2025 ஓகஸ்ட் 28, வியாழக்கிழமை

வடமாகாணசபையின் தீர்மானம் ஆணையாளரிடம் நேரில் வழங்கப்பட்டுள்ளது

Editorial   / 2018 மார்ச் 15 , மு.ப. 06:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எஸ்.நிதர்ஷன்

இலங்கை அரசாங்கத்தை சர்வதேச நீதி பொறிமுறைக்கு உட்படுத்துமாறுகோரி வடமாகாணசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரிடம் நேரில் வழங்கப்பட்டுள்ளது. அத்தீர்மானம், மனித உரிமைகள் ஆணையாளரின் மார்ச் 26ஆம் திகதிய  அறிக்கையில் செல்வாக்குச் செலுத்தும் என வடமாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

யாழ்.ஊடக அமையத்தில் நேற்று (14) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கை அரசாங்கத்துக்கு வழங்கப்பட்ட 2 வருட கால அவகாசத்துக்குள் நம்பிக்கை தரும் வகையில் இலங்கை அரசாங்கம் எதையும் செய்திருக்கவில்லை.

இந்நிலையில் இலங்கை அரசாங்கத்தை சர்வதேச நீதி பொறிமுறைக்கு உட்படுத்துமாறு கோரி வடமாகாண சபையில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானம் மின்னஞ்சல் மற்றும் தபால் ஊடாக ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதன் ஒரு பிரதியை கடந்த 9ஆம் திகதி ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளருக்கு நேரில் வழங்கியுள்ளேன்.

வடமாகாண சபையின் தீர்மானத்தை வழங்கும்போது, ஆணையாளருடன் ஒரு நிமிடம் பேசுவதுக்கு சந்தர்ப்பம் கிடைத்திருந்தது. அப்போது இலங்கை அரசும் இணங்கி நிறைவேற்றிய ஐ.நா தீர்மானத்தில் இலங்கை அரசு இணங்கியிருந்த 36 நிபந்தனைகளில் ஒன்றான மீள நிகழாமை என்ற நிபந்தனை அப்பட்டமாக மீறப்படுகின்றது. அதற்கு கண்டியிலும், அம்பாறையிலும் இஸ்லாமிய மக்கள் மீது இடம்பெற்ற வன் செயல்களை சுட்டிக்காட்டியிருந்தேன்.

அதனடிப்படையில் சிறுபான்மை இனங்கள் மீது இலங்கை அரசாங்கம் தொடர்ச்சியான வன்செயல்களை கட்டவிழ்த்து வருகின்றது என சுட்டிக்காட்டியிருக்கிறேன். அதேபோல் 9ஆம் திகதி காலை பொதுச்சபை கூட்டத்தில் பேசுவதுக்கு ஒரு நிமிடமும் 30 செக்கன்களும் வழங்கப்பட்டது. அப்போது இலங்கை அரசாங்கம் தாமும் இணங்கி நிறைவேற்றிய தீர்மானத்தை நடைமுறைப்படுத்த மாட்டோம் என கூறிவருகின்றது. குறிப்பாக ஜனாதிபதி, பிரதமர் மற்றும் சிரேஷ்ட அமைச்சர்கள் வெளிப்படையாக அதனை கூறிவருகின்றார்கள் என்பதை சுட்டிக்காட்டியிருக்கிறேன்.

எனவே இலங்கை அரசை ஒரு சர்வதேச நீதி பொறிமுறைக்கு உட்படுத்துமாறும், ரோம் உடன்படிக்கையில் கைச்சாத்திட அழுத்தம் கொடுக்க வேண்டும் எனவும் கூறியுள்ளேன்.

மேலும் வடமாகாண சபையின் தீர்மானம் வட மாகாணத்தில் வாழும் 11 இலட்சம் மக்களுடைய நிலைப்பாடாக உள்ளது. அதனடிப்படையில் 26ஆம் திகதி ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் இலங்கை தொடர்பாக சமர்ப்பிக்கவுள்ள அறிக்கையில் வடமாகாண சபையின் தீர்மானம் பெரிதும் தாக்கம் செலுத்தும் என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .