Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
ச. சந்திரசேகர் / 2018 நவம்பர் 08 , மு.ப. 01:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாட்டில் ஏற்பட்டுள்ள திடீர் அரசியல் மாற்றம், தளம்பல் நிலை காரணமாக வெளிநாட்டு நிதியுதவிகள் எதிர்வரும் ஆண்டில் கிடைப்பது கடினமான காரியமாக அமைந்திருக்கும் என பொருளாதார வல்லுநர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.
குறிப்பாக, அடுத்த ஆண்டில் இலங்கை பெற்றுக் கொண்ட கடனில் பெருமளவு தொகையை மீளச் செலுத்த வேண்டியுள்ள நிலையில், சர்வதேச மட்டத்தில் நிலவும் பொருளாதார நெருக்கடியான சூழல், புதிய அரசாங்கத்தின் திடீர் பொறுப்பேற்பு மற்றும் பொருட்களின் மீதான வரிக்குறைப்பு போன்ற செயற்பாடுகள் நாட்டின் பொருளாதார நிலையில் மோசமான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்தி, கடன் சுமையிலிருந்து மீட்டெடுப்பதற்கு இந்த புதிய அரசாங்கம் முன்னெடுக்கவுள்ள செயற்பாடுகள் குறித்து உடனடியாக அறிந்து கொள்ள முடியாதுள்ள நிலையில், ஏற்றுமதியை ஊக்குவித்து, உள்நாட்டு விவசாயத்துறையை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என ஏற்கனவே அறிவித்துள்ளது.
ரூபாயின் பெறுமதி அமெரிக்க டொலருக்கு நிகராக மதிப்பிழந்து வந்த நிலையில், இலங்கை மத்திய வங்கி தன்வசம் கொண்டிருந்த வெளிநாட்டு நாணய தேக்கங்களை விற்பனை செய்திருந்ததினூடாக இலங்கை ரூபாயின் பெறுமதியை மேலும் வீழ்ச்சியடையாமல் பேணுவதற்கு இந்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருந்தது.
இந்தச் செயற்பாட்டின் காரணமாக பணவீக்கம் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் அதிகளவு காணப்படுவதுடன், இதைக் கட்டுப்படுத்துவதற்காக இலங்கை மத்திய வங்கியினால் நாணயமாற்றுக் கொள்கையில் இறுக்கமான விதிமுறைகள் அறவிடப்படலாம். இதனால் எதிர்காலத்தில் வட்டி வீதங்களில் அதிகரிப்புகள் ஏற்படக்கூடும்.
வெளிநாட்டு தேக்கங்களை விற்பனை செய்து நாட்டின் பண அலகை உறுதி செய்வது என்பது உள்நாட்டு ஒழுங்குபடுத்துநரால் மேற்கொள்ளக்கூடிய இறுதியான செயற்பாடாக அமைந்திருக்கும். ஆரம்பத்தில் உள்நாட்டு வங்கிகளுக்கு டொலரில் அழுத்தத்தை ஏற்படுத்தக்கூடிய கொடுக்கல் வாங்கல்களை கட்டுப்படுத்துமாறு அறிவுறுத்தப்படும்.
ஏற்றுமதியை ஊக்குவித்து, இறக்குமதியை கட்டுப்படுத்துவதற்கான வழிமுறைகள் முன்னெடுக்கப்படும். இவ்வாறான செயற்பாடுகளை கடந்த மாதங்களில் அவதானிக்க முடிந்தது. குறிப்பாக அரசாங்க துறையில் பணியாற்றுவோருக்கான வாகன இறக்குமதி அனுமதியை மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தியிருந்ததுடன், வாகன இறக்குமதிகளை மேற்கொள்ளும் நிறுவனங்களுக்கு தமது இறக்குமதி செயற்பாடுகளின் போது முகப் பெறுமதியில் முழுத் தொகையை வெளிப்படுத்த வேண்டும் என்ற நிபந்தனையும் விதிக்கப்பட்டிருந்தது.
இதனூடாக வாகன இறக்குமதிகளினூடாக ரூபாயின் மீது ஏற்படக்கூடிய அழுத்தத்தை குறைப்பது அரசின் நோக்கமாக அமைந்திருந்தது.
வெளிநாட்டு முதலீட்டாளர்கள் கொண்டுள்ள பங்குகளை படிப்படியாக விற்பனை செய்து வருவதை கடந்த வாரம் முழுவதும் இடம்பெற்ற பங்குச்சந்தை கொடுக்கல் வாங்கல்களிலிருந்து அவதானிக்கக்கூடியதாக இருந்தது. இதனூடாக ஒக்டோபர் மாத நிதி வெளிச்செல்கை 39.7 மில்லியன் அமெரிக்க டொலர்களாக அமைந்திருந்ததை காண முடிந்தது.
நீண்ட கால கால அடிப்படையில் கொழும்பு பங்குச்சந்தையில் முதலீடுகளை மேற்கொண்டிருந்தவர்கள் தமது பங்குப்பரிவர்த்தனை நடவடிக்கைகளினூடாக இலாபமீட்டிய போதிலும், அவற்றை தமது நாட்டு நாணயத்துக்கு மாற்றும் போது, பணப் பெறுமதி இறக்கத்தின் காரணமாக இழப்பை எதிர்கொள்ள நேரிடுகின்றது.
அத்துடன், தொடர்ந்து உள்நாட்டு நாணயத்தின் பெறுமதி சரிவடைந்து செல்வதற்கான வாய்ப்புகள் அதிகளவு காணப்படும் நிலையில், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் அதிகளவு நட்டத்திலிருந்து தம்மை பாதுகாத்துக் கொள்ளும் வகையிலும் உள்நாட்டு சந்தையிலிருந்து தம்மை விடுவித்துக் கொள்ளும் வகையில் பங்கு விற்பனையில் ஈடுபடுவதுண்டு.
இலங்கைக்கு நிதியுதவிகளை வழங்கும் பிரதான அமைப்புகளில் ஒன்றாக சர்வதேச நாணய நிதியத்தை குறிப்பிட முடியும், நாட்டின் அபிவிருத்தி செயற்பாடுகளுக்காக நிபந்தனைகளுடனான ஆறு கட்ட நிதித் தொகையை வழங்க இந்த நிதியம் உடன்பட்டிருந்ததன் பிரகாரம், இறுதிக்கட்ட கொடுப்பனவு 250 மில்லியன் அமெரிக்க டொலர்கள் விரைவில் இலங்கைக்கு வழங்கப்படவுள்ளது.
இதற்காக விதிக்கப்பட்ட நிபந்தனைகளை அடிப்படையாகக் கொண்டே எரிபொருள் விலைச் சூத்திரம் கூட வடிவமைக்கப்பட்டிருந்தது. மின்சாரக் கட்டணத்துக்கும் இவ்வாறான சூத்திரமுறையொன்று அறிமுகம் செய்யப்பட வேண்டும் என அந்த நிபந்தனையில் குறிப்பிடப்பட்டிருந்தது. இவ்வாறான செயற்பாடுகளினூடாக, அரசாங்கத்துக்கு நிலையான வருமானம் கிடைப்பதுடன், அரச ஸ்தாபனங்கள் நட்டத்தில் இயங்குவதை தவிர்த்துக் கொள்வதே சர்வதேச நாணய நிதியத்தின் குறிக்கோளாக அமைந்திருந்தது.
இந்நிலையில் நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றங்கள் அவற்றின் காரணமாக ஏற்பட்டுள்ள பொருளாதார சூழல் நிலைகள் குறித்து சர்வதேச நாணய நிதியம் கவனம் செலுத்தி வருவதுடன், இந்த இறுதிக்கட்ட கொடுப்பனவை மேற்கொள்வது தொடர்பில் உள்நாட்டில் காணப்படும் தொழில்நுட்ப பங்காளர்களுடன் கலந்துரையாடி தீர்மானம் மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.
22 minute ago
40 minute ago
44 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
40 minute ago
44 minute ago