2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டம்

Niroshini   / 2016 ஜனவரி 19 , மு.ப. 10:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம், கடந்த 3 வருடங்களின் பின்  இன்று  செவ்வாய்க்கிழமை காலை 10 மணியளவில் மன்னார் மாவட்டச் செயலகத்தின் ஜெய்க்கா மண்டபத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் எம்.வை.எஸ்.தேசப்பிரிய ஒருங்கிணைப்பின் கீழ் இடம்பெற்றது.

ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத்தலைவர்களில் ஒருவரான வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், குறித்த ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் கலந்துகொள்ளாத நிலையில் ஏனைய ஒருங்கிணைப்புக்குழு இணைத்தலைவர்களான  அமைச்சர் ரிஷாட் பதியுதீன், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான கே.கே.மஸ்தான், சார்ள்ஸ் நிர்மலநாதன் ஆகியோரின் இணைத்தலைமையில் குறித்த மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டம்  இடம்பெற்றது.

இக் கூட்டத்தில், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், வடமாகாண அமைச்சர் பா.டெனிஸ்வரன், வடமாகாண சபை உறுப்பினர் எஸ்.பிரிமூஸ் சிறாய்வா மற்றும் பலரும் கலந்துகொண்டனர்.

இதன்போது, மன்னார் மாவட்டத்தில் கல்வி, சுகாதாரம், போக்குவரத்து, குடி நீர், மின்சாரம், விவசாயம், மீன்பிடி போன்ற துறைகள் குறித்தும் மேலும் மேற்கொள்ளப்பட வேண்டிய வேலைத்திட்டங்கள் குறித்தும் விரிவாக ஆராயப்பட்டன.

அத்தோடு மன்னார் மாவட்டத்தில் யுத்தத்தின் காரணமாக இடம்பெயர்ந்த நிலையில் மீள் குடியமர முடியாத நிலையில் உள்ள மக்களை மீள் குடியேற்றுவதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் விரிவாக ஆராயப்பட்டன.

மேலும் மாவட்டத்தில் பின் தங்கிய நிலையில் உள்ள பாடசாலைகளை முன்னேற்றுவது தொடர்பாகவும் அப்பாடசாலைகளில் உள்ள ஆசிரியர் பற்றாக்குறையினை நிவர்த்தி செய்வது தொடர்பாகவும் ஆராயப்பட்டது.

மன்னார் மாவட்டத்தில் உள்ள சகல விதமான பிரச்சினைகள் குறித்தும் உரிய அதிகாரிகளோடு கலந்துரையாடப்பட்டுள்ளதோடு மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை நிவர்த்தி செய்ய அதிகாரிகள் உடன் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என  மாவட்ட அபிவிருத்திக்குழுவின் இணைத்தலைவர்கள் கூட்டாக கோரிக்கை முன்வைத்தனர்.

மன்னார் மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டம் கடந்த 3 வருடங்களாக இடம்பெறாது இருந்த நிலையில் மூன்று கட்சிகளைச் சேர்ந்த மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத்தலைவர்கள் 3 பேர் ஒற்றுமையுடன் எவ்வித கருத்து முரண்பாடுகளும் இன்றி ஒற்றுமையாக அபிவிருத்திக்குழு கூட்டத்தை நடத்தியமை விசேட அம்சமாகும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X