Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
அனுதினன் சுதந்திரநாதன் / 2018 ஒக்டோபர் 22 , மு.ப. 01:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையின் பொருளாதாரம் மிகவும் பின்னடைவான நிலையை நோக்கி நகர்ந்துகொண்டுள்ள நிலையில், அப்பொருளாதாரம் ஒரு கடுமையான நெருக்கடியிலும் நிலையானதும் வலுவானதாகவும் இருக்கக்கூடிய வகையில், தீவிர நிலைப்பாடுகளைத் தற்போதைய அரசாங்கம் எடுத்து வருகின்றது.
இந்தத் தீவிரமான நிலைப்பாடுகள், தற்போதைய சர்வதேச பொருளாதார அதிர்ச்சிகளையும் சேர்த்து தாங்கிக்கொள்ளக் கூடியளவுக்கு வலுவாக அமையுமா ? என்பதே தற்போதைய கேள்வியாகும்?
தற்போதைய நிலையில், இலங்கை அரசியலிலும் சரி, சர்வதேச அரசியலிலும் சரி, மக்கள் சார்பற்ற பாராபட்ச அரசியலே தலைதூக்கி நிற்கிறது. இதன்காரணமாக, அரசாங்கத்தின் உண்மையான அபிவிருத்தியையோ, அதுதொடர்பான புள்ளிவிவரங்களையோ கண்டறிவது சிரமமாகவுள்ளது.
ஆட்சி செய்யும் அரசாங்கத்துக்குச் சார்பாகவே புள்ளிவிவரங்களும், சாதனைகளும் வெளியிடப்படுகின்றன. இதன்காரணமாக, உண்மையான அபிவிருத்தியையும் அரசாங்கம் செல்கின்ற தவறான பாதையையும் அறிவதில் சிரமம் ஏற்படுகிறது. இதனால், ஒருநாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சி அடையும் நிலைக்குச் செல்லுகின்ற வரையில், மக்களுக்கு அது தொடர்பில் தெரிந்திருப்பதில்லை. இதற்குத் தற்போதைய இலங்கையும் விதிவிலக்கல்ல.
இலங்கையின் தற்போதைய பொருளாதாரனமானது, சந்தேகத்துக்கிடமின்றி, தன்னகத்தே பல்வேறு பலவீனங்களைக் கொண்டிருக்கிறது. இந்தநிலைக்கு, கடந்த ஆட்சியாளர்களும், தற்போதைய ஆட்சியாளர்களும் காரணமாக இருக்கிறார்கள்.
ஆனால், ஆட்சியாளர்களால் மேற்கொள்ளப்பட்ட தவறுகள், இன்று அடித்தட்டு மக்களையே பாதிப்பதாக உருவெடுத்து நிற்கின்றது. இலங்கையின் பொருளாதாரத்தைப் பொறுத்தளவில், அடிப்படைப் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதில் காணப்படும் பலவீனங்கள், தற்போது சர்வதேச சந்தையில் ஏற்படும் மாற்றங்களைக்கூட, எதிர்கொள்ள முடியாத நிலையை உருவாக்கியிருக்கிறது.
பொருளாதாரத்தின் மிக முக்கிய கூறான, நிதிப் பராமரிப்பு நிலையானது, இலங்கையை பொறுத்தளவில், பலவீனமானதாக இருக்கின்றது. இதனால், வெளிநாட்டு நிதியைச் சரிவரப் பராமரிக்க முடியாத நிலை காணப்படுவதுடன், அவற்றை அரசாங்கம் விரயமாக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால், நமது அந்நியச் செலவாணி, வருமானங்கள் விரயமாக்கப்பட்டு, நாட்டின் நாணயம் மதிப்பிறக்கப்படுவதற்கு வழிகோலியிருக்கிறது.
இலங்கையின் இத்தகைய பொருளாதாரப் பின்னடைவுக்கு மிகமுக்கியமான காரணமாக, வினைத்திறனற்ற பொதுநிதிப் பயன்பாட்டையும் சொல்ல முடியும். தொடர்ச்சியாக மிக நீண்டகாலமாகப் பதவியிலிருக்கும் அரசாங்கங்கள் பொதுநிதியை பொருத்தமான முறையில் பயன்படுத்தாமை காரணமாக, அவை ஒவ்வொரு வருடமும் நிதிப் பற்றாக்குறை வடிவில் சேர்ந்து, இன்று மக்களைத் தாங்கமுடியாத மிகப்பெரும் கடன்சுமைக்குள் ஆழ்த்தியுள்ளது.
இவ்வாறு, பல வருடங்களாக ஒன்றுசேர்ந்த நிதிப் பற்றாக்குறைகள் பொருளாதார ஸ்திரமின்மை, பாரிய பொதுக் கடன், முதலீட்டு, சமூக உள்கட்டமைப்பு தளர்ச்சி, குறைந்த பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றுக்குக் காரணமாக அமைந்துள்ளது.
பெரும்பாலான ஆண்டுகளில், இலங்கை அரசாங்கத்தின் மொத்த வருமானமானது, குறித்த வருடத்துக்கான செலவீனங்களையே ஈடுகட்டப் போதுமானதாகவில்லை என்பதுடன், ஏனைய ஆண்டுகளில் குறித்த வருமானமானது நாட்டின் பெறப்பட்ட 90%மான கடனை, மீளச்செலுத்துவதற்கே பயன்படுத்தப்பட்டது.
இந்தநிலையானது, அரச வருமானங்களை அபிவிருத்தியை நோக்கி பயன்படுத்தவோ, சேமிக்கவோ இடமளிக்கவில்லை. இதன்காரணமாக, நாட்டின் முதலீட்டு அபிவிருத்தி செலவீனங்கள் அனைத்துமே கடனாக பெறப்படுகின்ற நிதி மூலமாகவே மேற்கொள்ளப்பட்டதுடன், அந்த கடன்சுமையும் மக்கள் மீதே சுமத்தப்பட்டு வருகின்றது.
இந்தநிலை 2015ஆம் ஆண்டில், நல்லாட்சி அரசாங்கம் பொறுப்பேற்ற ஆரம்ப வருடங்களில், மேலும் மோசமானதாகவே காணப்பட்டது. உதாரணமாக, 2014ஆம் ஆண்டில் நாட்டின் நிதிப்பற்றாக்குறையானது மொத்த தேசிய உற்பத்தியில் 5.7% மாகவிருந்தது. இது 2015ஆம் ஆண்டில் 7.4%மாக அதிகரித்திருந்தது. இந்த நிலை, 2016ம் ஆண்டில் 5.4%மாக குறைக்கப்பட்டிருந்தாலும். மொத்த தேசிய உற்பத்திக்கு எதிரான நிதிப்பற்றாக்குறையின் அளவானது அதிகரித்த மட்டத்தில் இருப்பதன் விளைவாக, பூரணமாக எதிர்பார்த்த வளர்ச்சி மட்டத்தினை அடையமுடியாத நிலை ஏற்பட்டுள்ளதுடன், இந்தநிலையை தவிர்க்க மேலும் பொதுக்கடன் பெறுவது தவிர்க்க முடியாததாக மாறியுள்ளது.
‘கண்கெட்ட பின் சூரிய நமஸ்காரம்’ என்பதுபோல, இவ்வருடம் சமர்பிக்கப்படவுள்ள பாதீட்டுத் திட்டத்தில் மொத்த தேசிய உற்பத்தியில், நிதிப் பற்றாக்குறைக்கான அளவினை 4.5%மாக குறைக்க அரசாங்கம் முடிவு செய்திருக்கிறது.
காலம் கடந்த இந்த ஞானம், சிறந்தது என்றாலும், கடந்துவந்த காலத்தில் நமது அரசாங்கங்களால் உருவாக்கப்பட்ட நிதிப்பற்றாக்குறையானது மலையளவாக வளர்ந்து நிற்கிறது. இதை நிவர்த்திக்கும் வழிதெரியாது, அரசாங்கம் வழிமாறி நிற்பதே, இன்றைய நிலையில் அனைத்து இலங்கை மக்களும் விலைவாசி உயர்வு, வரி அமுலாக்கல் என்பவற்றால் எதிர்கொள்ளும் சிரமங்களுக்குக் காரணமாகவுள்ளது.
2018ஆம் ஆண்டின் முடிவுக்கு வந்துள்ள இரண்டாவது காலாண்டின் இறுதியில், இலங்கையின் ஒட்டுமொத்த வெளிப்புறக் கடனின் அளவு 53.5 பில்லியன் அமெரிக்க டொலர்களாகும். இது ஒரு அமெரிக்க டொலரானது அண்ணளவாக 160 ரூபாவுக்கு சமனாகவுள்ளபோது கணக்கிடப்பட்ட கடனாகும். தற்போதைய நாணய மதிப்பிறக்கமே இந்தக் கடனை மேலும் அதிகரிக்க கூடிய காரணியாக இருக்கிறது.
இவற்றுக்கு மேலதிகமாக, 2019ஆம், 2020ஆம் ஆண்டுகளில் இலங்கை அரசாங்கம் மீளச் செலுத்த வேண்டிய கடனின் அளவு அண்ணளவாக 4 பில்லியன் அமெரிக்க டொலராக இருக்கின்றது. தற்போதைய, பொருளாதாரமானது, இந்த மீள்செலுத்துகைக்கு இடம்கொடுக்காது என்பதனால், மீண்டும் அரசு கடனாளியாவது, தவிர்க்க முடியாத ஒன்றாகவே இருக்கின்றது.
இந்தநிலையில், ஒரு நாட்டின் நாணயத்தின் பெறுமதியைச் சமநிலையில் பேணும் காரணிகளில் ஒன்றான வெளிநாட்டு நாணய ஒதுக்கமானது, ஒப்பீட்டளவில் குறைவடைந்து கொண்டே செல்கின்றது. இது சர்வதேசத்தின் மத்தியில், இலங்கை நாணயத்தின் மதிப்பிறக்கத்துக்கு வழிகோலுவதுடன், நாட்டின் அபிவிருத்தியையும் தடைப்படுத்துவதாக அமைந்துள்ளது.
