2025 ஓகஸ்ட் 01, வெள்ளிக்கிழமை

உலகப் பொது நாணயம் டொலரா? லிப்ராவா?

அனுதினன் சுதந்திரநாதன்   / 2019 ஜூன் 25 , பி.ப. 05:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்த சில வருடங்களாக உலகை, மெய்நிகர் நாணயங்கள் (Crypto Currencies) ஆட்டிப்படைத்துக் கொண்டு இருக்கின்றன.

மெய்நிகர் நாணயங்களின் வரலாறானது, Bitcoin எனப்படும் முதல் மெய்நிகர் நாணயத்தின் அறிமுகத்துடனேயே ஆரம்பிக்கின்றது. Bitcoin, உண்மையில் ஒரு தொழில்நுட்பமாகப் பார்க்கப்படவேண்டிய போதிலும் எந்தவொரு தங்குதடையுமின்றி, எந்தவோர் அரசாங்கத்தின் அழுத்தங்களுமின்றி, பணப் பரிவர்த்தனையை, மிகப் பாதுகாப்பாக, மிக விரைவாக, சந்தையின் கேள்வி-நிரம்பல் ஆகியவற்றின் அடிப்படையில் இலகுபடுத்தும் தொழில்நுட்பமாக அமைந்ததன் விளைவாக, Bitcoin, தற்போது நடைமுறையிலுள்ள பணக் கொடுக்கல் வாங்கல்களுக்கு மாற்றீடாகப் பார்க்கப்படுகிறது.

இந்த வரிசையின் அடிப்படையில், பல்வேறு மெய்நிகர் நாணயங்கள், சந்தையில் அறிமுகமாகியிருந்த போதிலும், தற்போது சந்தைக்கு அறிமுகமாகாத, ஆனால் அறிவிப்பிலேயே அனைவரது ஆதரவையும் எதிர்ப்பையும், ஒருமித்தே சம்பாதித்துள்ள மெய்நிகர் நாணயமாக “லிப்ரா” மாறியிருக்கிறது.   
லிப்ரா என்பது என்ன?

உலகில் அநேகமானோரால் அறிமுகம் செய்யப்பட்ட மெய்நிகர் நாணயப் பட்டியலில், தற்போது புதிதாக இணையவுள்ள பேஸ்புக் நிறுவனத்தின் தயாரிப்பே இந்த “லிப்ரா” ஆகும். உலகின் பில்லியன் கணக்கான மக்களை, ஒரே இணையதளத்தில் இணைக்கும் பேஸ்புக், அம்மக்களுக்கான பொது மெய்நிகர் நாணயமொன்றை வெளியிடுவதாக அறிவித்திருப்பதே, அனைத்து சலசலப்புகளுக்கும் காரணமாக அமைந்துள்ளது.   

கடந்த வாரத்தில், பேஸ்புக் நிறுவனத்தால் வெளியிடப்பட்ட அறிவித்தலின் பிரகாரம், லிப்ரா மெய்நிகர் நாணயத்தை, 2020ஆம் ஆண்டளவில், பேஸ்புக் மூலமாக இணைந்துள்ள மக்கள் பயன்படுத்தக்கூடிய வகையில் நடைமுறைக்குக் கொண்டுவர எதிர்பார்த்துள்ளதாக அறிவித்துள்ளது. இதன்மூலமாக, உலகளாவிய ரீதியிலான பொதுநாணயப் பயன்பாட்டையும் நிதியியல் உட்கட்டமைப்பு வசதிகளையும் முன்னேற்ற எதிர்பார்ப்பதாகத் தெரிவித்திருந்தது.   

உத்தியோகபூர்வ பரிமாற்று ஊடகமாக அமையுமா ?

உண்மையில், பேஸ்புக் போன்ற நிறுவனங்கள் மெய்நிகர் நாணயத்தையும் அதுசார்ந்த தொழில்நுட்பத்தையும் பயன்படுத்துவதன் மூலமாக, பல பில்லியன் மக்கள் அதை மிக இலகுவாகப் பயன்படுத்தும் நிலை ஏற்படும். இதன் மூலமாக, லிப்ரா போன்ற மெய்நிகர் நாணயமானது, பொது பரிமாற்ற ஊடகமாக வரக்கூடிய சாத்தியப்பாடு உள்ளது. ஆனாலும், அந்தப் பொது பரிமாற்ற ஊடகமெனும் நிலையை அடைய அல்லது நாம் தற்போது பயன்படுத்தும் பணத்தைத் தாண்டி, மற்றுமோர் ஊடகத்தைப் பரிமாற்று ஊடகமாகப் பயன்படுத்திக் கொள்ளுவதற்கு, லிப்ரா மிகப்பெரும் தடைகளைத் தாண்ட வேண்டியதாகவிருக்கும்.   

ஆரம்பகட்ட தகவல்களின்படி, லிப்ரா மெய்நிகர் நாணயமானது, எந்தவிதமான சட்ட ஒப்புதல்களையும் பெற்றுக்கொண்டமைக்கான உத்தியோகபூர்வமான தகவல்கள் எதுவுமே வெளியிடப்படவில்லை. எனவே, லிப்ரா தனது சட்ட ஒப்புதல்களை இனித்தான் பெற வேண்டுமாயின், அது, அதீத சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடும். இவற்றைத் தாண்டி, 2020இல் மக்கள் பாவனைக்கு வருவதென்பது, குதிரைக் கொம்பாகவே இருக்கும். குறிப்பாக, பேஸ்புக் நிறுவனம் மீது பயனாளர் பாதுகாப்புத்தன்மை தொடர்பில் பரவலான குற்றச்சாட்டுகள் உள்ள நிலையில், இந்தப் பொது பரிமாற்ற ஊடகச் செயற்பாடுகளுக்கு அனுமதி வழங்கப்படுமா என்பது கேள்விக்குறியே.   

லிப்ரா யாருக்குச் சொந்தமானது?

ஒவ்வொரு நாட்டின் நாணயமும் அந்த நாட்டின் அரசாங்கத்துக்கே சொந்தமானதாக இருக்கும். ஆனால், மெய்நிகர் நாணயங்கள் அவ்வாறாக இருப்பதில்லை. அதை உருவாக்கும் தனிநபர், நிறுவனங்கள் அல்லது குழுக்கள் ஆகியவற்றுக்கே சொந்தமானதாக இருக்கும். அந்த வகையில், லிப்ரா மெய்நிகர் நாணயம் தொடர்பில் பேஸ்புக் நிறுவனம் செய்தியை வெளியிட்டிருந்தாலும், அது முழுமையாக பேஸ்புக் நிறுவனத்துக்கு மாத்திரம் சொந்தமானதாக இருக்கப்போவதில்லை. மாறாக லிப்ரா அமைப்பில் உறுப்புரிமை பெற்றுக்கொண்ட நிறுவனங்களுக்குச் சொந்தமானதாக இருக்கும்.   

அந்த வகையில், லிப்ரா அமைப்பானது, சுவிற்ஸர்லாந்து நாட்டில் ஓர் இலாபநோக்கற்ற அமைப்பாக உருவாக்கப்பட்டுள்ளதுடன், இந்த அமைப்பில் இதுவரை 27 அமைப்புகள் அங்கத்துவம் பெற்றுள்ளன. இந்த அமைப்பில் தற்போதுவரை பெரும்பங்கை, பேஸ்புக் நிறுவனம் கொண்டிருக்கிறது.

அத்துடன், நம் அனைவருக்கும் பரீட்சயமான Paypal, Visa, Ebay, Uber, Mastercard, B Booking.com போன்ற நிறுவனங்களும் அங்கத்துவத்தைக் கொண்டுள்ளன. இந்த அமைப்பின் தொடக்கநிலை அங்கத்துவத்தைப் பெற்றுக்கொள்ள, இந்த 27 நிறுவனங்களும் 10 மில்லியன் அமெரிக்க டொலர்களை முதலீடு செய்துள்ளன. இந்த முதலீடானது, லிப்ரா எனும் மெய்நிகர் நாணயத்தை உருவாக்கவும், அதன் செயற்பாடுகளை மக்களிடத்தே கொண்டுசேர்க்கவும் பயன்படுத்தப்படுமென, பேஸ்புக் நிறுவனம் அறிவித்திருக்கிறது.   

இந்த லிப்ரா அமைப்பானது, லிப்ரா மெய்நிகர் நாணயத்தின் பயன்பாட்டையும் அதன் பாதுகாப்புத் தன்மையையும் உறுதிசெய்கின்ற அமைப்பாகச் செயற்படுமென, பேஸ்புக் நிறுவனம் அறிவித்துள்ளதுடன், குறித்த அமைப்பில் எந்தவொரு நிறுவனமும் தனது ஆதிக்கத்தைச் செலுத்தாத வகையில், மேலதிக நிறுவனங்கள் சேர்த்துக்கொள்ளப்படும் எனவும் அறிவித்திருக்கிறது. அத்துடன், குறித்த அமைப்பில் பெரும் பங்கைக் கொண்டிருக்கும் பேஸ்புக் நிறுவனம், லிப்ரா நாணயம் பாவனைக்கு வரும் 2020ஆம் ஆண்டில் முழுமையாக, தனது பங்கை வழங்கிவிட்டு, லிப்ரா அமைப்பைக் கண்காணிக்கும் சுயாதீன நிறுவனமாகச் செயற்படவுள்ளதாக அறிவித்துள்ளது.   

