2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

இரண்டாம் காலாண்டு: வீழ்ந்ததைக் கட்டியெழுப்புமா?

அனுதினன் சுதந்திரநாதன்   / 2019 ஜூன் 17 , மு.ப. 08:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில், 4/21 அன்று இடம்பெற்ற பயங்கரவாத தற்கொலை குண்டுத் தாக்குதலுக்குப் பின்னர் ஆரம்பித்துள்ள இலங்கையின் இரண்டாம் காலாண்டுக்கான பொருளாதாரமானது, மிக முக்கியமானதாகக் கருதப்படுகின்றது. இந்த இரண்டாம் காலாண்டுப் பகுதியானது, மக்களிடத்தில் நம்பிக்கையைக் கட்டியெழுப்புவதுடன், சர்வதேச் ரீதியில் வீழ்ந்துபோயுள்ள இலங்கையின் பாதுகாப்பை உறுதிசெய்து, சுற்றுலாத்துறையை மீளக்கொணர்வதிலும் மிக முக்கியத்துவம் வாய்ந்த காலமாக அமைந்துள்ளது.   

இவற்றின் மூலமாக, இலங்கை இவ்வருடத்தில் திட்டமிட்ட பொருளாதார இலக்குகளை அடைந்துகொள்ள முடியாவிட்டாலும், மிக மோசமான எதிர்ப்பக்க நிலைமைகளிலிருந்து தப்பித்துக்கொள்ள முடியும். இதற்கு நாட்டின் உள்நாட்டு வர்த்தக நம்பிக்கைகள் உயர்வடைவதும் அரசியல் சூழ்நிலைகள் ஸ்திரமாக அமையப்பெறுவதும் மிக முக்கியமானதாகும். இல்லாவிடின், 2019ஆம், 2020ஆம் ஆண்டுகளில், இலங்கையின் பொருளாதாரம் மிகமோசமாகப் பாதிக்கப்படக்கூடிய சூழ்நிலைகள் காணப்படுவதாக, பொருளியல் வல்லுநர்கள் எதிர்வு கூறுகிறார்கள்.  

பொருளாதார வளர்ச்சி 

2019ஆம் ஆண்டின் ஆரம்பத்தில், இலங்கையின் பொருளாதார வளர்ச்சியானது 3 சதவீதம் தொடக்கம் 5 சதவீதம் வரை எதிர்பார்க்கப்பட்டது. ஆனாலும், தற்போதைய சூழ்நிலைகளின் காரணமாகவும் வேகமாக மீள்புத்துணர்ச்சி பெற்றுவரும் சுற்றுலாத்துறை காரணமாகவும் 2018இல் எட்டப்பட்ட 3 சதவீத பொருளாதார வளர்ச்சியை எட்டிப்பிடித்து, 3.5 சதவீத பொருளாதார வளர்ச்சியைப் பெற்றுக்கொள்ள முடியுமென எதிர்பார்க்கப்படுகிறது. ஆனாலும், இந்த வருட இறுதியில் வரவுள்ள ஜனாதிபதி தேர்தல், அரசியல் சூழ்நிலைகள் காரணமாக, இந்த இலக்கை அடைந்துகொள்ளுவது, தற்போதைய நிலையில், சாத்தியமானதா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.   

2019ஆம் ஆண்டில், ஜனாதிபதி தேர்தல் இடம்பெறுவது முற்கூட்டியே தீர்மானிக்கப்பட்டவொன்றாகும். ஆனாலும், எதிர்பாராதவிதமாக நேர்ந்த பயங்கரவாதத் தாக்குதலும் அதையொட்டி இடம்பெறும் மதரீதியான அரசியல் அசாதாரண செயற்பாடுகளும், இலங்கையின் பொருளாதாரத்தை முழுமையாகப் பாதிக்கச் செய்துள்ளன. இந்த நிலைமைகளிலிருந்து முழுமையாக மீள, குறைந்தது மூன்று தொடக்கம் ஆறுமாத காலமாவது தேவையாகவுள்ள நிலையில், இந்தக் காலப்பகுதிக்குப் பின்னதாக, உடனடியாகவே ஜனாதிபதி தேர்தல் வருகின்றமையானது, அனைத்தையுமே மீளவும் பழைய நிலைக்குக் கொண்டு செல்லக்கூடிய அபாயநிலையைத் தோற்றுவித்துள்ளது. அதிலும், தற்போது நிலவிவருகின்ற அரசியல் போர்ச்சூழலானது, எதிர்காலத்தில் நாடாளுமன்றத் தேர்தலுக்குக் கூட வழிவகுக்கக் கூடியதாகவுள்ளது. எனவே, எதிர்பார்க்கப்படும் பொருளாதார வளர்ச்சியை அடைந்து கொள்வதென்பது, முட்பாதையில் நடப்பதற்குச் சமமான ஒன்றாகும்.   

சர்வதேச நிலைமைகள் 

இலங்கையைப் பொறுத்தவரையில், தற்போது சர்வதேச நாடுகள் தாம் விதித்திருந்த இலங்கைக்கான பயணத்தடையை, மெல்ல மெல்லத் தளர்த்தி வருவது சாதகமான காரணியாகவுள்ளது. அத்துடன், சர்வதேச நாணய நிதியத்தின் நிதியுதவி கிடைக்கப்பெற்றமையும் அசாதாரண சூழ்நிலைகள் காரணமாக, பொருளாதாரம் மோசமாகத் தளர்ந்துபோகாமலிருக்க உறுதுணையாக அமைந்திருந்தது.  

இலங்கையின் சர்வதேச வர்த்தக நிலைமைகளைப் பொறுத்தவரையில், அமெரிக்க டொலருக்கு எதிராக, இலங்கை நாணயமானது மிக மெதுவாக உறுதியான நிலையை நோக்கி நகர்ந்து கொண்டுள்ளது. இதன்விளைவாக, சர்வதேச வர்த்தகத்திலும் நாணய ஒதுக்கத்திலும், இலங்கையானது, வலுவடையக் கூடிய நிலையைக் கொண்டிருக்கிறது. அத்துடன், அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை நாணயம் வலுப்பெறுவதன் விளைவாக, நாட்டின் வட்டிவீதங்களிலும் சாதகமான மாற்றங்கள் உருவாக வாய்ப்பேற்பட்டுள்ளது.   

எரிபொருள் விலை   

சர்வதேச ரீதியில் எரிபொருளுக்கான விலை அதிகரிக்கா விட்டாலும், இலங்கையின் கடந்தகால அசம்பாவிதங்கள் காரணமாக, அதிகரிக்காத எரிபொருள் விலையை, தற்போது இலங்கை அரசாங்கம் அதிகரித்துள்ளது. இதற்குப் பின், சர்வதேச ரீதியில் ஏதேனும் பிரச்சினைகள் ஏற்படாதவிடத்து அல்லது அமெரிக்கா ஏதேனும் விபரீத முடிவுகளை எடுக்காதவிடத்து, இலங்கையிலும் எரிபொருள் விலையின் தடுமாற்றமானது குறைவாகவே அமைந்திருக்கும். இதன்மூலமாக, மக்களின் அடிப்படைப் பொருளாதாரச் செயல்பாடுகளிலோர் உறுதியான நிலையைப் பேணிக்கொள்ள முடியும்.  

வர்த்தகப் பற்றாக்குறை

இலங்கையின் பொருளாதாரத்தில் மிகப்பெரும் பிரச்சினையாகவிருப்பது கடந்த காலங்களில் அதிகரித்துச் செல்லும் வர்த்தகப் பற்றாக்குறையாகும். 2017ஆம் ஆண்டில் இது 9.6 பில்லியன் அமெரிக்க டொலர்களாக அமைந்ததுடன், கடந்த வருடத்தில் 10.3 பில்லியன் அமெரிக்க டொலர்களாக அமைந்திருந்தது. இந்தப் பாரிய வர்த்தகப் பற்றாக்குறையானது, சென்மதி நிலுவையையும் வெளிநாட்டு நாணயவிருப்பையும் பாதிப்பதாக அமைந்துள்ளது.   

இலங்கையைப் பொறுத்தவரையில், கடந்த சில வருடங்களாக ஏற்றுமதியைப் பார்க்கிலும், இறக்குமதியானது மிக அதிகமாக அமைந்துள்ளது. இதன் காரணமாக, நாட்டின் வெளிநாட்டு நாணய வெளிப்பாய்ச்சலும் வெளிநாட்டு நாணயவிருப்பு ஒதுக்கமும் குறைவாகவுள்ளது. குறிப்பாக, 2018ஆம் ஆண்டில், இலங்கையின் ஏற்றுமதியானது, 11.9 மில்லியன் அமெரிக்க டொலர்களாக அமைந்திருந்தது. ஆனால், இறக்குமதியானது, 22.2 பில்லியன் அமெரிக்க டொலர்களாக அமைந்திருந்தது. இந்த இடைவெளியைப் பூர்த்தி செய்ய, இலங்கையானது தனது வெளிநாட்டு வருமானங்களைப் பயன்படுத்தவேண்டிய துர்பாக்கியநிலை ஏற்பட்டிருந்தது.   

ஆனால், 2019ஆம் ஆண்டில் இந்த நிலையில் மிக முன்னேற்றகரமான நிலையை அடைந்துள்ளது. குறிப்பாக, 2019ஆம் ஆண்டின் முதலாம் காலாண்டில், இறக்குமதி அளவானது, 2018ஆம் ஆண்டுடன் ஒப்பிடுமிடத்து, குறைவாகவே உள்ளது. இந்த நிலையானது, இனிவரும் காலாண்டுகளிலும் தொடருமாயின், நாட்டின் வெளிநாட்டு நாணயவிருப்புக்கு இது பலம்சேர்ப்பதாக அமையும்.   

சுற்றுலாத்துறை

இலங்கையானது, எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதல் தான், வழமையான சுற்றுலாப்பயணிகளின் வருகையை எதிர்க்க முடியுமென, பொருளாதார வல்லுநர்களின் எதிர்பார்க்கை அறிக்கையானது சுட்டிக்காட்டுகின்றது. எனவே, இலங்கையானது எதிர்வரும் மாதங்களில், சுற்றுலாப் பயணிகளின் வருகைக்கான உகந்த சூழலை, நாட்டில் ஏற்படுத்த வேண்டியது அவசியமாகிறது. அத்துடன், நாட்டின் சுற்றுலாத்துறை தொடர்பான விழிப்புணர்வு, விளம்பரங்கள் ஆகியவற்றை, சர்வதேச அரங்கில் மீளவும் நிகழ்த்த வேண்டியதாகவுள்ளது. இதற்கான செலவுகள் அனைத்தும் எதிர்காலச் சுற்றுலாத்துறை வருமானத்தின் முதலீடாக அமைவதுடன், வருங்காலச் சுற்றுலாத்துறையின் அஸ்திபாரமாகவும் அமையும்.  

இவ்வருடத்தின் ஆரம்பத்தில், இலங்கையின் சுற்றுலாத்துறை மூலமாக, 5 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வருமானமாக எதிர்பார்க்கப்பட்டிருந்தது. ஆனாலும், 3 தொடக்கம் 3.5 பில்லியன் வருமானத்தையே தற்போதைய சூழ்நிலைகளின் காரணமாகப் பெற்றுக்கொள்ளக் கூடியதாயிருந்தது. இருந்தபோதிலும் இவ்வருடத்தின் இறுதியில் இடம்பெறக்கூடிய ஜனாதிபதித் தேர்தல், இதைப் பாதிக்கக்கூடிய சாத்தியப்பாடுகளும் அதிகமாகவுள்ளன.   

இவ்வாண்டில், நாம் சுற்றுலாத்துறை வருமானத்தின் மூலமாக இழக்கின்ற மேலதிக எதிர்பார்க்கை வருமானமானது, நாட்டின் பொருளாதாரச் செயற்பாடுகளில் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தப் போகின்றது. நாட்டின் அந்நியச் செலவாணி வருமானத்தில் ஏற்படுகின்ற இந்தக் குறையைப் போக்கிக்கொள்ள, இலங்கை அரசாங்கமானது, மாற்றீட்டு வழிமுறைகளைக் கண்டறிந்து கொள்வது அவசியமாகிறது. இதன்மூலமாக, நாட்டின் பொருளாதாரத்தில் ஏற்படக்கூடிய தேக்கநிலையைத் தவிர்த்துக்கொள்ளக் கூடியதாகவிருக்கும்.  

பயங்கரவாதத் தாக்குதலின் காரணமாக, இலங்கையின் முதலாம் காலாண்டு பாதிப்படைந்துள்ளதுடன், மூன்றாம் / நான்காம் காலாண்டில் இடம்பெறக்கூடிய ஜனாதிபதித் தேர்தலில் ஏதேனும் குழப்பநிலை ஏற்படுமாயின், அதன் காரணமாகவும் பொருளாதாரச் செயற்பாடுகளில் பாதிப்புகள் ஏற்படக்கூடும். எனவே, இந்த இரண்டாம் காலாண்டானது, இலங்கையின் பொருளாதாரத்துக்கு மிக முக்கியமான ஒன்றாக அமைந்துள்ளது. இந்தக் காலாண்டில் இலங்கை அரசாங்கமானது, தனது பொருளாதாரத்தை மீளெடுத்துக்கொள்ள வேண்டியது அவசியமாகும்.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .