2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

அரசாங்க கடன் பிணையங்கள் பற்றி அறிமுகம்

Editorial   / 2019 மார்ச் 24 , பி.ப. 10:15 - 1     - {{hitsCtrl.values.hits}}

அரசாங்கத்தால் வழங்கப்படும் திறைசேரிப் பிணையங்கள் (Treasury Securities) அரச கடன் பிணையங்கள் எனப்படும். முக்கியமாக, திறைசேரிப் பிணையங்களின் இரண்டு வகைகளான திறைசேரி உண்டியல்கள், திறைசேரி முறிகள் காணப்படுகின்றன.

அரசாங்கத்தின் திறைசேரி சார்பாக, இலங்கை மத்திய வங்கியின் அரச பொதுப்படு கடன் திணைக்களத்தால் இப்பிணையங்கள் ஏலத்தின் மூலம் பொதுமக்களுக்கு வழங்கப்படுகின்றன. திறைசேரிப் பிணையங்களை வழங்குவதன் முக்கிய நோக்கம், அரசாங்கத்தின் செலவுகளுக்குத் தேவையான நிதியைப் பெற்றுகொள்வதாகும். அரச கடன் பிணையங்கள், அரச நிதி முகாமைத்துவத்தில் மிகவும் முக்கியமான,  அவசியமான அங்கமாகும்.  

அரச கடன் பிணையங்களின் வகைகள் 

திறைசேரியால் வழங்கப்படும் முக்கியமான இரு வகைப்பிணையங்கள் திறைசேரி உண்டியல்கள், திறைசேரி முறிகள் என்பனவாகும். 

திறைசேர் உண்டியல்கள் (Treasury Bills)

திறைசேரி உண்டியல் என்பது, அரசாங்கத்தால் வழங்கப்படும் குறுகிய காலக்கடன் பிணையங்கள் வகையாகும். இவை வாரந்தோறும் நடைபெறும் ஏலத்தில் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு பணம் திரட்டப்படுகின்றது. இவற்றின் முக்கிய பண்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.  

திறைசேரி உண்டியல்கள் குறுகிய காலக் (Short-Term) கடன் பிணையங்களின் வகையாகும். அரசாங்கத்தால், இவை மூன்று முதிர்வு காலங்களுக்கு வழங்கப்படுகின்றன. அவை மூன்று மாதங்கள் (91 நாள்கள்), ஆறு மாதங்கள் (182 நாள்கள்), பன்னிரண்டு மாதங்கள் (364 நாள்கள்) ஆகிய முதிர்வுகளைக் கொண்டுள்ளன.  

திறைசேரி உண்டியல்கள் கழிவு அடிப்படையில் (Discount Basis) வழங்கப்படும். கழிவு அடிப்படை எனப்படுவது, பெயரளவு பெறுமதியான (Nominal Value) முதிர்வுப்பெறுமதிக்கும் (Maturity Value) குறைவான விலைக்கு விற்பனை செய்வதாகும்.

உதாரணமாக, நூறு ரூபாய் பெயரளவு பெறுமதியுடையதும் ஒரு வருடத்தில் முதிர்வடையும் உண்டியல் ஒன்று ரூ. 84க்கு வழங்கப்படுவதைக் காணலாம். முதலீட்டாளரது கொள்விலை ரூ.84 ஆகவும் வருட இறுதியில் அவருக்கு நூறு ரூபாயும் கிடைக்கும் பெயரளவு பெறுமதிக்கும் கொள்விலைக்கும் இடையே உள்ள வித்தியாசம் அவரது வருமானமாகும். இந்த உதாரணத்தில் வருமானம் ரூ. 16 ஆகும்.

இதைத்தவிர உண்டியல் தொடர்பாக வட்டி வீதம் அல்லது சீட்டு வீதம் (Interest Rate or Coupon Rate) உரித்தாகாது.  

திறைசேரி உண்டியல்கள் குறுகிய கால நட்ட அச்சமற்ற பிணையங்களாகும். உண்டியல் முதிர்வடையும் போது, அதன் பெயரளவு பெறுமதியை செலுத்துவதற்கு அரசாங்கம் உறுதி செய்துள்ளது. அரசாங்கத்தால் இந்தக் கொடுப்பனவைச் செலுத்த தவறும் நட்ட அச்சம் (Default Risk) இல்லாது காணப்படுவதனால் இவை நட்ட அச்சமற்ற பிணையங்கள் (Risk-Free Securities) எனக் கருதப்படுகின்றது.  

திறைசேரி முறிகள் (Treasury Bonds)

திறைசேரியால் வழங்கப்படும் ஒரு வருடத்துக்கும் மேலான முதிர்வைக் கொண்டுள்ள பிணையங்கள் திறைசேரி முறிகள் எனப்படும். இவை உண்டியல்களைப் போன்று அரச கடன் திணைக்களத்தால் நடத்தப்படும் போட்டித்தன்மையான ஏல விற்பனை ஊடாக வழங்கப்படுகின்றன. திறைசேரி முறிகளின் முக்கிய பண்புகள் கீழே காட்டப்பட்டுள்ளன.  

திறைசேரி முறிகள் நீண்ட கால அரச கடன் பிணையங்களின் வகையாகும். இவை இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து, ஆறு, பத்து, பதினைந்து, இருபது வருடங்களிலான முதிர்வு காலங்களுக்கு இதுவரை வழங்கப்பட்டுள்ளன.  

திறைசேரி முறிகள் தொடர்பாக நிலையான வட்டி வீதம் ஒன்று அரையாண்டுகளுக்கு ஒருமுறை செலுத்தப்படுகின்றது. உதாரணமாக வட்டி வீதம் 15 சதவீதம் என எடுத்துக் கொள்வோம். வட்டி தொடர்பான அடிப்படைப் பெறுமதியானது, பெயரளவு பெறுமதியாகும். இதற்கமைய பெயரளவு பெறுமதி ரூ. 100க்கு வருடத்துக்கு ரூ. 15 (100*15%) வட்டி பணமாக கிடைக்கும். இது அரையாண்டுகளுக்கு ஒருமுறை 
ரூ. 7.50 விகிதம் இரண்டு தவணைகளாக செலுத்தப்படும். இதற்கும் மேலாக முதிர்வு கால முடிவின் போது பெயரளவு பெறுமதியை செலுத்துவதற்கு அரசாங்கம் கடமைப்பட்டுள்ளது.   

திறைசேரி முறிகள் நீண்ட கால நட்ட அச்சமற்ற பிணையங்களாக கருதப்படுகின்றது. இதற்கான காரணம் அரசாங்கத்தால் செலுத்துவதற்கு உறுதி செய்யப்பட்ட வட்டி, முதிர்வு பெறுமதிக் கொடுப்பனவில் நிச்சயமான தன்மை காணப்படுவதாகும்.  

(மிகுதி அடுத்தவாரம் தொடரும்)  
நன்றி:  
இலங்கை பிணையங்கள் பரிவர்த்தனை ஆணைக்குழு
 


You May Also Like

  Comments - 1

  • FAHMIYA Tuesday, 02 July 2019 10:38 AM

    'இலங்கையின் கடன் சந்தையின் செயல்திறன் மதிப்பீடு' எவ்வாறு விளக்கம் கொடுக்க வேண்டும்?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X