2025 ஓகஸ்ட் 01, வெள்ளிக்கிழமை

நிதி உதவிகளுக்கு மீண்டும் சீனாவை நாடும் இலங்கை

Editorial   / 2019 மே 29 , பி.ப. 07:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

2019ஆம் ஆண்டில் ஆரம்பமாகியிருந்த கடன் மீளச் செலுத்தும் நடவடிக்கையைத் தொடர்ந்து நிவர்த்தி செய்வதற்காக மீண்டும் சீனாவை, இலங்கை நாடியுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. இதன் பிரகாரம் இந்த ஆண்டில் குறித்த கடன் தொகை இலங்கைக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.   

ஏற்கெனவே ஐந்து பில்லியன் அமெரிக்க டொலர்கள் சீனாவிடமிருந்து கடனான இலங்கை பெற்றுள்ள நிலையில், மேலும் கடன் பெற்றுக் கொள்வதனூடாக சீனாவின் ஆதிக்கத்துக்குள் இலங்கையை மேலும் திகழச் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இலங்கையின் மொத்த வெளிநாட்டுக் கடனில் 15 சதவீதம் சீனாவிலிருந்து கிடைத்துள்ளது. இதனூடாக இலங்கையின் மாபெரும் கடன் வழங்குநராக சீனா திகழ்வதுடன், அபிவிருத்திக்கு அவசியமான நிதியைப் பெற்றுக் கொடுப்பதில் பெருமளவு பங்களிப்பு வழங்குவதாக நிதி அமைச்சின் அதிகாரிகள் குறிப்பிட்டனர்.  

சிரேஷ்ட அதிகாரி ஒருவர் குறிப்பிடுகையில், சீனாவிலிருந்து பெறப்பட்ட கடன்களில் 61.5 சதவீதமானவை சலுகைக் கட்டணத்தில் அமைந்துள்ளன. இவை சர்வதேச சந்தைகளில் காணப்படும் கட்டணங்களை விட மிகவும் குறைவாக அமைந்துள்ளன.

சீனாவிடமிருந்து பெற்றுக் கொள்ளப்படும் வணிகக் கடன்கள், சர்வதேச சந்தைக் கட்டணங்களை விட குறைந்த பெறுமதியில் வழங்கப்படுவதை உறுதி செய்வதாக அவர் குறிப்பிட்டார்.  சீனா வழங்கும் கடன்கள் 1 சதவீதம் முதல் 0.5 சதவீதம் வரையான வட்டியில் அமைந்துள்ளன.

சீனாவிடமிருந்து நீண்ட கால அடிப்படையில் மீளச் செலுத்தும் வகையில் 2-3 சதவீத வட்டியில் பெற்றுக் கொள்ளும் கடன் திட்டங்கள் மாத்திரமே தற்போது இலங்கை அரசாங்கத்துக்கு காணப்படும் ஒரே தெரிவாக அமைந்துள்ளதாகப் பொருளாதார ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.   

12-15 வருட கால தவணையில் 2-5 வருட காலக்கெடு பிரகாரம் LIBOR புள்ளிகளின் அடிப்படையில் சலுகை முறையில் கடன்களை இலங்கை பெற்றுள்ளது. சீனாவின் ஏற்றுமதி-இறக்குமதி வங்கி இலங்கைக்கு 989 மில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாக வழங்க உடன்பட்டிருந்தது. இது மத்திய அதிவேக நெடுஞ்சாலை திட்டத்தின் - 1 பிரிவின் மொத்த மதிப்பிடப்பட்ட செலவான 1.16 பில்லியன் அமெரிக்க டொலர்களில் 85 சதவீதமாகும். வங்கியால் அனுமதிக்கப்பட்ட ஒற்றைப் பாரிய கடன் தொகையாக இது அமைந்துள்ளதாக அமைச்சின் அதிகாரி தெரிவித்தார்.  

வெளிநாட்டு நேரடி முதலீடுகளைக் கவர்வது, ஏற்றுமதிகளை அதிகரிப்பது போன்ற தற்போது அழுத்தத்துக்கு உள்ளாகியிருக்கும் துறைகளை நிர்வகிப்பதற்கான மூலதனக் கணக்கை வலிமைப்படுத்தும் நோக்கில் 300 மில்லியன் அமெரிக்க டொலர்களை சீனா வங்கியிடமிருந்து பெற்றுக் கொள்வதற்கான முயற்சிகள் தற்போது இடம்பெறுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .