2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

வடமாகாணப் பாடசாலைகள் காலை 7.30 மணிக்கு ஆரம்பம்

Gavitha   / 2016 ஒக்டோபர் 21 , மு.ப. 06:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

குணசேகரன் சுரேன்

வடமாகாணத்திலுள்ள பாடசாலைகள் எதிர்வரும் 2017ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல், காலை 7.30 மணிக்கு ஆரம்பமாகி பிற்பகல் 1.30 மணிக்கு முடிவடைவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ஆர்.இரவீந்திரன் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

'வடமாகாண கல்வி அமைச்சர் த.குருகுலராஜாவுடன் கலந்துரையாடி, இதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவித்தல் அனைத்துப் பாடசாலைகளுக்கும் எதிர்வரும் வாரத்தில் சுற்றுநிரூபத்தின் வழியாக அறிவிக்கப்படும்.

காலையில் மாணவர்கள் மிகவும் உகந்த சூழ்நிலையில் கல்விச் செயற்பாடுகளை ஆரம்பிப்பதையும், மாணவர்களை அதிக நேரம் பாடசாலையில் வைத்திருந்து, அவர்களின் இணைப்பாட விதான செயற்பாடுகளை ஊக்குவிக்கும் வகையிலும் இந்தச் செயற்பாடு செய்யப்படவுள்ளது' என்று அவர் தெரிவித்தார்.

'பாடசாலை நேரத்துக்கு ஆரம்பிப்பதனால், அதற்கேற்ற வகையில் போக்குவரத்து வசதிகள் (பஸ்களின் நேரங்களில் மாற்றம் செய்வது) செய்வது தொடர்பில் போக்குவரத்து அமைச்சுடனும் கலந்துரையாடி முடிவெடுக்கப்பட்டுள்ளது.

வவுனியா மாவட்ட பாடசாலைகளில் இது ஏற்கெனவே நடைமுறையில் உள்ளது. வடமாகாணத்திலுள்ள, அனைத்து மாகாண மற்றும் தேசிய பாடசாலைகளில் இந்த நடைமுறை எதிர்வரும் ஜனவரி மாதம் தொடக்கம் அமுல்ப்படுத்தப்படும்' என்றார்.

இவ்வளவு காலமும், வடமாகாண பாடசாலைகள் வழமையாக 8 மணிக்கு ஆரம்பமாகி 2 மணிக்கு முடிவடைந்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X