2025 டிசெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

வடமத்திய மாகாண முன்னாள் முதலமைச்சருக்கு அபராதம்

Editorial   / 2018 ஜூன் 28 , பி.ப. 04:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

முறையற்ற இடமாற்றத்தை வழங்கி, பாடசாலை அதிபரொருவரான கருணாரத்ன பண்டார என்பவரின் அடிப்படை உரிமையைப் பறித்தாரென்ற குற்றத்துக்காக, பாதிக்கப்பட்ட அதிபருக்கு இரண்டரை இலட்சம் ரூபாய் அபராதத்தைச் செலுத்துமாறு, வடமத்திய மாகாண முன்னாள் முதலமைச்சர் பேஷல ஜயரத்னவுக்கு, உயர் நீதிமன்றம்  இன்று (28) உத்தரவிட்டது.

இந்த அபராதத் தொகையை, தனது சொந்தப் பணத்திலிருந்து செலுத்த வேண்டுமென்றும் பணித்த நீதிமன்றம், அதற்கு மேலதிகமாக, அரச தரப்பிலிருந்தும் குறித்த அதிபருக்கு, 50 ஆயிரம் ரூபாய் அபராதம் செலுத்தப்பட வேண்டுமென்றும் உத்தரவிட்டது.

அத்துடன், குறித்த அதிபர், இடமாற்றத்துக்கு முன்னர் பணியாற்றிய ​பாடசாலைக்கே மீண்டும் பணியில் அமர்த்தப்பட வேண்டுமென்றும் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.   அநுராதபுரம் - நிவன்தகச்சேதிய மகா வித்தியாலய அதிபரான கருணாரத்ன பண்டாரவின் அழைப்பின் பேரில்,குறித்த பாடசாலையில் இடம்பெற்ற நிகழ்வொன்றுக்காகச் சென்றிருந்த முன்னாள் முதலமைச்சரை, வெற்றிலை கொடுத்து வரவேற்கவில்லையெனத் தெரிவித்து, மேற்படி அதிபரைத் தகாத வார்த்தைகளால் பேசியுள்ள பேஷல ஜயரத்ன, அவ்வதிபருக்கு அச்சுறுத்தல் விடுத்ததோடு, முறையற்ற இடமாற்றத்தையும் வழங்கியிருந்தார்.

இது தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனு, உயர்நீதிமன்ற நீதியரசர்களான ஈவா வனசுந்தர, சிசிர டீ அப்ரூ மற்றும் நலின் பெரேரா என்ற மூவரடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில், இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது, முன்னாள் முதலமைச்சரின் செயற்பாடுகளுக்குக் கடும் கண்டனம் தெரிவித்த நீதியரசர் குழாம், மேற்படி உத்தரவுகளைப் பிறப்பித்ததோடு, இந்த வழக்கை முடிவுறுத்தியது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .