2025 செப்டெம்பர் 29, திங்கட்கிழமை

மருத்துவ பீட கட்டடத் தொகுதி: யாரும் தடையில்லை

George   / 2016 டிசெம்பர் 27 , மு.ப. 06:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.ஜெகநாதன்

“மருத்துவ பீட கற்கைநெறிக்கான கட்டடத் தொகுதி, யாழ். போதனா வைத்தியசாலையின் மேற்குப் பகுதியில், மருத்துவப் பீடத்துக்கு ஒதுக்கப்பட்ட 4 ஏக்கர் காணியில் அமைக்கப்பட உள்ளது” என யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் ரி.சத்தியமூர்த்தி, நேற்றுத் தெரிவித்தார்.

இது தொடரபில் அவர் மேலும் கூறுகையில், “இக்கட்டடத் தொகுதி, உயர்கல்வி அமைச்சின் 720 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் அமைக்கப்படவுள்ளது.

8 மாடிகளைக் கொண்ட இக்கட்டடத் தொகுதியில், மருத்துவ பீட கற்கை நெறிகளுக்கான பல்வேறு பிரிவுகளின் காரியாலய அலகுகளும் மாணவர்களுக்கு கற்கை வசதி வழங்கக் கூடிய அலகுகளும் அமைக்கப்படவுள்ளன.

இக்கட்டடத்தின் ஒரு தளத்தில் அமையவுள்ள, சத்திர சிகிச்சைக் கூடம் மற்றும் ஆய்வு கூட வசதிகள் பற்றி கருத்து முரண்பாடு எழுந்தது. இது தொடர்பாக சம்பந்தப்பட்டவர்களுடன் கதைத்து சுமூகமான முடிவு எட்டப்பட்டுள்ளது.

இருப்பினும், சில ஊடகங்களில் திரிபுபடுத்தப்பட்டு செய்திகள் வெளிவந்தன.  இக்கட்டடத் தொகுதியினைக் கட்டுவதற்கு வைத்தியர்களோ ஏனையவர்களோ தடையாக இருக்கவில்லை. அனைத்து ஊழியர்களும் பூரண ஆதரவை வழங்குவார்கள்.

கட்டுமான வேலைகள், யாழ். மருத்துவ பீட நிர்வாகத்தின் கீழ் அமையும். எனினும், நோயாளர் சேவை பிரிவுகள் இயங்கும் போது அவை முழுமையாக வைத்தியசாலைப் பணிப்பாளரின் கட்டுப்பாட்டில் இயங்கும்.

மருத்துவ மாணவர்களின் கற்கை நெறியில், பயிற்சியில் யாழ். மருத்து பீடம் முக்கியமான பங்கை வகிக்கிறது. குறிப்பாக, வைத்தியசாலை நிர்வாகத்தின் கீழ் கடமையாற்றும் வைத்திய நிபுணர்களின் பங்களிப்பும் மிகமுக்கியமானது. அந்த வகையில் அவர்கள் தொடர்ச்சியான பங்களிப்பை வழங்குவார்கள்.

அத்துடன் இக்கட்டடத் தொகுதி, யாழ். போதனா வைத்தியசாலையின் பயிற்சி வழங்கும் திறனை அதிகரிப்பதுடன் அனைவரும் வேறுபாடின்றி பயன்படுத்தக் கூடிய நிலையமாக அமையும்” என அவர் மேலும் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X