2025 ஓகஸ்ட் 06, புதன்கிழமை

அபேக்‌ஷா வைத்தியசாலைக்கு நிதி சேகரிக்க Maya Family Fiesta

Editorial   / 2018 நவம்பர் 20 , மு.ப. 02:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

அபேக்‌ஷா வைத்தியசாலையில், வாழ்க்கைக்கும் மரணத்துக்கும் இடையில் போராடிக் கொண்டிருக்கும் நம் சகோதரர்களுக்காக நிதி சேகரிக்கும் நோக்கத்துடன், நவம்பர் மாதம் 23, 24, 25ஆம் திகதிகளில், மஹரகம நகர சபை மைதானத்தில், Maya Family Fiesta கொண்டாட்ட நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தனி முயற்சியாக, இந்தக் கொண்டாட்ட நிகழ்வை ஏற்பாடு செய்துள்ள பாதிமா ஹிமாயா நியாஸ் எனும் இரண்டு குழந்தைகளின் தாயார், இந்த நிகழ்வு தொடர்பில் விவரித்தார்.  

கே:   இது போன்றதொரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்ய நீங்கள் ஏன் தீர்மானித்தீர்கள்?  

எனது உழைப்பில், நாட்டுக்காக ஏதேனும் நற்காரியமொன்றை மேற்கொள்ள வேண்டும் எனும் எண்ணம், சிறு பராயம் முதல் என்னுள் காணப்பட்டது. நான் சொந்தமாகச் சலூன் ஒன்றைக் வைத்துள்ளேன். இந்தக் காலப்பகுதியில், எனக்கு Fight Cancer Team (FCT) உடன் இணைந்து கொள்வதற்கான வாய்ப்புக் கிடைத்தது. இந்தக் குழுவுடன் இணைந்து கொள்வதற்குக் கிடைத்தமையை எண்ணி பெருமையடைகிறேன். 

எமது அணியினருடன், புற்றுநோயாளர்களுக்கு சேவையாற்றும் போது, நானும் யாருக்கேனும் சேவையை பெற்றுக் கொடுக்கிறேன் எனும் நிறைவை என்னால் உணர்ந்து கொள்ள முடிந்தது. என்னுடைய கடின உழைப்பால் பெற்றுக்கொண்ட பணத்தைக் கொண்டு, புற்று நோயாளர்களுக்காக ஏதேனும் பங்களிப்பை பெற்றுக்கொடுக்க வேண்டும் எனும் சிந்தனை, இந்த உணர்வினூடாக தோன்றியது. அதனடிப்படையில், இந்தக் களியாட்டத்தை ஏற்பாடு செய்துள்ளேன்.   

கே:   இந்தக் களியாட்டத்தினூடாகப் பெறப்படும் இலாபம், புற்றுநோய் சிகிச்சைக்காக ஒதுக்கும் தீர்மானம் எப்படி தோன்றியது?  

இந்த அணியினருடன் பணியாற்றும் போது, எப்போதும் புற்றுநோயாளர்களைச் சந்திக்க நேரிட்டது. அவர்களைக் காணும் போதெல்லாம் வருத்தமடைந்தேன். சில தினங்களில், நாள் முழுவதும் அவர்களைப் பற்றி யோசித்த காலமும் உண்டு. 

அவர்களுக்காக ஏதேனும் நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் எனும் சிந்தனை, எப்போதும் என்னுள் காணப்பட்டது. எமக்கு, எதிர்காலத்தில் என்ன நடக்குமென நாம் அறிந்திருப்பதில்லை. எம்மால் இயலுமான காலத்தில், ஏதேனும் பங்களிப்பு வழங்க வேண்டும் என்பதால், இந்த நிகழ்ச்சியினூடாகக் கிடைக்கும் இலாபத்தை, புற்றுநோயாளர்களின் சிகிச்சைக்காக அன்பளிப்புச் செய்ய தீர்மானித்தேன்.  

கே:   Fight Cancer Team உடன் இணைந்து கொள்ள கிடைத்த சந்தர்ப்பத்தை பற்றி கூறுங்கள்.   

இந்த அணியில், எனது நண்பர் ஒருவர் உள்ளார். பெட் ஸ்கானர் (PET Scanner) ஊடாக, முதலாவது நோயாளியை ஸ்கான் செய்யும் நடவடிக்கையில்,  நண்பர், என்னையும் இணைத்துக் கொண்டார். அபேக்‌ஷா வைத்தியசாலையைச் சுற்றிப் பார்வையிடவும், அங்கு நோயாளர்களுடன் உரையாடி அவர்களின் குறைகள், துயரங்கள், வலிகள் பற்றி அறிந்து கொள்ளவும் எனக்குச் சந்தர்ப்பம் கிடைத்தது. 

மரணத்துடன் போராடிய வண்ணம் உயிர் வாழ முயற்சிக்கும் மக்களின் கதைகளைக் கேட்டதும்,  மிகவும் கவலை அடைந்தேன். ஆனால், இவற்றை எண்ணி மன உழைச்சலுக்கு ஆளாகி, அழுவதிலும் பார்க்க, அவர்களுக்காக, அவர்களுடைய வாழ்க்கைக்காக ஏதேனும் பங்களிப்புச் செய்ய வேண்டும் எனும் எண்ணத்துடன், இந்த அணியுடன் இணைந்து கொள்ளத் தீர்மானித்தேன்.   

கே:   சிறு பிள்ளைகளுக்காக இங்கு ஏதேனும் விசேட நிகழ்ச்சிகள் காணப்படுகின்றனவா?  

ஆம், Maya Family Fiesta நிகழ்ச்சி, சிறுவர்களை மகிழ்ச்சிப்படுத்துவதற்காக முன்னெடுக்கப்படுகிறது. சிறுவர்களுக்காக நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்யும் உபுல் மாமாவையும் இந்த நிகழ்ச்சியுடன் தொடர்புபடுத்தியுள்ளேன். மெஜிக் ஷோ, முகத்துக்கு வர்ணம் தீட்டல் போன்ற நிகழ்ச்சிகளும் உள்ளடங்கியுள்ளன. இலங்கையின் முன்னணி சங்கீத அணியினரை இணைத்துக் கொண்டு, பெருமளவான பாடகர்களின் பங்கேற்பில், இசைக் கச்சேரி நடைபெறும். 

குழந்தைகள் மகிழ்ச்சியுறுவதை பார்த்துக் கொண்டிருப்பதைத் தவிர, அவர்களுடன் இணைந்து  மகிழ்ச்சியடைவேன். குழந்தைகளை எமது வயதுக்கு உயர்த்தாமல், நாம் அவர்களின் வயதுக்குச் சென்று மகிழ்ச்சியடைய வேண்டும். இந்த நிகழ்ச்சியில், தத்தமது பிள்ளைகளுடன் பங்கேற்குமாறு சகல பெற்றோர்களையும் அழைக்கிறேன்.   

கே:   உங்களுக்கு இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்ய உதவியது யார்?  

எனது கணவர், எனக்கு பெருமளவு உதவி செய்கிறார். அவரின் வியாபார செயற்பாடுகளுக்காகக் காணப்படும் காலத்தையும் எனக்காக ஒதுக்கி, எனது எதிர்பார்ப்பை நிறைவேற்ற உதவி செய்கிறார்.  

கே:   உங்களது எதிர்காலத்திட்டங்கள் பற்றி கூறுங்கள்.   

என்னால் இயலுமான வரையில் அபேக்‌ஷா வைத்தியசாலைக்கு ஏதேனும் பங்களிப்பு வழங்க, முயற்சி செய்கிறேன். எமது நாட்டில் அனைவரும் இந்த வைத்தியசாலைக்கும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்காகவும் ஏதேனும் பங்களிப்புச் செய்ய எண்ணினால், யோசிக்காமல் உடனடியாகச் செயலில் இறங்குங்கள் எனக் கேட்டுக் கொள்கிறேன். இதய சுத்தியுடனேயே, இந்தக் கொண்டாட்டத்தை முன்னெடுக்கின்றேன். 

இந்த எதிர்பார்ப்பை நிறைவேற்றிக் கொள்வதற்கு அவசியமான சக்தி, எனக்குத் தேவை. எனது எதிர்பார்ப்பை நிறைவேற்றிக் கொள்ளச் சந்தர்ப்பம் கிடைத்தால், அத்துடன் நின்றுவிடமாட்டேன். மற்றுமொரு வைத்தியசாலைக்கும் இதுபோன்ற உதவிகளைப் பெற்றுக் கொடுக்க எதிர்பார்க்கிறேன். சிறுநீரகச் செயலிழப்பு காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ளவர்கள், இருதய நோயாளர்கள் எனப் பலரும் வெளியே சொல்ல முடியாமல் கஷ்டங்களை அனுபவித்த வண்ணமுள்ளனர்.   

கே:   உங்களைத் தொடர்பு கொள்ளக்கூடிய வழிமுறைகளைக் கூறுங்கள்.   

Himay bridal salonக்கு வந்தால், என்னைச் சந்திக்க முடியும். அத்துடன், Facebook வாயிலாக Himaya bridal (FB) எனும் பக்கத்தினூடாக இணைந்து, எனது Dressing செயற்பாடுகள் பற்றியும் அறிந்துகொள்ள முடியும்.     


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X