2025 ஓகஸ்ட் 07, வியாழக்கிழமை

டொலருக்கு எதிராக இலங்கையின் நாணயமாற்று நிலை

அனுதினன் சுதந்திரநாதன்   / 2018 மார்ச் 05 , பி.ப. 10:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்த வாரத்தில், இலங்கையின் நாணயமாற்று விகிதமானது, ஒரு டொலருக்கு சுமார் 157 ரூபாய் எனும் அதியுச்ச நிலையைத் தொட்டிருந்தது. இதுதான், இலங்கையின் நாணயப்பெறுமதி வரலாற்றில் மிகக் குறைவாக வீழ்ச்சியடைந்த சந்தர்ப்பமாக, ஒவ்வோர் ஊடகங்களாலும் வெளியிடப்பட்டுமிருந்தது. 

ஒவ்வொரு தடவையும் டொலருக்கு எதிராக இலங்கையின் நாணயமாற்று வீதம் வீழ்ச்சியடையும்போது, இதையே, ஊடகங்களும் நாமும் கூறி வருகின்றோம். அதுமட்டுமல்லாது, இது நடைபெறும்போதெல்லாம், கடந்த அரசாங்கத்தின் கடன் மற்றும் தற்கால அரசாங்கத்தின் வினைத்திறனின்மை போன்ற இரண்டு குற்றச்சாட்டுகளையே நாம் கூறி வருகின்றோம். 

ஆனால், இதன் உண்மை நிலையையும் நாணயச் சந்தைக்குள் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் தொடர்பிலும் நாம் எப்போதாவது அறிந்திருக்கின்றோமா?.  

நாணயக் கொள்வனவும் விற்பனையும்

எந்தவொரு சந்தையிலுமே, அந்தந்த சந்தைகளுக்கேற்ப சொற்பதங்கள் வேறுபட்டதாக இருந்தாலும் அடிப்படையான விடயம், கொள்வனவு மற்றும் விற்பனையிலேயே தங்கியிருக்கிறது. பெரும்பாலும், நாணய மாற்றுச் சந்தையில் (Exchange Market), கொள்வனவை கேள்வி என்றும் விற்பனையை நிரம்பல் என்றும் வகைப்படுத்துவார்கள். எனவே, சந்தையில் கேள்வி நிலை ஏற்படுத்தப்படும்போது, எவ்வாறு நிரம்பல் அதற்கேற்ப செயற்படுமோ, அப்படித்தான் நாணய மாற்றுச் சந்தையிலும் இடம்பெறுகிறது. 

இதன்போது, சாதாரண சந்தை நிலைவரத்துக்கும் நாணயமாற்று சந்தை நிலைவரத்துக்கும் சிறிய வேறுபாடே உள்ளது. சாதாரண சந்தையில், பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகளை நாம் கையாளுகின்றோம். நாணய மாற்றுசந்தையில், பொருட்கள் மற்றும் சேவைகளுக்குப் பதிலாக, ஒவ்வொரு நாட்டு நாணயத்தின் பெறுமதியையும் கையாளவேண்டியதாக இருக்கும். அதையே நாம் நாணய மாற்றுவிகிதம் (Exchange Rate) எனக் குறிப்பிடுகிறோம்.  

எனவே, நாணயமாற்று சந்தையில், ஒரு நாணயத்துக்குக் கேள்வி அதிகரிக்கும்போது, அதன் பெறுமதியில் அதிகரிப்பு ஏற்படுவதுடன், நிரம்பல் அதிகரிக்கும்போது, அதன் பெறுமதியில் வீழ்ச்சி ஏற்படவும் செய்கிறது. அதாவது, சந்தையின் கேள்வியும் நிரம்பலும் ஒவ்வொரு நாணயத்தின் குறித்த நேரத்திலான பெறுமதியை தீர்மானிக்கின்றது. அதுபோல, சந்தையில் யாரேனும் தலையீடு செய்யும்போதோ அல்லது புறக்காரணிகள் தாக்கம் செல்லுத்தும்போதோ, விலைகள் மாற்றத்துக்குள்ளாகும்.  

இது, இலங்கை ரூபாய், அமெரிக்க டொலர் சந்தைக்கும் பொருத்தமானதாக அமைகிறது. இந்தச் சந்தையில், அமெரிக்க டொலருக்கான கேள்வி அதிகரிக்கும்போது, அதன் விலையும் அதிகரிக்கிறது. இதன்காரணமாக, ஓர் அமெரிக்க டொலரை கொள்வனவு செய்ய, முன்பு செலவிட்ட இலங்கை ரூபாயை விடவும் அதிகமாக செலவிடவேண்டிய நிலை உருவாகிறது. இந்த நிலையை, டொலருக்கு எதிரான இலங்கை ரூபாயின் பெறுமானத்தேய்வு எனக் கூறலாம்.  

மேற்கூறிய நிலைக்கு நேர்மாறாக, அமெரிக்க டொலருக்கான கேள்வி குறைந்தாலும் சரி, இலங்கை ரூபாயின் கேள்வி அதிகரித்தாலும் சரி அது டொலரின் பெறுமதியைக் குறைவடையச் செய்யும். இதன்போது, ஒரு டொலரை நாம் கொள்வனவு செய்யச் செலவிடும் இலங்கை நாணயத்தின் பெறுமதி குறைவடையும். இதனை நாம் பெறுமானவுயர்ச்சி எனக் கூறலாம்.  

நாணயங்களை விற்பனை, கொள்வனவு செய்பவர்கள் யார் ?

நாணயச் சந்தை தொடர்பிலும் அதன் தொழிற்பாடுகள் தொடர்பிலும் ஒரு தெளிவுநிலை வரும்போது, அடுத்தகட்ட கேள்விகள் எழுவது சாதாரணமான ஒன்றாகும். குறிப்பாக, பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான சந்தையில், அதனை விற்பனை செய்யவும் கொள்வனவு செய்யவும் வாடிக்கையாளர்களும் உற்பத்தியாளர்களும் இருப்பார்கள். அவ்வாறு நாணயசந்தையில் யார் இருக்கிறார்கள் என்பது பொதுவாக எழுகின்ற ஒரு கேள்வியாகும்.  

உண்மையில் நாணயமாற்றுசந்தை ஏனைய பொருட்சந்தைபோன்று தனி ஒரு குழுவைச் சார்ந்ததாக இருப்பதில்லை. இது, சாதாரண மக்கள், நிறுவனங்கள், அரசதுறை நிறுவனங்கள் என, வெளிநாட்டு நாணயத்தின் தேவையுடைய அனைவராலும் கட்டமைக்கப்பட்டதாகும்.

எனவே, குறித்தநாளில் உங்களுக்கு அமெரிக்க டொலர் தேவையாகவுள்ளபோது, அதனைப் பெற்றுக்கொள்ள, இலங்கை ரூபாயை நீங்கள் பரிமாற்றியிருப்பின், நீங்களும் குறித்த சந்தையில் ஒரு பங்காளர் ஆவீர்கள். அதுபோலத்தான், வெளிநாட்டு வணிகம் மற்றும் வெளிநாட்டு பணப்பரிமாற்றத்தில் ஈடுபட விரும்புவர்கள் எவராயினும், அங்கிகரிக்கப்பட்ட நிறுவனங்களூடாக அமெரிக்க டொலரைப் பெற்று, தமது செயற்பாடுகளை மேற்கொள்ளுகிறார்களெனின், இவர்கள் டொலருக்கான கேள்வியை ஏற்படுத்தும் பகுதியினராக இருப்பார்கள்.  

மறுபுறத்தில், குறித்த நபர்களோ அல்லது வேறு தரப்பினரோ வெளிநாட்டு நாணய வருமானத்தை இலங்கைக்குள் கொண்டு வருபவர்களாக அல்லது அமெரிக்க டொலர்களை இலங்கை நாணயபெறுமதிக்கு மாற்றிக்கொள்ள விரும்புவர்களாக இருப்பார்கள். இவர்கள் டொலருக்கான நிரம்பலை தீர்மானிக்கும் அல்லது ஏற்படுத்தும் பகுதியினராக இருப்பார்கள்.  

இதன்போது, வங்கிகளும் அங்கிகரிக்கப்பட்ட  நாணயமாற்று நிறுவனங்களும் ஓர் இடைத்தரகர்களாகச் செயல்பட்டு, நாணயத்தின் கேள்வி மற்றும் நிரம்பலுக்கு ஏற்பட செயற்படுவார்கள். உதாரணமாக, ஏற்றுமதி வணிகத்தில் ஈடுபடுவர்கள் அந்நிய செலவாணியை உழைத்து, வெளிநாட்டு நாணயமாக இலங்கைக்குள் வங்கிகளின் மூலமாகக் கொண்டுவந்து இலங்கை ரூபாய்களுக்கு மாற்றிக் கொள்ளுவார்கள். இதன்போது, அவர்களால் கொண்டுவரப்பட்ட வெளிநாட்டு நாணயம் அல்லது அமெரிக்க டொலர் வங்கிகளில் இருக்கும். 

மற்றொரு சந்தர்ப்பத்தில், இறக்குமதி வணிகத்தில் ஈடுபடுபவர்கள், தமது வழங்குநர்களுக்கு வழங்க, வங்கிகளில், வெளிநாட்டு நாணயத்துக்கான கேள்வியை ஏற்படுத்துவார்கள். அதன்போது, முன்பே கிடைக்கப்பெற்ற வெளிநாட்டு நாணயத்தை, இவர்களுக்கு வழங்கி, நிரம்பலை பூர்த்தி செய்வார்கள். 

இந்த வங்கிகளும் அதிகாரம்பெற்ற இடைத்தரகர்களும் இவ்வாறு பணப்பரிமாற்றம் நடைபெறுகின்றபோது, சந்தை சூழ்நிலைக்கேற்ப அதன்பெறுமதியைத் தீர்மானிப்பவர்களாக இருப்பார்கள். இவர்கள், சந்தைக்கு ஒவ்வாத வகையில் நாணயத்தின் பெறுமதியைத் தீர்மானிப்பதைத் தவிர்க்க, மத்திய வங்கி, இவர்களை தனது கட்டுபாட்டுக்குள்ளும் கண்கானிப்புக்குள்ளும் வைத்திருக்கும்.  

மேற்கூறிய ஏற்றுமதி-இறக்குமதி உதாரணம், வெறுமனே இலங்கை ரூபாய் மற்றும் அமெரிக்க டொலருக்கான சந்தை, எவ்வாறு உருவாக்கப்படுகிறது என்பதனை காட்டுவதற்காகவே ஆகும். இதைத் தவிரவும், நேரடி வெளிநாட்டு முதலீடுகள், பங்குச்சந்தை முதலீடுகள், வெளிநாட்டு கடன் கொள்வனவுகள் என்பனவற்றின் மூலமாகவும் இந்தச் சந்தை உருவாக்கப்படுகிறது அல்லது நாணயங்களின் பெறுமதி தீர்மானிக்கப்படுகிறது.  

நாணயப் பெறுமதியில் தளம்பலுக்கான காரணம்?

மேற்கூறியவாறு, மத்திய வங்கியால் கட்டுபடுத்தப்பட்ட வகையில், நாணயச் சந்தையின் பெறுமதி தீர்மானிக்கப்படும் வகையில், கேள்வி மற்றும் நிரம்பல் சந்தை உள்ளநிலையில், எவ்வாறு மிகப்பெரும் நாணயப் பெறுமதி தளம்பல் நிலை ஏற்படுகின்றது என்கிற சந்தேகம் உங்களுக்கு உருவாகக்கூடும்.  

என்னதான் மத்திய வங்கி, சந்தையில் அங்கத்துவம் பெற்ற நாணயமாற்று தரகர்களையும் வங்கிகளையும் கட்டுக்குள் வைத்திருந்தாலும், ஓர் அளவுக்குமேலே, புறக்காரணிகளை, மத்தியவங்கியினால் கட்டுக்குள் வைத்திருக்க முடிவதில்லை. ஒரு எல்லைக்கு அப்பால், அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை நாணயத்தின் பெறுமதியை, மீள்உறுதி செய்யவேண்டிய நிலை, இதனால்தான் உருவாகிறது.  

குறிப்பாக, அண்மைகாலத்தில் இடம்பெற்ற தேர்தலின் காரணமாக, ஒரு நிச்சயமற்ற நிலை உருவாகியுள்ளது. இது, மக்கள் மத்தியிலும் முதலீட்டாளர்கள் மத்தியிலும் ஒருவிதமான நிச்சயமற்ற நிலையை உருவாக்கியுள்ளது. இதனால், இறக்குமதியாளர்கள் அச்சம் காரணமாக, இறக்குமதிக்கான பணத்தைச் செலுத்த ஆரம்பிக்க மறுபுறம், அதே அச்சம், ஏற்றுமதியாளர்கள் வெளிநாட்டு நாணயத்தை இலங்கைக்குள் கொண்டுவருவதை குறைக்கவும் செய்திருக்கிறது. இது நிரம்பலில் ஒரு பற்றாக்குறை உள்ளவொரு நிலையாகும். இது தானாகவே, அமெரிக்க டொலருக்கான பெறுமதியை அதிகரிக்கச் செய்கிறது.  

உண்மையில், சந்தையில் நிலவும் ஊகங்கள்தான் பெரிதுமே இவ்வாறு அமெரிக்க டொலர் போன்ற வெளிநாட்டு நாணயங்களின் பெறுமதி அதிகரிப்புக்கு காரணமாக அமைந்துள்ளது. காரணம், இன்று ஒருவர் நாணயமாற்று விகிதத்தை ஆய்வுசெய்கிறார் என வைத்துக்கொள்ளுவோம். அதன்போது, நாணயமாற்றுவிகிதம் அதிகரித்திருப்பின், நாளை இதைவிடவும் அதிகரிக்ககூடும்.

எனவே, இன்றே இலங்கை ரூபாயை, அமெரிக்க டொலராக மாற்றிக்கொள்ளவேண்டும் என முடிவெடுப்பாராயின், அவர்தான் நாளையும் அமெரிக்க டொலரின் பெறுமதி அதிகரிக்க காரணமாக இருப்பார். காரணம், சந்தையில் நிரம்பல் இல்லாதநிலையில், கேள்வியை மேலதிகமாக அதிகரிக்குமொருவராக அவர் இருப்பார்.  

அதுபோல, ஏற்றுமதியாளர் ஒருவர் இன்று அமெரிக்க டொலரின்விலை அதிகரரித்துதானே இருக்கிறது. நாளையும் அமெரிக்க டொலரின் விலை அதிகரிக்கக்கூடும். எனவே, நாளை நான் அமெரிக்க டொலர்களை மாற்றும்போது இன்னும் கூடுதலாக இலங்கை நாணயத்தைப் பெற்றுக்கொள்ளலாம் என கருதுவார். இதன்போது, இவர் சந்தையிலுள்ள கேள்விக்கான இன்றைய நிரம்பலை பூர்த்தி செய்யத் தவறுகிறார். இதன்விளைவாக, நாளை அமெரிக்க டொலர்களின் விலை அதிகரிக்கக் காரணமாக இருக்கிறார்.  

இதுதான், நாணயசந்தையில் நாணயங்களின் பெறுமதி தளம்பல்நிலையை கொண்டுள்ளமைக்கு அடிப்படையான பிரதான காரணமாகும்.

நாணயசந்தையின் தளம்பலைக் கட்டுபடுத்தல்

இலங்கையின் அமெரிக்க டொலருக்கான கேள்வி அதிகரிக்கும்போது, அதன் நிரம்பலை அதற்கேற்றவாறு ஒழுங்கமைக்கவேண்டும். அப்போதுதான், சந்தை விலையை ஒரு சீராக பேணமுடியும். சந்தையில் கேள்வி அதிகரிக்கும்போது, அதற்கேற்ப நிரம்பல் இல்லாதவிடத்து, இலங்கை மத்தியவங்கி தனது அமெரிக்க டொலர் இருப்பை சந்தையில் உட்செலுத்தி சந்தையை சீரடையச் செய்யலாம்.

இதுவும், அமெரிக்க டொலர்கள் போதுமான அளவில் கையிருப்பில் உள்ளபோதில் மாத்திரமே சாத்தியமாகும். மத்தியவங்கி வெளிநாட்டு கடன்களை மீளசெலுத்தவும், சென்மதி பற்றாக்குறையை தீர்க்கவும் பெரிதும் அமெரிக்க டொலர்களை அதிகளவில் பயன்படுத்துவதன் விளைவாக, தற்காலத்தில் மத்திய வங்கியின் அமெரிக்க டொலர்களின் கையிருப்பானது நிச்சயமற்ற நிலையை கொண்டதாகவுள்ளது. இதன்காரணமாக, சந்தையைக் கட்டுப்படுத்துவதில் சிக்கல்நிலை நிலவுகிறது.  

இலங்கை மத்திய வங்கியினால் முழுமையாக தலையீடுகளை மேற்கொள்ள முடியாதவிடத்து, அமெரிக்க டொலரினதும், வெளிநாட்டு நானயங்களினதும் இலங்கை ரூபாய்க்கு எதிரான பெறுமதி சந்தையின் கேள்வி-நிரம்பல் மூலமாகவே தீர்மானிக்கப்படும். இது, வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக இலங்கையின் பெறுமதியை வீழ்ச்சி அடையவே செய்யும்.  

எனவே, மத்தியவங்கியாலும் உதவிட முடியாத சந்தர்ப்பத்தில் நாணய தளம்பலை கட்டுக்குள்வைத்திருக்க என்னவழி என்பதனை அறிந்துகொள்ளவேண்டியது அவசியமாகும். அதற்கு, இலங்கை தனது ஏற்றுமதிகளை அதிகரித்து அதனூடாக ஏற்றுமதி வருமானத்தையும், வெளிநாட்டு முதலீட்டாளர்களை கவர்வதன் மூலமாக, அந்நிய செலவாணிஉள்வாங்களையும் அதிகரிக்க வேண்டியது அவசியமாகிறது.  

எனவே, வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக இலங்கை நாணயத்தின் பெறுமதி குறைவடைகின்றபோது, பொத்தம் பொதுவாக குற்றசாட்டுகளை மட்டுமே அடுக்கிக்கொண்டு செல்லாமல் அதன் உள்ளார்ந்தபூர்வமான விடயங்களை அறிந்துகொண்டு அதன் அடிப்படையில் தகவல் பரிமாற்றங்களை செய்வதானது, வதந்திகளின் அடிப்படையில் நாணயசந்தையில் ஏற்படும் தளம்பல் நிலையை கட்டுக்குள் வைத்திருக்க பெரிதும் உதவும்.    


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .