Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
அனுதினன் சுதந்திரநாதன் / 2018 ஜூலை 02 , மு.ப. 02:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை அரசாங்கத்தால் சிலகாலங்களுக்கு முன்பாக, அறிமுகம் செய்யப்பட்ட 2025ஐ அடிப்படையாகக்கொண்ட, பொருளாதார இலக்குகள் அடையப்படக்கூடியனவா? அல்லது அதற்கும் மேலான பொருளாதார சுமையைச் சுமக்கும், மோசமான நிலையை நாம், அடைந்துகொள்ள வேண்டியதாக இருக்குமா, என்கிற ஐயத்தை, அண்மையகாலப் பொருளாதார செயற்பாடுகள் ஏற்படுத்தி இருக்கின்றன.
தொடர்ச்சியாகப் பொருளாதாரம் தொடர்பான எதிர்வினைச் செய்திகள், இலங்கை அரசாங்கத்தின் பொருளாதார வளர்ச்சியையும் அதன் திட்டங்களையும் கேள்விக்கு உள்ளாக்கியுள்ளன என்பதே உண்மையாக இருக்கிறது.
இலங்கையில் புதிய அரசாங்கம் பதவிக்கு வந்தபோது, வழங்கப்படும் அனைத்து வாக்குறுதிகளும் 2020க்குள் நிறைவேற்றப்படும் என்கிற உறுதிமொழியுடனே பதவிக்கு வந்திருந்தது.
ஆனால், ஆட்சி மாற்றத்தின்போது, வழங்கப்பட்ட வாக்குறுதிகளில் பெரும்பாலானவை அங்கொன்றும், இங்கொன்றுமாகத் தொக்கியே நிற்கின்றன.
அதிலும் குறிப்பாக, பொருளாதாரம் சார் இலக்குகளை அடைவதென்பது, குதிரைக்கொம்பாக மாறியிருக்கிறது.இந்த நிலையில்தான் 2025ஆம் ஆண்டை அடிப்படையாகக்கொண்ட, புதிய திட்டவரைபுகள் அறிமுகம் செய்து வைக்கப்பட்டிருந்தது.
இது, இலங்கை அரசாங்கம் 2020ஆம் ஆண்டில் அடையவேண்டிய இலக்குகளை அடையாமல், மீளவும் காலதாமதம் செய்கிறதா, என்கிற கேள்வியையும் அல்லது 2025ஆம் ஆண்டை இலக்காகக்கொண்டு, புதிய திட்டங்களின் ஊடாக, அபிவிருத்தியை முன்னிறுத்துகிறதா, என்கிற கேள்வியை ஏற்படுத்தியிருந்தது.
2025ஆம் ஆண்டை அடிப்படையாகக் கொண்ட இலக்குகளின் முதன்மைக் குறிக்கோள், ‘இலங்கையை ஒரு செல்வந்த நாடாக மாற்றியமைப்பதன் மூலம், இந்து சமுத்திரத்தின் மய்யமாக, மீள உருவாக்குவதுடன், இதை அடிப்படையாகக்கொண்டு, அறிவுசார் ரீதியில் போட்டித்தன்மைமிக்க சமூக பொருளாதார சூழலை உருவாக்க வேண்டும்’ என்பதாகும். இந்தப் பரந்த குறிக்கோளினுள், வாக்குறுதியளிக்கப்பட்ட பல்வேறு சிறிய இலக்குகள், உள்ளடங்கி இருக்கின்றன.
இலக்குகள் எதனை நோக்கியதாக இருக்கின்றன?
2025ஆம் ஆண்டை நோக்கியதாக அரசாங்கத்தால் வெளியிடப்பட்டுள்ள இலக்குகள் குறித்த அறிவிப்புக் குறித்து, ‘சரியான திட்டமிடல்கள் இல்லாத, கவர்ச்சிகரமாக வாக்குறுதிகள்’ என்றே ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.
வெறுமனே, கவர்ச்சிகரமான தலைப்புகளுடன் வெளியாகியிருக்கும் இந்த இலக்கை அடைந்துக்கொள்ள, மிக நீண்டகாலம் இருக்கின்ற போதிலும், அதை அடைவதில் அரசாங்கத்தின் திட்டமிடல் என்பது, பூச்சிய நிலையிலேயே இருக்கிறது.
காரணம், நல்லாட்சி கூட்டணியானது, எப்போது முறிவடையும் என்கிற நிலையில், குறித்த இலக்கை, இரண்டு கட்சிகளும் ஒருசேர நிறைவேற்றுமா, நல்லாட்சி ஆட்சியில் தற்போது உள்ள குழறுபடிகளுக்குத் தீர்வு கண்டு, அடுத்த கட்டத்தை நோக்கி நகருமா, என்கிற பல்வேறு சந்தேகங்களின் வழியாக, இந்த இலக்குகள் சரிவரத் திட்டமிடப்படாமல், அரசியல் கவர்ச்சிக்காக வெளியிடப்பட்டு இருப்பதாகவே கணிப்பிடப்படுகிறது.
2025ஆம் ஆண்டில், அடையப்படக்கூடியன என்ற வகையில், பட்டியல்படுத்தப்பட்டுள்ள இலக்குகளில், வெளிநாட்டு நேரடி முதலீடு, ஏற்றுமதி வருமானம், சுற்றுலாத்துறை வருமானம், வேலைவாய்ப்புகளை உருவாக்குதல் என்பவை தொடர்பான இலக்குகள் அடையமுடியாத இலக்குகளாகவே உள்ளன.
2025ஆம் ஆண்டை நோக்கிய முக்கிய இலக்குகளில் ஒன்று, வெளிநாட்டு நேரடி முதலீடுகளைக் கணிசமான அளவில் அதிகரிப்பதாகும். பொதுவாகவே, ஒரு நாட்டின் வெளிநாட்டு நேரடி முதலீட்டை அதிகரிப்பதன் மூலமாக, ஏற்றுமதியை ஊக்குவிக்க முடிவதுடன், சென்மதி நிலுவையைச் சீர்படுத்தி, வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியும். இது பிரதான இலக்கை அடைவதன் மூலமாக, உப இலக்குகளை அடைவதற்கு சமனான வழிமுறையாகும்.
ஆனால், இலங்கையால் முன்வைக்கப்பட்டுள்ள வெளிநாட்டு நேரடி முதலீடுகள் தொடர்பான பிரதான இலக்கே நடைமுறைக்குச் சாத்தியமற்றதாக இருக்கிறது. இந்த இலக்குகளின் பிரகாரம், எதிர்வரும் 2020ஆம் ஆண்டுக்குள் வெளிநாட்டு நேரடி முதலீடு சுமார் ஐந்து பில்லியன் அமெரிக்க டொலர்களை எட்ட வேண்டும். இது எந்தவகையிலும் சாத்தியப்படக்கூடிய ஒன்றல்ல.
இலங்கையில் போர்முடிவுக்கு வந்த காலப்பகுதியான 2010-2014இலும், நல்லாட்சி அரசு ஆட்சிக்கு வந்த 2015-2016 வரையான காலப்பகுதியிலுமே, நம் நாட்டின் வெளிநாட்டு நேரடி முதலீட்டின் அளவு, சராசரியாக ஒரு பில்லியன் அமெரிக்க டொலராக இருந்திருக்கிறது.
ஆனால், கடந்த இரண்டு ஆண்டுகளில், வெளிநாடு நேரடி முதலீட்டின் அளவைச் சரியாகக் கணிப்பிடுவோமாயின் அது 700மில்லியன் அமெரிக்க டொலருக்கும் குறைவாகவே இருந்திருக்கிறது.
இந்தநிலையில், இலங்கை அரசாங்கம் மீதமாகவுள்ள மூன்று வருடங்களில் ஏதேனும் நிகழ்த்த முடியாத மாஜாயாலக் கொள்கையை நடைமுறைபடுத்தினாலொழிய இந்த இலக்கை அடைந்துகொள்ள முடியாது.
இலங்கை அரசின் திட்டமிடல் குழு, குறைந்தது 2020ம் ஆண்டில் 3 பில்லியன் அமெரிக்க டொலர்களை எதிர்பார்த்து அதன் திட்டங்களை வகுக்குமாயின், அது இன்றைய சூழலை அடிப்படையாகக்கொண்டு அடையப்படக் கூடியதும், நடைமுறைக்குச் சாத்தியமானதாகவும் இருக்கும் எனக் கூறமுடியும்.
ஏற்றுமதிகள்
இலங்கையின் ஏற்றுமதிகளில் சாதகமானநிலைமை தென்படும் சமயத்தில், 2025ஆம் ஆண்டுக்கான இலக்குகளில் ஏற்றுமதி தொடர்பிலும் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இதன் அடிப்படையில் தற்போது, சராசரியாக 10 பில்லியன் அமெரிக்க டொலருக்கு அண்மையாகவுள்ள ஏற்றுமதிகளை இரண்டு மடங்காக 20 பில்லியன் அமெரிக்க டொலர்களாக மாற்றவேண்டும் என இலக்கிடப்பட்டுள்ளது.
ஏற்றுமதி வருமானத்தை அதிகரிக்கும் திட்டம் என்பது மறைமுகமாக வெளிநாட்டு நேரடி முதலீடுகளை இலங்கைக்குள் கொண்டுவருகின்ற உத்தியாகும். இதற்கு ஏற்றுமதியில் பல்வகைமைத் தன்மையைப் பேணுதல் அவசியமாகும்.
காரணம், இலங்கையின் ஏற்றுமதித் துறையில் பெருமளவிலான வருமானம் விவசாயத்துறை சார்ந்த ஏற்றுமதி மூலமாகவே வருகின்றது. அதிலும், சில குறிப்பிட்ட உற்பத்திப் பொருட்களில்தான் இந்த ஏற்றுமதியும் தங்கியுள்ளது. எனவே, இரட்டிப்பு வருமானம் என்கிற திட்டமிடலை கொண்டுள்ள நிலையில், எதிர்காலத்துக்கும் சேர்த்து இந்தச் சிறிய ஏற்றுமதி வட்டத்துக்குள் தங்கியிருப்பது என்பது நடைமுறைக்கு ஒப்பானதல்ல.
எனவே, இலங்கை அரசு ஏற்றுமதியில் பல்வகைத்தன்மையை நடைமுறைக்குக் கொண்டுவருவது அவசியமாகிறது.
இலங்கையைப் பொறுத்தவரையில் தற்போதுள்ள குழப்பமான பொருளாதாரக் கொள்கைகளை வைத்துக்கொண்டு, முதலீட்டாளர்களைக் கவருதல் என்பது கடினமானதாகும்.
எனவே, திட்டமிடல்கள் மட்டுமின்றி, அவற்றை நடைமுறைப்படுத்துவது தொடர்பிலும் சிந்திக்கவேண்டியது அவசியமாகிறது. எனவே, 2025ஆம் ஆண்டுக்கான இலக்குகளை அடைய ஏற்றுமதி தொடர்பிலும், அரச இறைக் கொள்கைகள் தொடர்பிலும் நிறையவே மாற்றங்களைச் செய்யவேண்டியதாக இருக்கிறது.
சுற்றுலாத்துறை தொடர்பில் வகுக்கப்பட்ட இலக்குகளில், குறைந்தது 2020ஆம் ஆண்டில் சுற்றுலாத்துறை மூலமாக, 10 பில்லியன் அமெரிக்க டொலர்களை வருமானமாக நாட்டுக்குள் கொண்டுவருவது எனத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த இலக்கும் ஆய்வாளர்களின் கணக்குப்படி நடைமுறை சாத்தியமற்றதாகும்.
கடந்த காலத் தரவுகளை அடிப்படையாகக்கொண்டு, இலங்கையின் 2025ஆம் ஆண்டுக்கான இலக்கு திட்டமிடப்பட்டிருந்தாலும், நடைமுறை அதற்கு நேர்எதிராகவே இருக்கிறது எனலாம்.
2017ஆம் ஆண்டின் முதல் ஏழு மாதங்களிலும் இலங்கை அரசின் சுற்றுலாத்துறை மூலமான வருமானம் 2 பில்லியன் அமெரிக்க டொலர்கள் மாத்திரமே.
கடந்த இரண்டரை வருடங்களில் இலங்கைக்குள் வருகின்ற சுற்றுலா பயணிகளும், வருமானமும் அதிகரித்துள்ளபோதிலும், அந்தநிலை எதிர்காலத்திலும் தொடரும் என எதிர்பார்க்க முடியாது.
காரணம், எதிர்காலத்தில் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்படக்கூடும் என்பதற்கான அபாய சமிக்ஞைகள் தென்படத் தொடங்கிவிட்டன.
வர்த்தக சம்மேளனத்தின் அறிக்கைகளின் பிரகாரம், சுற்றுலா பயணிகளின் வருகை தொடர்பிலான கணிப்பீட்டில் குறைபாடுகள் உள்ளது எனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதுடன், சுற்றுலா பயணிகளுக்கான உபசரிப்பு வர்த்தகமும் (hospitality trade ) சிக்கலை எதிர்கொள்வதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், ஆசியாவின் ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுமிடத்து சுற்றுலா பயணிகளுக்கான சுற்றுலா விடுதிகளின் தரம் போதுமானதாகவில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தப் பிரச்சனைகளுக்கு தீர்வு காணாதபட்சத்தில் சுற்றுலா பயணிகளின் வருகையில் மட்டுமல்ல வருமானத்திலும் அதிகரிப்பை ஏற்படுத்த முடியாது.
2025ஆம் ஆண்டுக்காக பட்டியலிடப்பட்ட இலக்குகளில் மிக மோசமான நடைமுறைக்குச் சாத்தியமற்றதாக காணப்படும் இலக்கு இதுவாகும். தற்போது 4,000 அமெரிக்க டொலராகவுள்ள தனிநபர் தலாவருமானத்தை 2020க்குள் 5,000 அமெரிக்க டொலராக மாற்றியமைப்பதாகும்.
இது தற்போதைய தலாவருமானத்தின் 25% அதிகரிப்பாகவுள்ளது. வெறுமனே இன்னும் மூன்று ஆண்டுகளே 2020ம் ஆண்டுக்கு உள்ளநிலையில், தற்போதைய பொருளாதார வளர்ச்சியைப்போல, மூன்று மடங்கு பொருளாதார வளர்ச்சியை இலங்கை எட்டும்போது மட்டுமே, இந்த நிலையைத் தனிபர் வருமானத்தில் 2020இல் எட்ட முடியும்.
இன்றைய நிலையில், இலங்கைக்குத் தேவையானது உயர்பொருளாதார வளர்ச்சிக்கான தெளிவான, உறுதி வழங்கிய, நிலையான கொள்கைகளை நடைமுறைபடுத்துவதாகும்.
இதன்போது, பொருளாதார வளர்ச்சியை தூண்டக் கூடியவகையிலும், வளர்ச்சியை விரைவுபடுத்தக் கூடிய கொள்கைகளையும் அரசு நிர்ணயிக்க வேண்டியது அவசியமாகிறது.
இலங்கை அரசு, தான் உருவாக்கும் கொள்கைகள் மற்றும் திட்டங்கள் என்பவற்றைத் திறன்மிகு வகையில் நடைமுறைப்படுத்தாததன் விளைவாகப் பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டு இருக்கிறது.
எனவே, இந்த இலக்குகளை அடைய, ஸ்திரமான ஒருங்கிணைப்பும், கட்டுப்பாடுகளும் கொண்ட நடைமுறைபடுத்தல் அவசியம் என்பதனை இவ்வரசு உணர வேண்டும்.
26 minute ago
28 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
28 minute ago
2 hours ago
2 hours ago