2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

ஹிலாரிக்காக தேங்காய் உடைக்கிறார் சிவாஜிலிங்கம்

Princiya Dixci   / 2016 நவம்பர் 02 , மு.ப. 03:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதியாக, ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளின்டன் தெரிவாக வேண்டுமெனப் பிரார்த்திக்கு முகமாக, 1,008 தேங்காய்களை உடைத்துப் பிரார்த்தனை செய்யவுள்ளதாக, வடமாகாணசபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.  

யாழ். ஊடக அமையத்தில் நேற்றுச் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடகச் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் இவ்விடயத்தை வெளிப்படுத்தினார்.  

இதன்படி, இன்று (02) மாலை 5 மணியளவில், நல்லூர் கந்தசுவாமி கோவில் முன்றலில், 1008 தேங்காய்களை உடைத்து விசேட வழிபாடு செய்யவுள்ளதாகத் தெரிவித்த சிவாஜிலிங்கம், யாழ். மரியன்னை பேராலயத்தில் மெழுகுவர்த்தி ஏற்றியும் பிரார்த்தனை செய்யவுள்ளதாகக் குறிப்பிட்டார்.  

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதி யுத்தத்தில், இலங்கை அரசாங்கத்துக்கே ஐக்கிய அமெரிக்காவின் ஆதரவு காணப்பட்ட நிலையில், ஹிலாரி கிளின்டனுக்காகப் பிரார்த்திப்பது குறித்துக் கேள்வியெழுப்பப்பட்ட போது, யுத்தகாலத்தில் அவ்வாறிருந்தாலும், இலங்கைக்கெதிராக ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் முன்கொண்டுவரப்பட்ட தீர்மானங்களில், ஹிலாரி கிளின்டன், முன்னின்று செயற்பட்டார் என்பதை, சிவாஜிலிங்கம் சுட்டிக்காட்டினார்.  

அத்தோடு, ஹிலாரி கிளின்டன் ஜனாதிபதியாகத் தெரிவானால், அவர் பதவியேற்கும் அன்றே, 108 குடும்பங்களைப் பொறுப்பேற்று, அவர்களுக்கான முழுமையான வாழ்வாதார உதவிகளை வழங்குவதற்கு, ஐக்கிய அமெரிக்காவிலுள்ள ஹிலாரிக்கான தமிழர்கள் அமைப்பு மூலம் ஏற்பாடுகளைச் செய்யவுள்ளதாகவும் சிவாஜிலிங்கம் குறிப்பிட்டார்.   


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X