குறிப்பாக, சுமார் 10 பில்லியன் அமெரிக்க டொலர்களை வெளிநாட்டு நாணய ஒதுக்கமாக கையிருப்பாக கொண்டிருந்த நாம், தற்போதைய நிலையில் 5-7 பில்லியன் அமெரிக்க டொலர் வெளிநாட்டு நாணயங்களை மட்டுமே கையிருப்பாகக் கொண்டிருக்கின்றோம். இதனால், நமது நாட்டு நாணயத்தின் பெறுமதி வீழ்ச்சியடைவதை தவிர்க்க முடியாதுள்ளது.
இலங்கையை பொறுத்தவரையில், அண்மையகாலத்தில் ஏற்றுமதி வருமானத்தை விடவும், இறக்குமதி செலவீனங்கள் மிகப்பாரிய அளவில் அதிகரித்திருக்கின்றது.இது நாட்டின் சென்மதி நிலுவையை பாதிப்பதுடன், நமது நாட்டின் வெளிநாட்டு நாணயநிதி ஒதுக்கத்தையும் பாதிப்பதாக அமைகிறது.
இந்த இறக்குமதியைப் பெருமளவில் கட்டுப்படுத்துவதன் மூலமாக, இலங்கையின் சென்மதி நிலுவையைச் சீர்படுத்த முடிவதுடன், நாட்டின் வெளிநாட்டு நாணயஇருப்பையும் எதிர்பார்த்த மட்டத்திலேயே பேணமுடியும். இதன் காரணமாகவே, அண்மைய காலத்தில் இறக்குமதிகளுக்கு எதிராக வரிவிதிப்பையும், கட்டுப்பாடுகளையும் அரசு விதித்துள்ளது.
இலங்கையை பொறுத்தவரையில், ஒரு புறம் பாதீட்டுப் பற்றாக்குறை அதிகரிக்கிறது, வெளிநாட்டு கடன் சுமை அதிகமாகிறது, முதலீட்டாளர் நம்பிக்கை குறைவடைகிறது என நம்பிக்கையை நாம் இழந்து கொண்டிருந்தாலும், மற்றோரு புறத்தில் நாட்டின் ஏற்றுமதி படிப்படியாக அதிகரிக்கிறது, நாட்டின் கடனை மீளசெலுத்தவும், இதுவரை மறைமுகமாக மக்களிடம் அறவிடப்பட்ட வரிகளின் சுமை குறைக்கப்பட்டு நேரடி வரிவருமானம் அதிகரிக்கபடுகிறது. இதன் காரணமாக, இலங்கை பொருளாதாரமானது ஒரு புறத்தே நம்பிக்கையீனங்களையும், மறுபுறத்தே வளர்ச்சிக்கான சிறு நம்பிக்கைக் கீற்றுகளையும் கொண்டு, ஒரு குழப்பகரமான சூழ்நிலையுடன் முன்னெடுத்துச் செல்லப்படுகின்றது.
இந்தக் குழப்பமான சூழ்நிலை மீளவும் ஆட்சியாளர்களைக் குழம்பிய குட்டைக்குள் மீன் பிடிக்கும் நிலைக்கு கொண்டுவந்து சேர்த்திருக்கிறது. நாட்டின் பொருளாதாரத்தில் என்ன நடக்கிறது ? சர்வதேச மாற்றங்களால் இலங்கை எதிர்கொள்ளக்கூடிய பிரச்சினைகள் என்ன? என்கிற பல கேள்விகளுக்கு, சாமானிய இலங்கை மக்களுக்கு பதில் கிடைப்பதாகவில்லை.
இந்தத் தகவல் குறைபாடு,ஈ எந்த அரசியல்வாதியோ, அவர்கள்சார் பொருளியல் வல்லுநர்களோ கூறும் எந்தக் கூற்றையும் மக்களை நம்ப வைக்கிறது. இது நாட்டின் பொருளாதார செயல்பாடுகளிலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
இதன்காரணமாக, பொருளாதார பின்னடைவை தடுக்க, அரசாங்கம் எடுக்கும் முயற்சிகளும் கைகூடாமல் போவதற்குக் காரணமாக இருக்கிறது. மக்களிடையே அரசாங்கத்தின் செயற்பாடுகள் தொடர்பிலும், பொருளாதாரத்தின் இன்றைய நிலை தொடர்பிலும் தெளிவற்ற மிகக் குழப்பகரமான தகவல்களே உள்ளன.
இந்தநிலை மாறாதவரையில், இலங்கைப் பொருளாதாரத்தைச் சீர்தூக்கும் வகையில், அரசுாங்கம் எடுக்கும் எந்த முயற்சிகளும் வெற்றி பெறாது என்பதுடன், மேலும், இலங்கைப் பொருளாதாரம் பின்னடைவைச் சந்திப்பதைத் தவிர்க்க முடியாது.
21 minute ago
39 minute ago
43 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
39 minute ago
43 minute ago