2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை

மயானபூமி அமைக்கக் கோரி ஆர்ப்பாட்டம்

Suganthini Ratnam   / 2012 மார்ச் 30 , மு.ப. 03:54 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எஸ்.எம்.மும்தாஜ்)

புத்தளம் மாவட்ட மாராவில முதுகட்டு பிரதேசவாசிகள் தமது பிரதேசத்திற்கு மயானபூமியொன்றை அமைத்துத் தருமாறு கோரி  நாத்தாண்டி பிரதேசசபையின் முன்பாக நேற்று வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில்  ஈடுபட்டனர்.

நாத்தாண்டி பிரதேசசபையின் மாதாந்தக் கூட்டம் தலைவர் நிலந்த பெர்னாண்டோ தலைமையில் நாத்தாண்டி எல்பட் பீரிஸ் மண்டபத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்றுக்கொண்டிருந்தபோது, அங்கு வந்த முதுகட்டு பிரதேசவாசிகள் பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளைத் தாங்கியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து, பிரதேசசபையில் கருத்துத் தெரிவித்த பிரதேசசபைத் தலைவர் மயானபூமி பற்றிய நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தினார்.

முதுகட்டு கனிஷ்ட வித்தியாலயத்திற்கு அருகிலுள்ள சுமார் 120 பேர்ச் காணியை சிலாபம் மறைமாவட்ட கத்தோலிக்க ஆயர் விலைக்கு வாங்கியதாகவும் அதில் சுமார் 30 பேர்ச் காணியை மயானபூமிக்காகவும் மிகுதி 90 பேர்ச் காணியை விளையாட்டு மைதானம் அமைக்கவும் சிலாபம் ஆயர் விருப்பம் தெரிவித்திருப்பதாக பிரதேசசபைத் தலைவர் தெரிவித்தார்.

இதற்கு சிலர் அவ்விடத்தில் மயானபூமி தேவையில்லையெனத் தெரிவித்துள்ளனர். இருப்பினும் அங்கு மயானபூமியை அமைப்பதே  பெரும்பான்மையானோரின் விருப்பமெனவும் அவர் தெரிவித்தார்.

இந்த விடயம் தொடர்பில் பிரதேசசபையில் பின்னர் ஆளும் கட்சி, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கருத்துக்களைத் தெரிவித்தனர். இதனையடுத்து, மயானபூமி தேவையென்ற பிரிவினரினதும் தேவையில்லையென்ற பிரிவினரினதும் கருத்துக்கள் பிரதேசசபையில் முன்வைக்கப்பட்டன.

இந்த விடயம் தொடர்பில்  இரு தரப்புக்களையும் சேர்ந்த பிரதிநிதிகள்,  பிரதேசசபை பிரதிநிதிகள் ஆகியோர் சிலாபம் மறைவாட்ட ஆயருடன் கலந்துரையாடிய பின்னர் விரைவில் இறுதி முடிவொன்றை  எடுப்பதென்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X