2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

பாகம்-2: பாதீடு 2019 - ஒரு பார்வை

அனுதினன் சுதந்திரநாதன்   / 2019 மார்ச் 19 , பி.ப. 04:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்த வாரத்தில், பாதீடு 2019இல் அமுலுக்கு வந்துள்ள வரிகளும் அதுசார் நிவாரணங்களும், எந்தவகையில் நமது நாளாந்தச் செயற்பாடுகளிலும் இலங்கையில் இயங்கிக்கொண்டிருக்கும் வணிகங்களிலும் தாக்கத்தைச் செலுத்துகின்றன என்பதைப் பார்த்திருந்தோம்.

இம்முறை, “மக்களை வலுவூட்டலும் வறியோரைப் பராமரித்தலும்” என்ற தொனிப்பொருளுக்கமைய, பாதீட்டில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள நலத்திட்டங்கள் எவையெனவும் அதன் உள்ளார்ந்த நலன்கள் எவ்வாறானவை என்பதையும் பார்க்கலாம்.   

பெண்களுக்கானவை 

1. ஜூன் 2018ஆம் ஆண்டுக்குப் பின், நுண்நிதிக் கடனில் 100,000 ரூபாய் வரை கடனாகப் பெற்று, தொடர்ச்சியாக மூன்று மாதங்கள் தாம்பெற்ற கடனை மீளச்செலுத்த முடியாத வரட்சியால் பாதிக்கப்பட்டுள்ள பின்வரும் பகுதிகளைச் சேர்ந்த 45,000 பெண்களுக்கு, சுமார் 500 மில்லியன் கடன் நிவாரணம் வழங்கப்படவுள்ளது. 

திருகோணமலை, அம்பாறை, மட்டக்களப்பு, யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி, வவுனியா, மன்னார், குருநாகல், புத்தளம், அநுராதபுரம் மற்றும் பொலன்னறுவை ஆகிய பிரதேசங்களுக்கே, இவ்வாறு நிவாரணம் கிடைக்கப்பெறும்.

2. இலங்கையின் தொழிற்படையில், பெண்களின் பங்களிப்பு 30 சதவீதமாக உள்ளது. திருமணத்துக்குப் பின்பு அவர்களின் குழந்தைகளைப் பராமரிப்பதிலுள்ள சிக்கலே, இந்தச் சதவீதம், மிகக்குறைந்த நிலையிலிருப்பதற்கு மிகப்பிரதான காரணமாகும். இதனை நிவர்த்திக்கும் பொருட்டு, 250க்கும் மேற்பட்ட  ஊழியர்களைக் கொண்ட நிறுவனத்தில், குழந்தைகளைப் பராமரிக்கும் வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டுமென்பது வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும், இதனை நடைமுறைப்படுத்தும் தனியார் நிறுவனங்களுக்கு, “ரக்கவரண” சலுகைக்கடன் திட்டத்தின் கீழ், குழந்தைப் பராமரிப்பு வசதிகளை உருவாக்குவதற்கான வசதிகள் செய்துகொடுக்கப்படும். 

3. பெண்கள், சிறார்களுக்கான அமைச்சின் பரிந்துரையின் பெயரில், தேர்ந்தெடுக்கப்பட்ட பாடசாலைகளுக்கு, பாடசாலைகளுக்குப் பின்னரான விடுமுறை நிலையங்களை உருவாக்கி, சிறார்களின் திறன் விருத்திக்கு உதவ, பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

4. பெண்கள், நிறுவனச் செயற்பாடுகளில் பங்கெடுக்கின்ற அதே சமயத்தில்,  தீர்மானங்களை எடுக்கின்ற உயரிய இயக்குநர் பதவிகளை எட்டுவதில், பல்வேறு தடங்கல்களை எதிர்கொள்ள நேரிடுகிறது. எனவே, அவர்களையும் உயரிய பதவிகளில் உள்வாங்குவதை உறுதி செய்யும் பொருட்டு, பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் இயக்குநர் சபையில், பெண்களின் பிரதிநிதித்துவத்தை, பிணையங்கள், பரிவர்த்தனை ஆணைக்குழுவின் வாயிலாக அமுலாக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

5. தொழிலாளர் சட்டத்தில் மாற்றத்தை ஏற்படுத்துவதன் மூலமாக, பெண்கள், முழுநேரமாக மட்டுமின்றி, வீட்டிலிருந்தே வேலை பார்க்கும் வசதி, தளர்த்தப்பட்ட வகையிலான நேரத்தில் வேலை பார்க்கும் வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க, பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இதன்மூலமாக, அதிகப்படியான பெண்களை வேலைச்சமூகத்தில் கவரத் திட்டமிடப்பட்டுள்ளது.

மேற்கூறிய திட்டங்கள் மூலமாக, பெண்களின் தலைமைத்துவத்தை வீடுகளுக்கு மட்டுமின்றி, நாட்டின் அபிவிருத்திக்கும் பயன்படுத்த, இம்முறை பாதீட்டில் உத்தேசிக்கப்பட்டுள்ளது.

இளையோர்கள், மாற்றுத்திறனாளிகள்,  முதியவர்கள்

1. உயர்தரப் பரீட்சையில் மிகச்சிறந்த பெறுபேற்றைப் பெறுகின்ற விஞ்ஞானம், தொழில்நுட்பம், வாணிபம், கலை உட்பட அனைத்துத் துறைகளைகளில் இருந்தும் முதன்மையான மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, ஹார்வர்ட், MIT, ஒக்ஸ்போர்ட், கேம்பிரிட்ஜ் போன்ற பல்கலைக்கழகங்களுக்கு, அரச செலவிலேயே கற்கைநெறிகளுக்கு அனுப்பிவைக்கப்படுவதுடன், மீளவும் அவர்கள் நாட்டுக்குத் திரும்பி, 10-15 வருடங்கள் சேவையாற்ற வேண்டும் என்கிற நிபந்தனையும் உள்ளடக்கப்படுகிறது.

2. பாடசாலையில் உயர்தரக் கல்வியை முடிக்கின்ற அனைத்து மாணவர்களுக்கும், பல்கலைக்கழக வாய்ப்புகளோ மேற்படிப்புக்கான வாய்ப்புகளோ கிடைப்பதில்லை. எனவே இதனைக் கருத்திற்கொண்டு, இலங்கையின் பல்கலைக்கழகம் தவிர்த்து மேற்படிப்பைப் படிப்பதற்காக, சுமார் 1.1 மில்லியன் ரூபாயை மாணவக் கடனாகப் பெறுவதற்கும் அதனை, 12 வருடங்கள் எனும் நீண்டகால அடிப்படையில் வட்டியற்ற முறையில் செலுத்துவதற்கும் முன்மொழியப்பட்டுள்ளது. இதன்மூலமாக, பல்கலைக்கழகங்களை மட்டுமே தங்கியிருக்கின்றநிலை மாற்றமடைவதுடன், இளையோரை மிகவிரைவாக தொழிற்படையினராகவும் மாற்றமுடியும்.

3. கிராமப்புறங்களிலுள்ள ஆரம்பப் பாடசாலைகளது சிறார்களின் போசணை மட்டத்தை அதிகரிக்கும் பொருட்டு, தினந்தோறும் ஒரு கோப்பைப் பால் வழங்கும் திட்டத்தை அமுலாக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.

4. இதேபோன்று, பட்டதாரிகளாகி வேலையற்றிருக்கும் இளையோர், தாமே முன்வந்து தொழிலொன்றை ஆரம்பிக்கும் வகையில் “எறம்புவா” கடன் திட்டத்தின் கீழ், 1.5 மில்லியன் ரூபாய் மதிப்பிலான வணிகத் திட்டமொன்றை சமர்பிப்பவர்களுக்கு, வட்டியின்றி ஏழு வருடங்களுக்குள் மீள்செலுத்தும் வகையில், கடன் வசதிசெய்து கொடுக்கப்பட்டுள்ளது.  

5. இலங்கையில் அதிகரித்துவரும் முதியோர் எண்ணிக்கையைக்  கருத்திற்கொண்டு, தேசிய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான முன்மொழிவுகள் சமர்பிக்கப்பட்டுள்ளன. இதன்மூலமாக, அரச ஓய்வூதியம் பெறாதவர்களும் நன்மை பெறமுடியும்.

6. பாதிக்கப்பட்ட, சரிவர ஓய்வூதியம் கிடைக்கப்பெறாத சுமார் 585,000 பேரின் ஓய்வூதியத்தைச் சீரமைக்க, சுமார் 12,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

7. மாற்றுத்திறனானிகளுக்கு மாதந்தோறும் வழங்கப்பட்டு வருகின்ற ஒதுக்கத் தொகையானது, 3,000 ரூபாயிலிருந்து 5,000 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

8. மாற்றுத்திறனாளிகளைத் தனியாக ஒத்துக்காமல், வேலைத்தளங்களுக்குள் உள்வாங்கும் நிறுவனங்களுக்கு, அவர்களது வருமான வரியில் விலக்களிக்க முன்மொழியப்பட்டுள்ளது. இதன்பிராகாரம், மாற்றுத்திறனாளிகள் வேலையில் சேர்க்கப்படும் பட்சத்தில், அவர்களின் ஊதியத்தொகையில் 50 சதவீதத்தை,​ தமது வருமான வரி விலக்குக்காக, அந்நிறுவனங்கள் பயன்படுத்திக்கொள்ள முடியும். இதன்மூலமாக, மாற்றுத்திறனாளிகளுக்கான வேலைவாய்ப்புகள் அதிகரிப்பதுடன், நிறுவனங்களின் இலாபமும் பெருக இடமேற்படுகிறது.

