2024 மே 04, சனிக்கிழமை

தொங்குநிலை அரசியலும் இலங்கை பொருளாதாரமும்

அனுதினன் சுதந்திரநாதன்   / 2018 ஒக்டோபர் 29 , பி.ப. 05:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தப் பத்தியை எழுதிக்கொண்டிருக்கும் வரையில், இலங்கையில் முதல்முறையாக, இரண்டு பிரதமர்கள் ஆட்சியிலிருக்கும் ஒரு சந்தர்ப்பத்தை, இலங்கைப் பிரஜைகளாகிய நாம் அனுபவித்துக்கொண்டிக்கும் சூழ்நிலைக்குள் இருக்கின்றோம்.

மஹிந்த அரசாங்கத்தால், இலங்கைப் பொருளாதாரத்தில் ஏற்படுத்தப்பட்ட அரசியல் நெருக்கடிகளைக் காரணம் காட்டி ஆட்சிபீடமேறிய நல்லாட்சி, தற்போது களையப்பட்டு, மீண்டும் மஹிந்தவின் தலைமையை நோக்கி நகருவதற்கான ஆயத்தங்களை மேற்கொண்டிருக்கிறது.

இந்தநிலை, அரசியலைப் பொறுத்தவரையில் மிகப்பெரும் நகர்வாகக் கணிக்கப்பட்டாலும் இலங்கைப் பொருளாதாரத்தைப் பொறுத்தவரை, மிகப்பெரும் மாற்றத்தைத் தருவதற்கான எந்த அறிகுறியையும் நமக்குத் தரவில்லை என்பதே உண்மையாக இருக்கிறது.  

அதிகாரமா? மக்களா?

2019ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்தை, நாடாளுமன்றத்தில் சமர்பிப்பதற்கான நாள் நெருங்கிக் கொண்டிருக்கும் வேளையில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் இந்த மாற்றமானது, நாட்டு மக்களது நலனுக்கு மேலாக, நாட்டின் பொருளாதாரத்துக்கு மேலாக, அதிகாரத்தின் மீது, அரசியல்வாதிகள் கொண்டுள்ள மோகத்தையேக் காட்டுகிறது.

அரசியல் ரீதியாக, தமது இருப்பைத் தக்கவைத்துக் கொள்ளவும் எதிர்கால தனிநபர் சுயநலன்களை அடிப்படையாகக்கொண்டு, அரசியல்வாதிகள் ஆடும் இந்தச் சதுரங்க ஆட்டத்தில், மக்கள் வெறும் பகடைக்காய்களாகப் பயன்படுத்தப்படப் போகிறார்கள் என்பதே நிதர்சனமான உண்மை.  

தற்போதைய நிலையில், மீண்டும் நாடாளுமன்றம் கூடுவதற்கான அதிகபட்ச வாய்ப்புகள், நவம்பர் மாதம் 16ஆம் திகதியாகவே உள்ளது. இதன்போது, மக்கள் நலனுக்காக, பாதீட்டுத் திட்டம் முன்வைக்கப்படப் போவதில்லை. மாறாக, அரசியல் பெரும்பான்மையை நிரூபிப்பதற்கானப் போட்டியே இடம்பெறப்போகிறது.

இதன்போது, ரணில் தரப்பு வெற்றிபெற முடியாத பட்சத்தில், புதிய அமைச்சரவை அமைந்ததன் பின்னதாகவே, இலங்கை மக்களுக்கான பாதீடு தொடர்பில், அரசியல்வாதிகளால் கவனம் செலுத்த முடியும். இல்லாவிடின், புதிய தேர்தலொன்றை மக்கள் எதிர்கொண்டதன் பின்னதாகவே, இலங்கைக்கான புதிய பாதீடு கிடைக்க வாய்ப்பிருக்கிறது.

இந்நிலை, கடந்த 2015ஆம் ஆண்டுக்கு ஒப்பான நிலையாகவிருந்தாலும், இலங்கையின் பொருளாதாரம் அப்போதைய நிலையைவிடவும் மிகமோசமான நிலையிலேயே உள்ளது.   

இலங்கைப் பொருளாதாரத்தைப் பொறுத்தவரையில், நீண்டகால திட்டங்களுக்கு ஒப்பாக, குறுங்காலத் திட்டங்களை வகுக்கவேண்டியதும், அமுல்படுத்த வேண்டியதுமானக் காலகட்டத்தில் இருக்கின்றோம். 

ஆனால், இந்த புதிய அரசியல் குழப்பம், இதற்கான அனைத்து வழிகளையும் அடைத்துவிடுவதாக இருக்கிறது. இதன் காரணமாக, இந்த மோசமான நிலையை அனுபவிக்கப் போகிறவர்களாக, இலங்கையின் சாமானிய மக்களே இருக்கப்போகிறார்கள். எனவே, இலங்கை அரசியல்வாதிகள் தமது அரசியல் அதிகார அபிலாஷைகளுக்கு முன்னால், மக்களும் நாட்டின் பொருளாதாரமும் ஒன்றுமில்லை என்பதை, நிருபித்துள்ளார்கள்.  

சர்வதேசமா? சீனாவா?

இலங்கையின் வளர்ச்சியும் செயற்பாடுகளும், சர்வதேச நாடுகளின் உதவியின்றி முழுமைப் பெறுவதில்லை. இதற்கு, மிகப்பெரும் காரணமே, இலங்கையில் சர்வதேச நாடுகள் கால்பதிப்பதன் மூலமாக, இந்து சமுத்திரத்தின் முழுமையான கண்காணிப்பைப் பெற முடிவதுடன், வல்லரசு நாடாக உருவெடுக்கும் இந்தியாவை, இலகுவாகக் கண்காணிக்க முடியும் என்பதே ஆகும்.

மஹிந்தவின் கடந்த கால ஆட்சியில்தான், முதல்முறையாக சீனாவின் தாக்கம், இலங்கையில் மிக அதிகளவில் அதிகரிக்கத் தொடங்கியிருந்தது. இதற்கு மிகமுக்கிய காரணம், சீனா தனது ‘பட்டுப் பாதை’க்கு உருக்கொடுக்க தொடங்கியிருந்தமையே ஆகும். இந்தப் ‘பட்டுப் பாதை’யில், இலங்கையின் அமைவிடம் மிகமுக்கியமானதாகும்.

இதை, சாதகமாகப் பயன்படுத்திகொண்டு, மஹிந்த அரசாங்கம், இலங்கைக்கான நிதியை, வரையறையின்றி பெற்றுக்கொள்ள, சூழ்ச்சிகள் நிறைந்த நிதியுதவியுடன், சீனாவும் இலங்கைக்குள் மெல்ல மெல்லக் காலூன்றத் தொடங்கியிருந்தது. இடைநடுவே, மஹிந்தவின் ஆட்சி முடிவுக்குவர, நல்லாட்சி அரசாங்கத்தின் வழியாக, ஏனைய சர்வதேச நாடுகள், சீனாவின் ஆதிக்கத்தைக் குறைக்க முற்பட்டதுடன், தமது இருப்பைப் பலப்படுத்திகொள்ள ஆரம்பித்திருந்தன.

இதன்காரணமாகத்தான், மஹிந்த காலத்தில் தான் வழங்கிய கடன்களுக்கான வட்டி மீள்செலுத்துகையில், மிக இறுக்கமான தன்மையை, சீனா கடைப்பிடிக்க தொடங்கியதுடன், அரசாங்கத்துக்கும் நெருக்கடிகளைக் கொடுக்க ஆரம்பித்திருந்தது.

இதை நிவர்த்திக்க, நல்லாட்சி அரசாங்கம், சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை நாடவேண்டிய சூழ்நிலையும் ஏற்பட்டிருந்தது. தற்போதைய அரசியல் சூழ்நிலையில், மீண்டும் மஹிந்த ஆட்சிக்கு வரும் சூழ்நிலை உருவாகியுள்ள நிலையில், சர்வதேச நாடுகளுக்கும் சீனாவுக்குமான அதிகாரத்தை நிலைநாட்டும் போட்டிக்கு, மீண்டும் இலங்கையின் கதவுகள் திறக்கப்பட்டிருக்கிறது.  

ஒருவேளை, மஹிந்தசார் ஆட்சி, எதிர்காலத்தில் இலங்கையில் அமையுமாயின், சீனாவின் சலுகைக,ள் இலங்கைக்கு கிடைக்கப்பெறுவதுடன், இலங்கையில் கட்டுக்குள்ளிருக்கும் சீனாவின் அதிகாரம் மீளவும் பரவ ஆரம்பிக்கும். அத்துடன், தற்போது நல்லாட்சி சார்ந்திருக்கும் சர்வதேச நாணய நிதியமும், சர்வதேச நாடுகளும் இலங்கையின் எதிரியாக மாறுவதற்கான வாய்ப்புகள் ஏற்படும்.

இது இலங்கைக்கு கிடைக்கப்பெற்ற GSP+ சலுகைகள் உட்பட, இன்னும்பிற நலன்களையும் பாதிப்பதாக அமையும். மாறாக, ரணில் தலைமையிலான ஆட்சி அமையுமாயின் சீனாவின் அழுத்தங்களை எதிர்கொள்ள வேண்டியதாகவிருக்கும்.  

மேற்கூறிய இரண்டு நிலைமைகளாலும், மஹிந்தாவுக்கோ அல்லது ரணிலுக்கோ ஆதாயங்கள் ஏதும் கிடைத்தாலும் இழப்புகள் ஏதும் ஏற்படப் போவதில்லை. மாறாக, இழப்புகள், நெருக்கடிகள் என அனைத்துமே, இலங்கைப் பொருளாதாரத்தின் மீதும், சாமானிய மக்கள் மீதும் கடத்தப்படுமே தவிர, தமது சுயநலனுக்காகச் செயற்படும் அரசியல்வாதிகளை, இது ஒருநாளும் பாதிக்காது.

எனவே, குழம்பிய குட்டையாகவுள்ள இலங்கை அரசியலில் சர்வதேசமோ சீனாவோ ஆதாயம் தேடிக்கொண்டாலும், இடைநடுவே மாட்டிக்கொள்ளப்போவது, இலங்கையின் பொருளாதாரமும் சாமானிய மக்களுமே ஆவார்கள்.

எனவே, இலங்கையராக நீங்கள் எந்த அரசியல் கட்சியைச் சார்ந்திருந்தாலும் இலங்கைப் பொருளாதாரத்தின் வீழ்ச்சி, கட்சி பேதமின்றி அனைவரது பொருளாதார நலன்களையும் பாதிக்கும் என்பதே உண்மை.  

இலங்கை பொருளாதாரத்தின் எதிர்காலம்?

இலங்கையின் இந்த அரசியல் குழப்பநிலை மிகப்பாரிய அளவில் பொருளாதாரத்தை வீழ்ச்சிப் பாதைக்குக் கொண்டு செல்வதற்கான அதிக சாத்தியப்பாடுகளை, குறுங்காலத்தில் கொண்டிருக்கின்றது. 

மிகமுக்கியமாக, இந்த அரசியல் குழப்பநிலை காரணமாக, வெளிநாட்டு முதலீடுகள் இலங்கைக்குள் வருவது தாமதமாவதுடன், ஏற்கெனவே பங்குச்சந்தை உட்பட ஏனைய நிதிமூலங்களில் முதலீடு செய்யப்பட்டிருக்கும் முதலீடுகள் இலங்கையைவிட்டு வெளியேற வாய்ப்பாக அமையும்.

இது வெளிநாட்டு நிதி முதலீடுகளை நம்பியிருக்கும் இலங்கைப் பொருளாதாரத்துக்கு மிகப்பெரும் பாதகமாக இருக்கும். வெளிநாட்டு முதலீடுகள் வெளியேறுகையுடன் சேர்த்து, அரசியல் குழப்பமும் இலங்கை நாணய மதிப்பிறக்கத்துக்கு வலுசேர்ப்பதாக இருக்கிறது. இது அமெரிக்க டொலர் பெறுமதி தொடர்ந்தும் அதிகரித்து செல்வதற்கு வழிவகுக்கும்.   

மேற்கூறிய நிலைமைகளானது, இலங்கை பொருளாதாரத்தில் ஒரு சங்கிலிப் பிணைப்பை போன்றதாக இருக்கின்றது. இவை அனைத்துமே, இறுதியாக இலங்கையின் சாமானிய மக்களை பாதிப்பதாகவே அமைந்திருக்குமே தவிர, இன்று அதிகாரப்போட்டியில் வெற்றிபெறத் தயாராகிக் கொண்டிருக்கும் அரசியல்வாதிகளை அல்ல என்பதை மனதில் கொள்ளுங்கள்.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .