Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
அனுதினன் சுதந்திரநாதன் / 2019 ஓகஸ்ட் 20 , மு.ப. 10:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையானது, தொடக்கநிலை வணிகங்கள் என அழைக்கப்படும் புத்தாக்க, துணிகர வணிக முயற்சிகளின் இடமாக, போருக்குப் பிந்திய காலத்தில் இனங்காணப்பட்டபோதிலும், 2015ஆம் ஆண்டுக்குப்பின்னதான அரசியல் சூழ்நிலைகளே, அத்தகைய வணிகங்களுக்கு ஏதுவான நிலையை ஏற்படுத்திக் கொடுத்திருந்தது.
அதிலும், இலங்கை தொடர்பில் வெளிநாட்டவர்களின் முதலீடுகளும் ஒப்பீட்டளவில் அத்தகைய காலப்பகுதியிலேயே நாட்டுக்குள் வரத் தொடங்கியிருந்தது. இதன்பிரகாரம், இலங்கையில் தொடக்கநிலை வணிகங்கள் தொடர்பிலும் அவ்வாறான வணிகங்களில் முதலீடு செய்வதற்கான நிகழ்வுகள் தொடர்பிலும் பல்வேறு முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டதுடன், அவை வெற்றிகரமாக தொடர்ந்தவண்ணமுள்ளன.
இலங்கையின் தொழிற்றுறையில், எதிர்காலத்தில் மிகப்பெரும் தாக்கத்தையும் தொழில் வாய்ப்புக்களையும் உருவாக்கும் வல்லமை கொண்டவையாக, இத்தகைய தொடக்கநிலை வணிகங்கள் இனங்காணப்பட்டுள்ளது. அத்துடன், இத்தகைய வணிகங்களை முன்னெடுத்துச் செல்ல, இலங்கை அரசாங்கத்தின் சார்பில், ஒவ்வொரு வருட பாதீட்டிலும் பல்வேறு வகையான சலுகைகள், கடன் திட்டங்களும் அறிமுகம் செய்யப்பட்டு வந்திருக்கின்றன.
இவ்வாறாக, பல்வேறு நலன்களை வழங்கி, அனைத்து தரப்பினராலும் ஊக்கம் வழங்கி வளர்த்தெடுக்கப்படும் இலங்கையின் தொடக்கநிலை வணிகத்துறையானது எவ்வாறு இருக்கிறது என்பதனையும், அதனை மேலும் விரிவாக்கம் செய்து பொருளாதாரத்தின் மற்றுமொரு பலமான சக்தியாக மாற்றம் செய்வதற்கு எவ்வகையான செயல்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் என்பதனையும், நாம் அறிந்திருக்க வேண்டியது அவசியமாகிறது.
தொடக்கநிலை வணிக முயற்சியாளர்கள் யார்?
இலங்கையில் புதிதாக தொடங்கப்படும் வணிகங்களின் உரிமையாளர்கள் யார்? அவர்களின் வயதெல்லை என்ன ? அவர்களின் பின்னணி என்ன ? என்பதனை அறிந்துகொள்ளுவதில் பலரும் ஆர்வம் காட்டுகின்றார்கள். இந்த தகவல்கள் அனைத்தையும் SLASSCOM நிறுவகத்தின் தொடக்கநிலை வணிகங்களின் 2019ம் ஆண்டு தொடர்பிலான அறிக்கையில் அறிக்கையிட்டு இருக்கிறார்கள்.
இதன்பிரகாரம், இலங்கையின் தொடக்கநிலை வணிகத்தின் உரிமையாளர்கள் பெரும்பாலும் 25-29 வயதுக்குட்பட்டவர்களாக இருக்கிறார்கள் என இனம் காணப்பட்டுள்ளது. கடந்த 2016ம் ஆண்டில் இதே ஆய்வு மேற்கொள்ளப்பட்டபோது 20-24 வயதுக்குட்பட்டவர்களில்தான் அதீத தொடக்கநிலை உரிமையாளர்கள் இருப்பது அறியப்பட்டிருந்தது.
ஆனாலும், காலப்போக்கில் இந்த மாற்றம் நிகழ்ந்திருக்கிறது. இதற்கு, அரச மற்றும் தனியார்கள் பட்டதாரிகள் மற்றும் படித்த இளைஞர்களுக்கு வழங்கிவரும் ஊக்குவிப்புக்களும், கடன் வசதிகளும் (ஏரம்புவ வட்டியற்ற கடன் திட்டம்) ஒரு காரணமாக அமைந்துள்ளது.
2019ம் ஆண்டின் ஆய்வுகளின் பிரகாரம், 73%மான தொடக்க நிலை வணிக உரிமையாளர்கள் இளங்கலை பட்டத்தை பெற்றவர்களாக இருக்கிறார்கள். இவர்களுக்கு அடுத்ததாக சுமார் 22%மானவர்கள் உயர்தர படிப்பினை பூர்த்தி செய்தவர்களாக இருக்கிறார்கள்.
இதன்மூலம், உயர்தர படிப்பினை முடித்த வேலையற்ற இளைய சமுதாயத்தினர் மாற்றுவழிமுறையினை நோக்கி நகர்வதினை இது எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது.
அவற்றுள் 40%மான தொடக்கநிலை வணிக உரிமையாளர்கள் கணனி சார்ந்த பட்டத்தினையோ, படிப்பினையோ பூர்த்தி செய்தவர்களாக உள்ளார்கள். தொடக்கநிலை வணிகங்களின் புத்தாக்க முயற்சிகள் பெரும்பாலும் இணையத்தை சார்ந்ததாக அமைந்துள்ளநிலையில், இந்த புள்ளிவிகிதமானது ஆச்சரியத்தை தருவதாக இல்லை. இதற்கு அடுத்ததாக, 31% மான உரிமையாளர்கள் வணிக முகாமைத்துவத்தில் தேர்ச்சி பெற்றவர்களாக இருக்கிறார்கள்.
பாலின அடிப்படையில் இலங்கையின் தொடக்கநிலை வணிகங்களையும், அதன் உரிமையாளர்களையும் ஆய்வுசெய்கின்றபோது, 87% மான வணிக உரிமையாளர்கள் ஆண்களாகவும், 13%மான வணிக உரிமையாளர்கள் பெண்களாகவும் இருக்கிறார்கள். 2016ம் ஆண்டுடன் ஒப்பிடுமிடத்து பெண் உரிமையாளர்களின் எண்ணிக்கையானது 4%த்திலிருந்து 13%மாக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
இதற்கு, கடந்தகாலங்களில் பெண்களை தலைமைத்துவ இடத்திற்கு கொண்டுவர கொழும்பு பங்குசந்தை வழங்கும் ஊக்கமளிப்பு, பெண்களுக்கான விஷேட சலுகை நிதியுதவிகள் மற்றும் வீட்டிலுள்ள பெண்கள் தமது சிறிய யுக்திகளையும் சமூக வலைத்தளங்கள் மூலமாக பணமாக மாற்றிக்கொள்ளும் சந்தர்ப்பம் என்பவை காரணமாக அமைந்திருந்தது.
இவற்றுக்கு மேலதிகமாக, 2016ம் ஆண்டில் மேற்படி ஆய்வினை மேற்கொள்ளுகின்றபோது 60%மான வணிக முயற்சிகள் கொழும்பை சார்ந்ததாக ஆரம்பிக்கப்பட்டதுடன், 40%மானவை வெளியிடங்களில் ஆரம்பிக்கப்பட்டிருந்தது.
ஆனால், 2019ஆம் ஆண்டில் இந்தநிலை தலைகீழாக மாற்றமடைந்துள்ளது. 60%மான வணிக முயற்சிகள் கொழும்புக்கு வெளியே ஆரம்பிக்கப்பட 40%மானவை மட்டுமே கொழும்பில் ஆரம்பிக்கப்பட்டு இருந்தது. இதற்கு மிக முக்கிய காரணம், கடந்த 2-3 வருடங்களில் கொழும்பு மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களில் ஏற்பட்டுள்ள வாழ்க்கைச் செலவீன அதிகரிப்பு அதனையொட்டிய ஊழியர் வேதன அதிகரிப்புமாகும்.
இதனால், பெரும்பாலான வணிகங்கள் கொழும்பைத் தவிர்த்து ஏனைய பகுதிகளுக்கு நகர காரணமாக அமைந்துள்ளது.
எதன் அடிப்படையில் ஆரம்பிக்கப்படுகிறது ?
இலங்கையில் 2018/19ம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட பெரும்பாலான தொடக்கநிலை வணிகங்கள் பின்வரும் அடிப்படை காரணிகளால் அல்லது தூண்டுதல் காரணிகளால் ஆரம்பிக்கப்பட்டவை ஆகும். 29%மானவர்கள் புத்தாக்க எண்ணக்கருவை கொண்டு வணிகத்தினை ஆரம்பித்தவர்களாக இருக்கிறார்கள். 23%மானவர்கள் மற்றுமொருவருக்கு கீழ் தொழிலாளியாக வேலைசெய்ய முடியாத காரணத்தாலும், சொந்த முயற்சியை மேற்கொள்ள வேண்டும் என்கிற அடிப்படையை காரணமாக கொண்டும் வணிகத்தினை ஆரம்பித்தவர்களாக இருக்கிறார்கள்.
அத்துடன், 19%மானவர்கள் எவ்வித கட்டுப்பாடுமின்றி தமது வருமான மூலத்தை அடிப்படையாகக்கொண்டு வணிகத்தினை ஆரம்பித்தவர்களாக இருக்கிறார்கள். அடுத்ததாக, 15%மானவர்கள் நிதியியல் தேவையை அடிப்படையாகக்கொண்டும், 15%மானவர்கள் தொழில் முயற்சியாண்மையில் வெற்றி பெற்றவர்களின் தூண்டுதல் காரணமாக வணிகத்தினை ஆரம்பித்தவர்களாக இருக்கிறார்கள்.
தொடக்கநிலை வணிகங்களின் நிலை என்ன ?
இலங்கையில் தொடக்கநிலை வணிகங்களின் பிரபல்யமானது 2015ம் ஆண்டுகளுக்கு பின்னதாகவே ஆரம்பித்திருந்தது. அந்தவகையில், சுமார் நான்கு ஆண்டுகளை தொட்டுள்ள தொடக்கநிலை வணிகங்களின் தற்போதைய நிலை என்ன ? அவை வெற்றிகரமாக இயங்கிக் கொண்டிருக்கின்றனவா ? இல்லையெனில் அவை மூடப்பட்டு விட்டனவா ? என்பதனை அறிந்து கொள்ளுவது, புதிதாக ஆரம்பித்துள்ள மற்றும் ஆரம்பிக்கவுள்ள வணிகங்களுக்கு அவசியமான ஒன்றாக இருக்கும்.
இலங்கையில் முன்னதாக ஆரம்பிக்கப்பட்ட தொடக்கநிலை வணிகங்களில் சுமார் 61% மான வணிகங்கள் தற்போதும் இயங்கிக் கொண்டிருக்கின்றன. இந்த விகிதமானது துணிகர வணிக முயற்சிகளின் தொடக்கத்துக்கு கிடைத்த வெற்றியானாலும், குறிப்பாக 39%மான வணிகங்கள் மூடப்பட்டோ, வெற்றிகரமாக இயங்க முடியாதநிலையில் தத்தளித்து கொண்டிருப்பதையோ கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியமாகிறது.
இலங்கையில் வெற்றிகரமாக இயங்கிக்கொண்டிருக்கும் தொடக்க நிலை வணிகங்களில் 55%மானவை தமது வணிகத்தினை விரிவாக்கம் செய்யும் நிலையிலோ அல்லது வருமானத்தை அதிகரிக்கும் முயற்சியிலோ உள்ளன. இவற்றுள் 29%மான வணிகங்கள் வருடத்துக்கு 10 மில்லியன் வருமானத்தை பெற்றுக்கொள்ளும் வளர்ச்சியடைந்து வருகின்ற நிலையிலுள்ள வணிகங்களாக இனம் காணப்பட்டுள்ளன.
40%மான தொடக்கநிலை வணிகங்கள்
வருடமொன்றுக்கு குறைந்தது ஒரு மில்லியன் ரூபா வருமானத்தை கொண்ட வணிகங்களாக இயங்கி வருகின்றன. இவை, மிகப்பெரும் இலாபத்தினை கொண்டிராதபோதும், வணிகத்தை கொண்டு நடாத்தக்கூடிய இயலுமையை இந்த வருமானத்தில் கொண்டிருக்கின்றன.
தற்போது, இலங்கையில் செயல்பட்டுக்கொண்டிருக்கும் தொடக்கநிலை வணிகங்களில் 36%மானவை ஒருவருடத்திற்குள் ஆரம்பிக்கப்பட்ட புதிய வணிகங்களாக உள்ளதுடன், 44%மான வணிகங்கள் 1-3 வருட அனுபவத்தினை கொண்ட வணிகங்களாக சந்தையில் நிலைத்து நிற்கின்றன. 8%மான வணிகங்களே சந்தையில் 5 வருடத்திற்கு மேல் நிலைத்து நிற்பதுடன், இலங்கை போன்ற தளம்பல் தன்மை கொண்ட சந்தையில் நிலைத்து நிற்கும் வணிகங்களாக இருக்கின்றன.
மேற்கூறியது போல, இலங்கையில் ஆரம்பிக்கப்படும் தொடக்கநிலை வணிகங்களில் 31%மானவை தோல்வியடைவதனை நாம் சாதாரணமாக கடந்து சென்றுவிட முடியாது. இந்த வணிகங்களின் தோல்வி பாடம்தான் நமது எதிர்கால தொடக்கநிலை வணிகங்களின் வெற்றிக்கான படிக்கற்களாக இருக்கப் போகிறது. அதனை நாம் மற்றுமொரு ஆக்கத்தில் விரிவாக பார்க்கலாம்.
2015ம் ஆண்டுக்கு பின்னதாக இலங்கையின் பொருளாதார வளர்ச்சியில் ஒரு முன்னேற்றநிலை காணப்படுகின்றபோதிலும், அரசியல்ரீதியாகவும், அதுசார்ந்த பொருளாதார ரீதியாகவும் நிலவுகின்ற பிரச்சினைகள் இலங்கையை அபிவிருத்தி பாதையில் கொண்டு செல்ல முட்டுக்கட்டையாக இருக்கின்றது.
இதற்கு மத்தியிலும், இலங்கையின் துணிகர தொழில் முயற்சியாளர்கள் இலங்கையின் எதிர்காலத்தை அடிப்படையாகக்கொண்டு தொடக்கநிலை வணிகங்களை ஆரம்பித்து அதனை வெற்றிகரமாக கொண்டு நடாத்தி செல்வது பாராட்டுக்குரியதே!
இந்த வணிகங்களின் போக்கில் 2016ஆம் ஆண்டுடன் ஒப்பிடுமிடத்து தற்போது மிகப்பெரும் வளர்ச்சி காணப்படுவதுடன், கடந்த மூன்று வருடங்களில் இவ்வாறு ஆரம்பிக்கப்பட்ட வணிகங்கள் பெயர் சொல்லுமளவுக்கு வளர்ந்து நிற்பதுடன், பொருளாதாரத்துக்கு உறுதுணையாகவும் மாறி நிற்கின்றன. இந்தநிலை மென்மேலும் மேம்பட இலங்கையின் அரசியல் சூழ்நிலை மற்றும் பொருளாதார நிலைமைகள் ஸ்திரமானதாக அமைந்திருப்பது அவசியமாகிறது.
44 minute ago
49 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
44 minute ago
49 minute ago
1 hours ago
1 hours ago