2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை

‘வேகத்தை குறைத்து விவேகமாகச் செயற்படுங்கள்’

Editorial   / 2020 ஓகஸ்ட் 20 , பி.ப. 06:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

-என்.ராஜ்

வேகத்தை குறைத்து, விவேகமாகச் செயற்படுவதன் மூலமே, யாழ்ப்பாணம் மாவட்டத்தில் அதிகரித்துச் செல்லும் வீதி விபத்துகளைக் குறைக்க முடியுமென, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் சி. யமுனாநந்தா, இன்று (20) தெரிவித்தார்

இது தொடர்பில் தொடர்ந்துரைத்த அவர், கொரோனா வைரஸ் தாக்கத்தின்  பின்னர், போக்குவரத்து முடக்கங்கள் காணப்பட்டதன்  காரணமாக, விபத்துகள் குறைந்து காணப்பட்டனவெனவும் இலங்கையிலேயே வீதி விபத்துகளால் இறப்பு ஏற்படும் வாய்ப்புகள் இல்லை என்ற நிலை இருந்ததாகவும் கூறினார். 

ஆனால், 6 மாதங்களுக்குப் பின்னர் வீதி விபத்துகளின் எண்ணிக்கை அதிகரித்துக் காணப்படுவதாகத் தெரிவித்த அவர்,  கடந்த மாதம் மாத்திரம்  யாழ். போதனா வைத்தியசாலையில் சுமார் 180 பேர் வீதி விபத்துகளால் காயப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனரெனவும் சிலர் உயிரிழந்துள்ளரெனவும் சுட்டிக்காட்டினார்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் விபத்து பிரிவை எடுத்துக்கொண்டால், விபத்து பிரிவில் 70 சதவீதமானவர்கள் வீதி விபத்துகளால் காயமடைந்து, நிரந்தர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டவர்களாக காணப்படுகின்றார்களெனவும், யமுனாநந்தா கூறினார். 

குறிப்பாக மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் வீதி விபத்துககுள்ளாகும் தன்மை அதிகமாக காணப்படுவதாகத் தெரிவித்த அவர்,  யாழ். மாவட்ட நகரத்தை அண்டிய பகுதிகளில், வேகத்தின் காரணமாக வீதி விபத்துகள் ஏற்படுகின்றனவெனவும் இலுப்பையடி சந்தி, நாவலர் வீதி போன்ற பகுதிகளில் சனநெரிசல் அதிகமாகக் காணப்படுவதன் காரணமாக இந்த வீதி விபத்துகள் ஏற்படுவதற்கு காரணமாக அமைகின்றனவெனவும் கூறினார். 

அத்துடன்,  கனரக வாகனங்கள் பாவனையை நகர வீதிகளில் மட்டுப்படுத்தினால் இந்த விபத்துகளை குறைக்கலாமெனத் தெரிவித்த அவர், கனரக வாகனங்கள் மிகவும் வேகமாக பயணிப்பதும் விபத்துகளுக்கு காரணமாக அமைவதாகவும் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X