2024 ஏப்ரல் 28, ஞாயிற்றுக்கிழமை

யாழ்.இளைஞன் படுகொலை: கிளிநொச்சியில் நால்வர் கைது

Editorial   / 2024 மார்ச் 13 , மு.ப. 11:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.றொசாந்த் 

யாழ்ப்பாணத்தில் இளைஞன் ஒருவரை கடத்தி சென்று படுகொலை செய்த குற்றச்சாட்டில் கிளிநொச்சியில் பதுங்கியிருந்த நான்கு சந்தேகநபர்கள் யாழ்.மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 

வட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்த 23 வயதுடைய தவச்செல்வம் பவிதரன் எனும் இளைஞன் காரைநகர் பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் தனது மனைவியுடன் சென்று விட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த வேளை பொன்னாலை பாலத்திற்கு அருகில் வைத்து , கணவன் மனைவி இருவரும் இருவேறு வாகனங்களில் வன்முறை கும்பல் ஒன்றினால் கடத்தப்பட்டனர். 

பின்னர் மனைவியை சித்தங்கேணி பகுதியில் இறக்கி விட்டு , கணவன் மீது தாக்குதலை மேற்கொண்டு வாளினால் வெட்டி படுகாயங்களை ஏற்படுத்திய பின்னர் வட்டுக்கோட்டை வைத்தியசாலை முன்பாக வீசி சென்று இருந்தனர். 

படுகாயங்களுடன் காணப்பட்ட இளைஞனை வைத்தியசாலை பணியாளர்கள் மீட்டு , நோயாளர் காவு வண்டி ஊடாக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருந்தார். 

இந்நிலையில் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸ் குழுவினர் , சந்தேக நபர்கள் கிளிநொச்சி ஜெயபுரம் பகுதியில் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்ததை அடுத்து , அங்கு விரைந்த பொலிஸ் குழுவினர் நான்கு சந்தேக நபர்களை கைது செய்தனர். 

கைது செய்யப்பட்ட நபர்களிடம் இருந்து இரண்டு மோட்டார் சைக்கிளை கைப்பற்றி உள்ளதாகவும், கைது செய்யப்பட்ட நபர்கள் வட்டுக்கோட்டை மற்றும் அராலி பகுதிகளை சேர்ந்த 37 , 32 , 25 மற்றும் 22 வயதுடையவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர். 

கைது செய்யப்பட்ட நபர்களை வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். 

கடந்த 2022ஆம் ஆண்டு வட்டுக்கோட்டை பகுதியில் உள்ள ஆலயம் ஒன்றில் உயிரிழந்தவரின் சகோதரன் ஒருவர் சாமியை தூக்குவதற்கு முற்பட்ட வேளை , ஆலய இளைஞர்கள் சிலர் அவரை தடுத்து முரண்பட்டுள்ளனர்.  அதனால் ஆத்திரமுற்ற இளைஞன் , தனது சகோதரனுடன் முரண்பட்ட இளைஞர்கள் மீது வாள் வெட்டு தாக்குதல் நடத்தியதில் இரு இளைஞர்கள் படுகாயமடைந்திருந்தனர். 

இந்த சம்பவத்திற்கு பழி தீர்க்கும் வகையிலையே தம்மை தாக்கிய இளைஞன் , தாக்குதலுக்கு இலக்கான இளைஞர்களின் வழிநடத்தலில் கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X