2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

வரவு- செலவுத் திட்ட ஒதுக்கிட்டில் அனர்த்துக்கு முகங்கொடுத்தவர்களுக்கும் இடம்வேண்டும்

Administrator   / 2016 செப்டெம்பர் 24 , மு.ப. 05:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சண்முகம் தவசீலன்

 வட மாகாணத்தில் இடம்பெறும் அனர்த்தங்களுக்கு நிதியுதவிகளை வழங்குவது தொடர்பில் அனர்த்த முகாமைத்துவ அமைச்சு கவனம் செலுத்துவதில்லை என வடமாகாண சபை பிரதி அவைத் தலைவர் அன்ரனி ஜெகநாதன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

அனர்த்த முகாமைத்துவ அமைச்சு, தென் பகுதிக்கே அனைத்து நிதி உதவிகளையும் வழங்குவதாகக் குறிப்பிட்டவர், வட மாகாண சபைக்கென தனியான நிதியம் ஒன்று தேவை என்றும் வலியுறுத்தியுள்ளார்.

வடமாகாண சபையின் 60 ஆவது அமர்வு நேற்று வியாழக்கிழமை(21) இடம்பெற்ற போது, கடந்த வெள்ளிக்கிழமை இரவு கிளிநொச்சி சந்தைக் கட்டடத் தொகுதியில் ஏற்பட்ட தீ விபத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதியுதவி வழங்குவது தொடர்பிலான பிரேரணை நிறைவேற்றப்பட்டது. இதன்போது உரையாற்றுகையிலே வடமாகாண பிரதி அவைத் தலைவர் அன்ரனி ஜெகநாதன் இந்த தகவலை குறிப்பிட்டுள்ளார்.

வட மாகாணத்தில் ஏற்படும் திடீர் அனர்த்தம் மற்றும் இயற்கை அழிவின் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு எதிர்வரும் வரவு-செலவுத்திட்டத்தில் சிறுதொகை நிதி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், அனர்த்த முகாமைத்துவ அமைச்சு தென் பகுதியில் அனைத்து நிதியுதவிகளையும் வழங்குகின்றது. வட மாகாணமும் இலங்கைக்குள் தான் இருக்கின்றது. ஆனால், தென்பகுதிக்கு நிதியுதவிகளை வழங்குகின்ற அனர்த்த முகாமைத்துவ அமைச்சு, வட பகுதிக்கு நிதியுதவிகளை வழங்க மறுக்கின்றது.
கடந்த 2, 3 வருடங்களுக்கு முன்னர் முல்லைத்தீவு, வடமராட்சி கிழக்கு போன்ற இடங்கள் புயலினால் பாதிக்கப்பட்டன. இதில் முல்லைத்தீவில் 10 வள்ளங்கள் மாத்திரமே முழுமையாக அழிவடைந்தன.ஆனால், வடமாகாண முதலமைச்சருக்கு 50 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக பட்டியல் கொடுத்துள்ளார்கள். ஆகவே, உண்மையான அழிவினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கிடைக்க வேண்டிய நஷ்ட ஈடு சிலரின் செயற்பாடுகளினால் கிடைக்காமல் போகின்றது.

கிளிநொச்சி வர்த்தக கடைகள் எரிந்ததை கண்ணால் பார்க்கின்றோம். உண்மையில் 50 பேருடைய பெயர் விபரங்களே அனுப்பி வைத்திருக்கின்றார்கள். உண்மையில் பாதிக்கப்பட்டவர்கள் 10 க்கும் உட்பட்டவர்களே.
இவ்வாறு பாதிக்கப்பட்டவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபா வழங்குவதற்கு தீர்மானித்த நிலையில், தீடீரென பாதிக்கப்பட்டவர்கள் பட்டியலில் 54 பேருடைய பெயர்களாக அதிகரிக்கப்பட்டது.

உண்மையாகப் பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்டஈடு வழங்க வேண்டும் எனக் குறிப்பிட்டவர், எதிர்வரும் வரவு-செலவுத்திட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறுதொகை நிதியாவது ஒதுக்க வேண்டும் என்றும் வடமாகாண பிரதி அவைத் தலைவர் அன்ரனி ஜெகநாதன் வலியுறுத்தியுள்ளார்.  

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X