2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

யாழில் முதலீட்டாளர் மாநாடு

Princiya Dixci   / 2016 ஓகஸ்ட் 19 , மு.ப. 04:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

'யாழ்ப்பாணத்தில் இம் மாதம் 22ஆம் திகதி முதலீட்டாளர்களின் மாநாடு நடைபெறவுள்ளது. இதற்கமைய, இந்த மாநாடு யாழ். மாவட்ட செயலகத்தில் காலை 10 மணிக்கு ஆரம்பமாகி பிற்பகல் 03 மணி வரை நடைபெறவுள்ளது' என வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்தார்.

மேலும், வடக்கு மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் வெளிநாட்டு உள்ளூர் முதலீட்டாளர்களின் முதலீடுகளை வடக்கில் அதிகரிப்பதற்காகவே இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று(18) நடைபெற்ற செய்தியாளர்களுடனான சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர்,

' தெற்கில் போன்றே வடக்கிலும் அபிவிருத்திகள் இடம்பெற வேண்டும். வறுமை இல்லாது ஒழிக்கப்பட வேண்டும். அப்பொழுது தான் சமத்துவ நிலை ஏற்படும்.

முதலீட்டாளர் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக 150 உள்நாட்டு வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளோம். தற்போது யாழ். நல்லூர்க் கந்தனின் ஆலய உற்சவம் ஆரம்பமாகியுள்ளது. இம் மாத இறுதியில் உற்சவம் முடிவடையவுள்ளது. இந்த மாநாட்டுக்கு சிறந்த சந்தர்ப்பமாக இதனை கருதுகின்றோம்' என்றார்.

'வருடத்தில் ஒன்பது மாதங்களுக்கு சூரிய ஒளி வடக்கை நோக்கிய வண்ணம் உள்ளது. இதனைப் பயன்படுத்தி மின்சாரத்தினை உற்பத்தி செய்ய முடியும். இதேபோன்று காற்றின் மூலமாகவும் மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கான வசதியும் உண்டு. இவற்றைப் பயன்படுத்துவதன் ஊடாக சூழல் மாசடைவது தடுக்கப்படுவதுடன், நாட்டுக்கு வருமானமும் கிடைக்கின்றது. இத்துறையில் முதலீடுகள் அவசியம். நாட்டுக்குத் தேவையான உப்பை நாம் இன்னும் வெளிநாட்டிலிருந்தே இறக்குமதி செய்கின்றோம். இதற்கான வளங்கள் வடக்கில் உண்டு. மூடப்பட்டுள்ள ஆனையிறவு, பரந்தன், தொழிற்சாலைகள் மீண்டும் திறக்கப்பட வேண்டும்.

அரசாங்கத்தினரால் இவ்வாறான முதலீடுகளை தனித்து மேற்கொள்ள முடியாது. தனியார் துறையினரை இதற்காக அழைக்கின்றோம். நாட்டில் தொடர்ந்து அரசாங்கங்களை நடாத்தி வந்த கட்சிகள் விட்ட தவறை இனியும் நாம் தொடர விட முடியாது. தற்போது இத்தாலி, சீனா, இந்தியா போன்ற நாடுகள் முதலீடுகள் தொடர்பில் ஆர்வம் காட்டியுள்ளன. சில நிறுவனங்கள் திட்டங்களுக்கான அனுமதியை முதலீட்டுக் கிளையிடம் பெற்றுக் கொண்டுள்ளன' என்றும் அவர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X