ஏனையவை 

1. இலங்கையின் சுகாதாரச் சேவையை முன்னேற்றவும் உலகலாவிய ரீதியில் எழுந்துள்ள தாதிமாருக்கான கேள்வியை, இலங்கையிலிருந்து பூர்த்தி செய்யவும், உலகத் தரத்தில் தாதிமார் பயிற்சி நிலையங்களை அமைப்போருக்கு, அரச கடன் வசதியை வழங்குவதுடன், அதில் பயிற்சிபெறும் தாதிமாருக்கு, பயிற்சி பெறும் முதல் இரண்டு வருடங்களுக்கு, மாதந்தோறும் 10,000/- ரூபாயை மானியமாக வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

2. வீட்டுக்கடன்  திட்டத்தின் மூலமாக, தமது முதலாவது வீட்டைக் கொள்வனவு செய்ய விரும்புபவர்கள், வீட்டை நிர்மாணிக்கத் திட்டமிடுபவர்களுக்கு, 10 மில்லியன் ரூபாயை, 25 வருடங்களில் மீள்செலுத்துகை அடிப்படையில் கடன் வழங்க, அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதற்கு, வருடாந்த வட்டி வீதம் 12 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதுடன், இதில் முதல் ஐந்து வருடங்களுக்கு மட்டும், 7% அடிப்படையில் வட்டி அறவிடப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

3. மேற்கூறியதுபோல, இம்முறை கடன் திட்டத்தில், வெளிநாடுகளில் வேலை செய்யும் இலங்கையர்கள், இலங்கையில் தமக்கான  வீட்டைக் கொள்வனவு செய்ய, வீட்டை நிர்மாணித்துக்கொள்ள  அல்லது உரித்தான வீட்டைச் சீரமைக்க, அதிகபட்சமாக 10 மில்லியன் ரூபாய் கடனை, அரசாங்கம் வழங்குகிறது. இந்தக் கடனை, 15 வருடங்களில் 3% - 5%க்கும் இடைப்பட்ட வட்டி விகிதத்தில் மீளச்செலுத்த வேண்டும்.

4. இயற்கை அனர்த்தங்கள் வாயிலாகப் பாதிக்கப்படும் மக்களுக்கு நிவாரணம் வழங்கவென உருவாக்கப்பட்ட இயற்கைப் பேரழிவுக் காப்புறுதி திட்டத்துக்கு, இம்முறையும் 1,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இதன்போது, எவ்வகையான இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்படுவோரும், உடனடியாக இந்தக் காப்புறுதிப் பணத்தைப் பெற்றுக்கொள்ள முடியும்.

5. கடந்த ஆண்டைப் போல இம்முறையும், பெற்றோலியப் பாவனை ஓட்டோவிலிருந்து மின்பாவனை ஓட்​டோவுக்கு மாற விரும்புவோரை ஊக்குவிக்கும் கடன்வசதி நடைமுறைப்படுத்தபடுவதுடன், குறித்த கடனுக்கான வட்டி வீதத்திலிருந்து 75%, அரசாங்கத்தால் மானியமாக வழங்கப்படும்.

6. அறுவடைக்குப் பின்னரான பயிர்களைச் சேமிப்பதில் ஏற்படும் இழப்பு காரணமாக, பல்வேறு சந்தர்ப்பங்களில், அடிப்படையான பொருள்களைக்கூட இலங்கை அரசாங்கம் இறக்குமதி செய்யவேண்டியதாக உள்ளது. இதைத் தவிர்க்கும் பொருட்டு, முன்னேற்றகரமான களஞ்சியசாலை வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க, 400 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

7. காணாமல் ஆக்கப்பட்டோரது  குடும்பங்களுக்கு நிரந்தரமான தீர்வொன்றைப் பெற்றுத்தரும் வரை, அவர்களது குடும்பச் செலவீனங்களை, ஆதரவளிக்கும் பொருட்டு, மாதந்தோறும் 6,000/- ரூபாய் வழங்க, இந்தப் பாதீட்டில், உத்தேச முன்மொழிவு வழங்கப்பட்டுள்ளது. இதற்கென, 500 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதுடன், காணாமற்போனோர் தொடர்பான பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வை வழங்கவும் அதற்கான அலுவலகத்தை அமைக்கவும், சுமார் 900 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

மேற்கூறிய அபிவிருத்தித் திட்டங்களின் மூலமாக, இலங்கை அரசாங்கமானது, நீண்டகால அடிப்படையிலான பொருளாதார உறுதிப்பாடு ஒன்றை அடைந்துகொள்ள எதிர்பார்க்கிறது. இதன்போது, கடந்தகால அரசாங்கங்களைப் போல வெறுமனே மானியங்களை வழங்கி, குறுங்கால அடிப்படையில் பிரச்சினைக்குத் தீர்வைக் கண்டு, அதனுடன் சார்ந்ததாகப் பொருளாதாரத் தேக்க நிலையை ஏற்படுத்தியது போலல்லாமல், மக்களின் நிலையை நீண்டகால அடிப்படையில் வலுப்படுத்துவதன் மூலமாக, நீண்டகாலப் பொருளாதார முன்னேற்றத்தை அடைய, இந்த பாதீடு வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆனாலும், இத்தகைய பாதீட்டின் வினைத்திறனை, எவ்வளவு தூரத்துக்கு தற்போது ஆட்சியிலுள்ளவர்கள் நடைமுறைப்படுத்துகிறார்கள் என்பதிலேயேதான் தங்கியுள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை ஆகும். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X