Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 16, வெள்ளிக்கிழமை
Editorial / 2019 நவம்பர் 23 , மு.ப. 11:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.நிதர்ஷன்
யாழ். மாவட்டத்தில், டெங்கு நோயின் தாக்கம் தீவிரம் பெற்றுள்ள நிலையில், அதைக் கட்டுப்படுத்துவதற்கு சுகாதாரத்துறை, அரச உத்தியோகத்தர்களின் ஒத்துழைப்பு போதுமானதாக இல்லை என குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தில் டெங்கு நோய் மரணற்கள் அதிகரித்துள்ள நிலையில், டெங்கு தீவிர நிலை அறிவிக்கப்பட்டு கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் துரிதப்படுத்த வேண்டும் எனவும் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
யாழ்.போதனா வைத்தியசாலை, தெல்லிப்பழை, பருத்தித்துறை, ஊர்காவற்றுறை ஆதார வைத்தியசாலைகள் மற்றும் பிரதேச வைத்தியசாலைகளில் காய்ச்சலால் பீடிக்கப்பட்ட நோயாளர்கள் நிரம்பி வழிகின்றனர். விடுதிகளில் இடம் இல்லாமையில் விடுதிக்கு வெளியே, நுழைவாயில்களில் பாய்களை விரித்து நோயாளர்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
டெங்கு நோய் காரணமாக இதுவரை இரு மரணங்களே இடம்பெற்றதாகக் கூறப்படுகின்ற போதிலும், நிமோனியா போன்று காய்ச்சலுடன் தொடர்புடைய நோய்களால் பலர் உயிரிழந்திருக்கின்றனர். 9 வயதுப் பிள்ளை ஒன்றும் இளம் தாய் ஒருவரும் டெங்கு நோயினால் உயிரிழந்துள்ளனர். இந்த மரணங்களின் எண்ணிக்கை அடுத்துவரும் நாள்களில் மேலும் உயரலாம் என கவலை வெளியிடப்பட்டுள்ளது.
நிலைமை இவ்வாறிருக்கையில், யாழ்.போதனா வைத்தியசாலையில் விடுதிகளுக்கு வைத்தியர்களைப் பங்கீடு செய்வதற்கு வைத்தியசாலைப் பணிப்பாளர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வழமைபோன்று வைத்தியசாலை விடுதிகளில் தங்கிநின்று பணியாற்றும் மருத்துவர்களே பெரும் கஷ்டத்தின் மத்தியில் நோயாளர்களைக் கவனித்துவருகின்றனர். ஏனையோர், சில மணிநேரம் கடமையாற்றிவிட்டுச் செல்கின்றனர் எனவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
எனினும், யாழ்.மாவட்டத்திலுள்ள சுகாதார வைத்திய அதிகாரிகள் இவ்விடயத்தில் காத்திரமான பங்களிப்பை வழங்கிவருகின்றனர். நாளாந்தம் அவர்கள் பிரதேச மட்டங்களிலும் யாழ்.மாநகர சபை எல்லைக்குட்பட்ட பிரதேசங்களிலும் தீவிர டெங்கு கட்டுப்பாட்டு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
யாழ்.மாவட்டத்தில் டெங்கு நோய் அதிகரித்துள்ள நிலையில், இதைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் பணிக்கு ஒத்துழைப்பு வழங்க முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டங்களில் இருந்து சுகாதாரப் பிரிவினர் வருகைதந்திருக்கின்றனர்.
ஆனால், யாழ்.மாநகர சபை எல்லைக்குட்பட்ட பொது இடங்களிலும் வீடுகளிலும் டெங்கு நுளம்பு பெருகுவதைக் கட்டுப்படுத்துவதற்கான பொறிமுறை பின்பற்றப்படவில்லை. இதேபோன்று ஏனைய இடங்களிலும் நகர சபைகள், பிரதேச சபைகள் மற்றும் பொதுமக்களின் ஒத்துழைப்புகள் போதுமானதாக இல்லை எனவும் டெங்கு கட்டுப்பாட்டில் ஈடுபட்டுள்ளவர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
மேலும், பிரதேச செயலகங்கள் உள்ளிட்ட அரச திணைக்களங்களில் பணியாற்றும் உத்தியோகத்தர்களின் ஒத்துழைப்பு கிடைக்கவில்லை எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
எனவே, யாழ். மாவட்டத்தில் டெங்கு நோய் தீவிரத்தன்மை அறிவிக்கப்பட்டு, மாநகர சபை, நகர, பிரதேச சபைகள், அரச உத்தியோகத்தர்கள் அனைவரும் விசேடமாக டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கைக்கு களமிறக்கப்பட வேண்டும் எனக் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
5 hours ago
6 hours ago