எனவே, லிப்ரா மெய்நிகர் நாணயம், யாருடைய முழுமையான கட்டுப்பாட்டிலுமிருக்கக் கூடாதென்பதில், பேஸ்புக் நிறுவனமும் அதைச் சார்ந்த நிறுவனங்களும் உறுதியாக இருக்கின்றன. ஆனாலும், லிப்ரா நாணயம் பயன்பாட்டுக்கு வந்ததன் பின்னராகவே, இந்த நிலைப்பாட்டின் உண்மைத்தன்மையை அறிந்துகொள்ள முடியும்.   

எவ்வாறு பயன்படுத்தலாம்?

லிப்ரா மெய்நிகர் நாணயம் அறிமுகமாகின்றபோது, அதைக் கொள்வனவு செய்வதற்கு ஆரம்பத்தில் Visa, Mastercard சேவைகளைப் பயன்படுத்தி, உங்களது சொந்தப் பணத்தை லிப்ரா மெய்நிகர் நாணயமாக மாற்றிக்கொள்ள முடியும். எனவே, லிப்ரா நாணயத்தை ஆரம்பத்தில் பயன்படுத்த, தற்போது பாவனையிலிருக்கும் பணத்தின் தேவைப்பாடு அவசியமாகும்.   

நன்மைகள்

 லிப்ரா மெய்நிகர் நாணயமானது, உங்களது கொடுக்கல்வாங்கல் செயல்பாடுகளை எவ்விதமான இடையூறுமின்றி இலகுவாகக் கொண்டு நடத்த, மிகப்பெரும் உறுதுணையாக அமையும். குறிப்பாக, நீங்கள் நாளாந்தம் சாதாரணமாகப் பயன்படுத்தும் facebook, messanger, what’s app போன்ற செயலிகளின் மூலமாக, வெளிநாடுகளிலிருக்கும் எந்தவொரு நபருக்கும் மிகக்குறைந்த அல்லது எவ்விதமான சேவைக் கட்டணமுமில்லாமல் நொடிப்பொழுதில் பணப்பரிமாற்றத்தை நிகழ்த்தக் கூடியதாயிருக்கும்.   

அத்துடன், குறித்த லிப்ரா மெய்நிகர் நாணயமானது, தனித்து பேஸ்புக் வலைப்பின்னலுடன் மாத்திரம் மட்டுப்படுத்தப்பட போவதில்லை. குறிப்பாக, லிப்ரா அமைப்பின் அங்கத்துவம் கொண்ட அனைத்து நிறுவனங்களுமே பயன்படுத்தும் மெய்நிகர் நாணயமாக இருக்கப்போகின்றது.

தற்போதுபோல நீங்கள் வழங்கும் கடனட்டை தொடர்பான விவரங்கள், வங்கி விவரங்கள், உங்கள் இரகசிய விவரங்களை நீங்கள் எதிர்காலத்தில் அனைவருக்கும் வழங்கவேண்டிய தேவையிருக்காது. தனியே, லிப்ரா நாணயத்தின் மூலமாக மட்டுமே கொடுக்கல், வாங்கல்களைச் செய்துகொள்ள முடியும்.   

அமெரிக்க டொலரைப் போல பொது நாணயமாக மாற்றமடையுமா? 

உண்மையில், இந்தக் கேள்விக்கு தற்போதைய நிலையில் பதிலளிக்க முடியாது. லிப்ரா பாவனைக்கு வரும்போதுதான், இதை உறுதியாகக் கூற முடியும். ஆனால், அமெரிக்க டொலருக்கு நிகராக, லிப்ரா பாவனையை கொண்டுவரக் கூடியவகையிலே, பேஸ்புக் தனது அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகின்றது என்பது வெளிப்படையாக உள்ளது.

குறிப்பாக, பேஸ்புக் பாவனையாளர்கள், வங்கி கணக்குகளே இல்லாது வாழும் சுமார் 1.7 பில்லியன் மக்களுமே, இந்த லிப்ரா நாணயத்தின் இலக்காக உள்ளது. இந்த இலக்கை அவர்கள் அடைவார்களாயின், நிச்சயமாக அமெரிக்க டொலருக்கும், ஏனைய நாடுகளின் நாணயங்களும் இணையாக லிப்ரா உருவாக்கம் பெறுவதைத் தடுக்க முடியாது.     


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .