2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

இலங்கை வர்த்தக நாமம் சர்வதேச ரீதியில் பிரபல்யமா, பின்னடைவா?

ச. சந்திரசேகர்   / 2019 மே 08 , பி.ப. 08:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுடன் இலங்கை மட்டும் ஆட்டம் காணாமல், முழு உலக நாடுகளும் தமது கரிசனையை இலங்கை மீது திருப்பியிருந்தன. ஈபிள் கோபுரம் விளக்கு அணைக்கப்பட்டிருந்தது; டுபாயின் புர்ஜ் கலிஃபா, சிட்னியின் ஒபெரா இல்லம் போன்றன இலங்கைக் கொடியை ஒளிர விட்டிருந்தன. உலகின் பெருமளவு நாடாளுமன்றங்கள் இலங்கையில் பாதிக்கப்பட்டவர்களுக்காக நிமிட மௌனம் காத்தன. 

அமெரிக்க ஜனாதிபதி டொனல்ட் ட்ரம்ப், ஊடகங்களுக்கு விசேட அறிக்கை வெளியிட்டிருந்தார். Lonely Planet, இலங்கையை 2019இல் கட்டாயம் விஜயம் செய்ய வேண்டிய நாடு என அறிவித்திருந்ததைத் தொடர்ந்து, உலகளாவிய ரீதியில் பலரின் கவனத்தை ஈர்த்தப் பெயராக இலங்கை கடந்த வாரங்களில் திகழ்ந்தது.  

முகாமைத்துவ தத்துவத்தில் குறிப்பிடப்படுவது யாதெனில், “தலைமைத்துவத்தின் வலிமையை, இடர் நேரும் போது பரிசோதித்துக் கொள்ள முடியும்” என்பதாக அமைந்துள்ளது. அந்த வகையில் பார்க்கும் போது, ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற தாக்குதல்களுக்குப் பொறுப்புக்கூறுவார் யாருமில்லை. இலங்கை அரசாங்கம், ஏப்ரல் 21ஆம் திகதி, தாக்குதல்களில் தோல்வியுற்றுள்ளது என்பதே முகாமைத்துவ தத்துவத்தின் பிரகாரம் பொருள்படுகின்றது.  

நாட்டின் மொத்த தேசிய உற்பத்தி 2018இல் 3.2% வளர்ச்சியை மட்டுமே பதிவு செய்திருந்ததாக, இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. 2015இல் 5.3%, 2016இல் 4.2%, 2017இல் 3.8% ஆக, இந்த வளர்ச்சி பதிவாகியிருந்தது. அண்மைய நாடுகளை எடுத்துக் கொண்டால், இந்த வளர்ச்சி 5%க்கு குறையாமல் அமைந்துள்ளது. இந்நிலையில், நாட்டை ஆளும் தலைமைகள், தமது அரசியல் இலாபங்களைத் தேடவும் அரசியல் முரண்பாடுகளுக்கும் தமது சலுகைகள் குறித்து முக்கியத்துவம் செலுத்துவதைக் காண முடிகின்றதுடன், நாட்டின் முன்னேற்றம், பொது மக்களின் நலன் தொடர்பில் கவனம் செலுத்துவதைக் காண்பது அரிதாகியுள்ளது.  

நாட்டின் அரசியல் தலைமைகள் பொறுப்புக்கூற வேண்டிய இலங்கை மத்திய வங்கி பிணை முறி மோசடி விவகாரம், நாட்டில் ஏற்பட்ட மின் நெருக்கடி போன்ற விடயங்கள், நல்லாட்சி அரசாங்கத்தின் மீது ஏற்ெகனவே மக்கள் மத்தியில் பெருமளவு அதிருப்தியை ஏற்படுத்தியிருந்த நிலையில், தற்போது இடம்பெற்றுள்ள பயங்கரவாதத் தாக்குதல்கள், மேலும் அரசாட்சியின் மீது மக்களுக்கு வெறுப்பையும் அவமதிப்பையும் ஏற்படுத்தியுள்ளன.  

இந்நிலையில், நாட்டில் இடம்பெற்ற தாக்குதல்களின் பின்னணியை சந்தைப்படுத்தலுடன் தொடர்புபடுத்தி நோக்கும் போது,  

உயிர்த்த ஞாயிறன்று நாட்டில் இடம்பெற்ற தாக்குதல்கள் வெறுமனே தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள் மாத்திரமன்றி, அவற்றின் பின்னணியில் 2010ஆம் ஆண்டு முதல் ISIS அமைப்பால், இலங்கை இலக்கு வைக்கப்பட்டு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. 2014இல் இந்தத் தாக்குதல்களின் சூத்திரதாரி சஹ்ரான், அவரின் சகாக்கள், சிரியாவில் தாக்குதல் பயிற்சி பெற்றுள்ளனர். இைதத் தொடர்ந்து இலங்கையில் வாழும் முஸ்லிம் மக்கள் மத்தியில் இந்தப் பிரிவினைவாதத்தை ஊக்குவிக்கும் செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளனர்.  

இந்த விடயம் தொடர்பில் ஆராய்ந்த நிபுணரான பேராசிரியர் ரொஹான் குணரட்னவின் கருத்துக்களின் பிரகாரம், இந்தத் தீவிரவாத அமைப்பின் 10 சதவீதமானவர்கள் மாத்திரமே தற்கொலைக் குண்டுதாரிகள். எஞ்சிய 90 சதவீதமானவர்கள் நாட்டில் உட்கட்டமைப்புகளை விஸ்தரித்து, சமாதானத்தை விரும்பும் முஸ்லிம்களை, இந்த மாற்றுச் சிந்தனைக்குத் தூண்டும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். 

எனவே, இந்தத் தாக்குதல்களுடன் தொடர்புடைய 130 பேரை தேடியறிவது என்பது இலகுவான காரியமாகக் காணப்பட்டாலும், எஞ்சிய 90 சதவீதமான செயற்பாட்டாளர்களை செயலிழக்கச் செய்வது என்பது கடுமையானக் காரியமாக அமைந்திருக்கும். ஏனெனில், இது தேர்தல்கள் இடம்பெற வேண்டிய வருடமாகும். போட்டிகரமான வர்த்தக நாமங்களை நாம் கண்காணிக்கும் போது, எம்மால் புதிய வர்த்தக நாமங்கள் அறிமுகம் செய்யப்படுகின்றமையை அல்லது புதிய சந்தைப்படுத்தல் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படுவதை நாம் காணலாம்.

எனவே, போட்டியாளர்களின் இவ்வாறான செயற்பாடுகளுக்கு எதிர் செயலாற்றுவதற்கு பதிலாக, தரவுகள் குறித்து ஆழமான ஆய்வுகளை மேற்கொண்டு பின்னணியிலுள்ள பாரியத் திட்டங்களைக் கண்டறிய வேண்டும் என்பதை, சந்தைப்படுத்தலில் அறிவுறுத்தப்படுகிறது.  

தாக்குதல்கள் இடம்பெறலாம் என சர்வதேச புலனாய்வு அமைப்புகளால் முன்கூட்டியே அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், அது தொடர்பாக பெருமளவு அக்கறை செலுத்தாமை காரணமாக, அரசாங்கம் போதியளவு அனுபவமற்றவர்களால் முறையான தீர்மானங்களை மேற்கொள்ள முடியாத நிலையில் இயக்கப்படுவதை எம்மால் அவதானிக்க முடிந்தது.

எனவே, தரவுகளை அடிப்படையாகக் கொண்ட தீர்மானமெடுத்தல் என்பது, முடங்கிக் காணப்படுவதை வெளிப்படையாக காண முடிகின்றது.  இன்றைய சிக்கல்கள் நிறைந்த சந்தைக்களத்தில் அனுபவம் வாய்ந்தவர்களால் தரவுகள் அடிப்படையிலான தீர்மானமெடுத்தல்கள் என்பது இன்றியமையாததாக அமைந்துள்ளது என சந்தைப்படுத்தல் தத்துவம் குறிப்பிடுகின்றது.  

2015இல், இந்த அரசாங்கம் பதவி ஏற்றதிலிருந்து தொடர்ந்து தீர்மானம் மேற்கொள்வோர் பல தடவைகளில் தமது குறைந்த திறன்களை வெளிப்படுத்தியிருந்தனர். இதற்கு பிணைமுறி மோசடி, மின் நெருக்கடி போன்ற பல உதாரணங்கள் காணப்படுகின்றன. உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை தொடர்ந்து சர்வதேச ஊடகங்களுக்கு பிரதமர் வழங்கிய நேர்காணல்களும் இதையே உணர்த்துகின்றன.  

நீங்கள் வர்த்தக நாமமொன்றின் காப்பாளராகச் செயற்படுகின்றீர்களாயின், நீங்கள் எங்கிருந்தாலும், தரவுகள் உங்களை வந்தடையும் வரை காத்திருக்கக்கூடாது. அது உங்களை உரிய காலத்தில் வந்தடைவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதுடன், அவ்வாறான தகவல்கள் கிடைத்தவுடன், உங்களின் நிபுணத்துவ அணியுடன் அது பற்றி ஆராய வேண்டும். சந்தைப்படுத்தலில் தீர்வுகளை உருவாக்க வேண்டியதில்லை. எப்போதும் தீர்வுக்காகச் சிறந்த வழிமுறைகள் காணப்படும். சூழ்நிலைக்கேற்ப மாற்றங்களை மேற்கொண்டு துரித கதியில் செயலாற்ற வேண்டும். அவற்றை நடைமுறைப்படுத்தும் போது மேம்படுத்தல்களை மேற்கொள்ளலாம்.  

தாக்குதல்கள் தொடர்பாக தலைமைத்துவத்தால் வெளிப்படுத்தப்பட்ட முன்கூட்டியே அறிந்திராமைப் பற்றிய கருத்துக்கள், இலங்கையில் சர்வதேச பயங்கரவாதிகளுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ள முடியாது என பிரதமர் தெரிவித்த கருத்துக்கள், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை அறிவித்ததில் காணப்பட்ட முரண்பாடுகள் போன்று இந்த இடரை தொடர்ந்து, அது தொடர்பில் கையாள்வது குறித்து அரச மட்டத்தில் ஒரு தெளிவற்ற நிலை காணப்பட்டது.   

சந்தைப்படுத்தல் துறையில் இடர் முகாமைத்துவம், பிரச்சினைகள் தொடர்பில் கையாளல் என்பது பொதுவான விடயங்களாகும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் சூழ்நிலையை தமது கட்டுப்பாட்டினுள் கொண்டு வந்து, யதார்த்தத்தை உணர வேண்டும். இதைத் தொடர்ந்து சிரேஷ்ட தலைமைத்துவத்தின் பின்னணியில் மூலோபாயம் வகுக்கப்பட வேண்டும். சிரேஷ்ட முகாமைத்துவத்துக்கு மேற்கொள்ளும் செயற்பாடுகள் தொடர்பில் அறிவுறுத்த வேண்டும். குறித்த இடர் தொடர்பில் தீர்வு காண்பது பற்றி பொது மக்கள் உங்களின் மீது நம்பிக்கை கொண்டிருப்பார்களானால், அரைப்பங்கு பிரச்சினைக்கு தீர்வு கிட்டிவிடும்.  

இந்த இடர் சந்தர்ப்பங்களின் போது, ஊடகங்களுக்குத் தகவல்களை வழங்குவதற்கு உறுதியான தலைமைத்துவம் காணப்பட வேண்டும். தாக்குதல்களை தொடர்ந்து, அரசாங்கத் தரப்பும், எதிர்கட்சி தரப்பும் மாறி மாறி கருத்துக்களை வாறி வழங்கியதை ஊடகங்கள் காண்பித்தன. இதனால் மக்கள் மத்தியில் குழப்ப நிலை தோன்றியிருந்ததை அவதானிக்க முடிந்தது. குறிப்பாக முஸ்லிம் இனத்தவர்களின் ஆடைகள் சம்பந்தமாக பல்வேறு குழப்பங்கள் எழுந்தன.  

இடர் நேரும் போது மக்களிடமிருந்து பிரச்சினையை வேறாக்கி, பிரச்சினையை ஆழமாக ஆராய நீங்கள் முனைய வேண்டும். இந்தச் சந்தர்ப்பத்தில் ஊடகங்கள் உங்கள் பின்னால் வர ஆரம்பிக்கும் என்பதுடன், பிரச்சினையை தீர்க்க நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு பிரசாரங்களை வழங்கும். தேசிய நலன் கருதி சில கடுமையான உறுதியான தீர்மானங்களை மேற்கொள்ளும் போது, ஊடகங்கள் தமது ஆதரவை வழங்கும்.  

இந்தத் தாக்குதல்கள் தொடர்பில் அரசாங்கம் தூய நிலைப்பாட்டை பேணுவது என்பது கேள்விக்குட்படுத்தப்பட்டிருந்தது. குறிப்பாக தாக்குதல்களை நடத்திய குடும்பத்தாருடன் சில அரச அமைச்சர்கள் நெருக்கமான தொடர்புகளை பேணினார்கள் என குறிப்பிடப்பட்டிருந்தது. அரசாங்கத்தின் பெரும்புள்ளிகள் தாக்குதல் பற்றி அறிந்திருக்கவில்லை என வெளிப்படையாக குறிப்பிட்டமை, ஆறு மாதங்களுக்கு மேலாக பாதுகாப்பு சபை அமர்வுகளில் பிரதமர் பங்கேற்காமை போன்ற விடயங்கள் இதற்கு காரணமாக அமைந்திருந்தன.  

சந்தைப்படுத்தல் துறையை பொறுத்தமட்டில், “நிதி நெறிமை” என்பது தூய நிலையாகும். அத்துடன், அவ்வாறான சூழ்நிலை உருவாகும் போது, ஒரு முக்கிய நபர் பொறுப்பேற்று, சீராக்கத்துக்கான அடுத்த கட்ட நடவடிக்கைகள் பற்றி தெளிவாக குறிப்பிட வேண்டும். பொது மக்கள் மற்றும் ஊடகங்கள் இந்த நபரை நம்பிக்கைக்குரியவராக, செயலாற்றக்கூடியவராக காண வேண்டும்.   

வர்த்தக நாமத்தின் கீர்த்தி நாமத்தை களங்கம் ஏற்படாமல் பேணுவதற்கு பாரதூரமான பிரச்சினைகள் எழும் போது, நிர்வாகத்தில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும். அவ்வாறான சந்தர்ப்பத்தில் குறித்த நாமத்தின் மீதான நம்பிக்கை தொடர்ந்து பேணப்படும். இவ்வாறான சந்தர்ப்பங்களுக்கு பல உதாரணங்கள் காணப்படுகின்றன.   

சந்தைப்படுத்தலில் இறுதி இலக்கு என்பது வர்த்தக நாம பெறுமதி. வர்த்தக நாமத்துக்கு சந்தைப்படுத்தல் நிபுணர் பெறுமதி சேர்க்க வேண்டும். அதுவே எதிர்பார்க்கப்படுகிறது. துரதிர்ஷ்டவசமாக, இலங்கை எனும் நாமத்துக்கு கடந்த நான்கு ஆண்டு காலமாக அவதூறு எழுந்த வண்ணமே உள்ளது. 2009 முதல் 2015 வரையான காலப்பகுதியில் 35சதவீத சராசரி வளர்ச்சியை இலங்கை நாமம் பதிவு செய்திருந்த நிலையில், தற்போது இது ஒற்றை இலக்கத்துக்கு வீழ்ச்சி கண்டுள்ளது.  

கடந்த இரு ஆண்டுகளில் அல்ஜீரியா, உக்ரேன் போன்ற நாடுகள் வர்த்தக நாம வளர்ச்சியில் இலங்கையை விட உயர்ந்த பெறுமதிகளை பதிவு செய்துள்ளன. 

அச்சுறுத்தும் வகையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் அனைத்தும் CCTV க​மெராக்களில், அதாவது நவீன தொழில்நுட்ப வசதிகளில் பதிவாகியுள்ளன. பொது மக்கள் மத்தியில் தாக்குதல் நடத்தியவர்கள் சாதாரணமாக வருகை தந்து தமது இலக்குகளை நிறைவேற்றியதை இந்த காட்சிகளினூடாக காண முடிந்தது. துரதிர்ஷ்டவசமாக இதுவே தாக்குதல்களை மேற்கொள்வோரின் இயல்பாகவும் அமைந்துள்ளது.  
உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் கவலையையும், பின்னடைவுகளை ஏற்படுத்தியிருந்த போதிலும், அவற்றினூடாக வியாபாரங்கள் மற்றும் சந்தைப்படுத்தல் துறைகளுக்கு வழங்கக்கூடிய பாடங்களை அறிந்து கொள்ள முடிகின்றது. 

இவ்வாறான சூழ்நிலைகளில் சரியான தீர்மானங்களை மேற்கொண்டு நாம் செயலாற்றும் விதத்தில் சரியான மாற்றத்தை ஏற்படுத்துவதனூடாக நாம் இயங்கும் வர்த்தக நாமங்களின் கீர்த்தி நாமத்துக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக் கொள்ளலாம்.   

இலங்கை வர்த்தக நாமத்தின் கீர்த்தி நாமத்துக்கும் இவ்வாறான பாதிப்பு ஏற்படுவதை குறைக்கும் வகையில் எதிர்காலத்தில் நாம் தெரிவு செய்த தலைமைகள் இயங்குவார்கள் என எதிர்பார்ப்பு பல இலங்கையர்கள் மத்தியில் நிலவுகின்றது.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .