷன் அமைப்பின் தலைவர் பிரம்மஸ்ரீ ஜாக்ரத் சைதன்யா சுவாமிகள், சிவபூமி அறக் கட்டளையின் தலைவர் செஞ்சொற் செல்வர் கலாநிதி ஆறு திருமுருகன் ஆகியோரே, கூட்டாக இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளனர். இது தொடர்பில் அவர்கள் மேலும் கூறியுள்ளதாவது,

'சைவ சமய விரதங்களில் சிவனைக் குறித்து அனுஷ்டிக்கப்படும் மஹா சிவராத்திரி விரதம் தலையாயது. இந்த விரதம் விளையாட்டாகவோ அன்றி வேடிக்கையாகவோ அனுஷ்டிக்கப்படக்கூடாது. இந்த விரதம், மஹா சிவராத்திரி தினத்தின் முன் தினமாகிய திரயோதசி தினத்தன்று ஒரு வேளை பகல் உணவுண்டு சிவராத்திரி தினத்தன்று இரவு  நித்திரை செய்யாமல், எல்லாம் வல்ல பரம்பொருளான சிவனை பக்தியுடன் நினைந்து உள்ளன்புடன் வழிபட வேண்டும்.

கண் விழிக்க வேண்டும் எனும் காரணத்துக்காக, சினிமாப் படம் பார்த்தோ அல்லது வேறு கேளிக்கை நிகழ்வுகளில் பங்குபற்றியோ, இந்த விரதத்தை அனுஷ்டித்தல் மகா தவறு. சைவமக்களின் புனிதமான இந்நன்னாளில் மதுபானம் அருந்துதல், மாமிசம் உண்ணல், தீய சொற்கள் பேசுதல் என்பவற்றை அறவே தவிர்க்க வேண்டும்.

மகிமை வாய்ந்த இவ்விரத தினத்தில் அரசாங்க விடுமுறை அறிவிக்கப்பட்ட போதும் அரசாங்க - வர்த்தக விடுமுறை அறிவிக்கப்படவில்லை. இதன் காரணமாக, இத்தினத்தில் மதுபானச் சாலைகள், மாமிசக் கடைகள் திறந்திருப்பது வழமை. இந்தச் செயற்பாடு தொடர்பில், சைவசமய அபிமானிகளான நாங்கள் கவலை அடைகின்றோம்.

சைவசமயத்தின் முழுமுதற் கடவுளான சிவபெருமானுக்குரிய முக்கியமான விரத தினத்தில் மதுபானச் சாலைகள், மாமிசக் கடைகள் யாவும் மூடப்பட்டுப் புனிதம் பேணப்பட வேண்டுமென்பதே எமது வேண்டுகோளாகும்' என அவர்கள் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X