2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

வேலை வாங்கி தருவதாகக் கூறி நூதன மோசடி

Princiya Dixci   / 2016 ஓகஸ்ட் 25 , மு.ப. 04:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

யாழ்ப்பாணம், கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த இளைஞர்களுக்கும் யுவதிகளுக்கும் வேலைவாய்ப்புப் பெற்றுத் தருவதாகக் கூறி, மர்ம நபர் ஒருவர் நூதனமான முறையில் பண மோசடியில் ஈடுபட்டு வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த மர்ம நபரின் மோசடி வலையில் சிக்கி, யாழ்ப்பாணத்தையும் கிளிநொச்சியையும் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் ஏமாற்றப்பட்டுள்ளதாகத் தெரிய வருகின்றது.

பாதிக்கப்பட்டவர்கள், பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்ய தயக்கம் காட்டி வருவதனால், குறித்த மர்ம நபர் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்க முடியாத நிலை காணப்படுவதாக பொலிஸார் கூறுகின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் தெரிவிக்கையில்,  'எனது  அலைபேசி இலக்கத்துக்குத் தொடர்பு கொண்ட மர்ம நபர் ஒருவர், யாழில் புதிதாக திறக்கப்பட்ட வங்கியில் வேலைவாய்ப்பு இருப்பதாகத் தெரிவித்து, எனது சுயவிவரக் கோவையை அனுப்புமாறு, மின்னஞ்சல் முகவரியை அனுப்பி வைத்தார்.

அவர் அனுப்பிய மின்னஞ்சல் முகவரி, அந்த வங்கியின் பெயரில் இருந்தமையால் அதனை நம்பி, எனது சுயவிவரக் கோவையை அனுப்பி வைத்தேன்

குறித்த மின்னஞ்சல் முகவரிக்கு சுயவிவரக் கோவை அனுப்பிய சில நாட்களில் என்னுடன்  தொடர்பு கொண்ட  நபர், 'உங்களுக்கு வேலை கிடைத்து விட்டது. உங்கள் நியமனக் கடிதத்தைப் பெற வேண்டுமாயின், இந்த வங்கிக் கணக்கு இலக்கத்துக்கு, 25 ஆயிரம் ரூபாய் பணத்தை வைப்பிலிடுங்கள்' எனக் கூறி, வங்கிக் கணக்கு இலக்கத்தை தந்தார்.

நானும், அவர் தந்த வங்கி கணக்கு இலக்கத்துக்கு 25 ஆயிரம் ரூபாயை வைப்பிலிட்டேன். அதன் பின்னர், அந்தத் அலைபேசி இலக்கம் செயற்படவில்லை.

அதன் பின்னர், 'குறித்த வங்கியின் முகாமையாளரைத் தொடர்புகொண்டு கேட்ட போது, அதற்கும் தமக்கும் எந்த தொடர்பும் இல்லை. இது தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்து சட்ட நடவடிக்கை எடுங்கள்' என்று கூறினார்.

25 ஆயிரம் ரூபாய் பணத்துக்காக, பொலிஸ் நிலையம், நீதிமன்றம் என்று அலைந்து திரிய விரும்பாததால், பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யவில்லை' என தெரிவித்தார்.

பொலிஸ் - நீதிமன்றம் என்று செல்வதன் காரணமாக, வழக்கு விசாரணைக்கு அதிக பணம் செலவழியும் என்பதால், பாதிக்கப்பட்டவர்கள் அது குறித்து முறைப்பாடு செய்ய விரும்புவதில்லை என்று கூறப்படுகின்றது.

எனினும், இது குறித்து பாதிக்கப்பட்டவர்கள் முறையிடும் போது, நடவடிக்கை எடுக்க முடியும் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X