2026 ஏப்ரல் 07, செவ்வாய்க்கிழமை

'கொள்கலன்'களில் கோதுமை மா விநியோகத்தை ஆரம்பிக்கும் செரண்டிப் ஃபளார் மில்ஸ்

A.P.Mathan   / 2013 மார்ச் 04 , மு.ப. 09:20 - 0     - {{hitsCtrl.values.hits}}


செவன் ஸ்டார் கோதுமை மாவின் உற்பத்தியாளர்களான செரண்டிப் ஃபளார் மில்ஸ் (செரண்டிப் மா ஆலை) நிறுவனம் இலங்கையின் முதலாவது கொள்கலன் தாங்கியை (Flour Tanker) அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்மூலம், மா விநியோகம் மற்றும் அது தொடர்பான போக்குவரத்துக்கு புதிய பரிமாணம் கொடுக்கப்பட்டுள்ளது.

'நாடெங்கிலும் இருக்கின்ற தொழிற்சாலைகள் மற்றும் ஏனைய பிஸ்கட் உற்பத்தி நிறுவனங்களுக்கும் புத்தம்புதிய கோதுமை மாவினை நேரடியாக ஆலையில் இருந்து விநியோகம் செய்வதற்கு 22 மெற்ரிக் தொன் கொள்ளளவு கொண்ட இந்த மா தாங்கி எமக்கு வசதியளிக்கின்றது. பொலித்தீன் பைகள் (PP) பயன்படுத்தப்படுவது இதில் முற்றாக தவிர்க்கப்படுகின்றமையினால், மிகவும் சிக்கனமானதும் சூழல் நட்புறவுமிக்கதுமான செயற்பாடாக இது அமைகின்றது. கையினால் கையாளும் முறை இல்லாதவாறு முற்றுமுழுதான தன்னியக்க  செய்முறையினால், நுகர்வோருக்கு வழங்கப்படும் மாவின் தரம் சிறப்பான உயர்ந்த மட்டத்தில் உறுதி செய்யப்படுகின்றது' என்று செரண்டிப் ஃபளார் மில்ஸ் (பிரைவேட்) லிமிட்டெட் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியும் பணிப்பாளருமான திரு. சதாக் அப்துல் காதர் தெரிவித்தார்.

'நாம் தற்போது கொழும்புக்கும் ஏனைய நகரங்களுக்கும் இடையில் நாளாந்த அடிப்படையில் சேவையில் ஈடுபடும் கொள்கலன் தாங்கிகளின் மூலமாக, மேல் மற்றும் வட மத்திய மாகாணங்களில் உள்ள எமது வாடிக்கையாளர்களுக்கு மாவினை விநியோகம் செய்து வருகின்றோம். மிக விரைவில் இலங்கையின் அனைத்து பிரதேசங்களிலும் பொதுவாகக் காணக்கூடியவையாக இந்த தாங்கிகள் முன்னேற்றமடையும். மிக நடைமுறைச் சாத்தியமான விநியோக வழிமுறையென இது நிரூபிக்கப்பட்டுள்ள அதேநேரம், நாடெங்கிலும் இருக்கின்ற அதிகமான வாடிக்கையாளர்களினால் இச்செயன்முறை விரும்பப்படுகின்றது. நேரடி விநியோக முறைமையான இந்நடவடிக்கையின் வெற்றியானது, மிக விரைவில் நாடு முழுவதும் உள்ள நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகள் போன்றவற்றுக்கான மா விநியோகத்தை மேலும் அதிகரித்துக் கொள்வதற்கான தூண்டுதலை ஏககாலத்தில் எமக்கு அளித்துள்ளது' என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஐக்கிய அரபு இராச்சியம், துபாயில் உள்ள அல் குரைர் குழுமக் கம்பனிகளின் ஒரு உப நிறுவனமான செரண்டிப் ஃபளார் மில்ஸ் (பிரைவேட்) லிமிட்டெட் (Serendib Flour Mills Pvt. Ltd.) ஆனது இலங்கையில், தனது 'செவன் ஸ்டார்' வர்த்தக குறியீட்டிலான கோதுமை மாவின் விநியோகத்தை ஐந்து வருடங்களுக்கு முன்னர் ஆரம்பித்தது. 'இலங்கை நுகர்வோர்களுக்கும் தொழில் நிறுவனங்களுக்கும் தேவையான புதுத்தன்மையான (Freshness) கோதுமை மாவினை தங்குதடையற்ற விதத்தில் வழங்குதல்' எனும் தனது வாக்குறுதியை தொடர்ந்தும் இந்நிறுவனம் பேணி வருகின்றது.

'செவன் ஸ்டார்' வர்த்தக குறியீடானது 7 முக்கியமான பெறுமதிகளை பிரதிநிதித்துவம் செய்கின்றது. அதாவது ஒவ்வொரு நட்சத்திரங்களும் - தூய்மை, புதுமை, தரம், சுத்தம், நிபுணத்துவம், சேவை மற்றும் நம்பிக்கை போன்ற சிறப்பம்சங்களை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளன. இலங்கையில் வர்த்தகத்தை ஆரம்பித்ததில் இருந்து பேக்கரி தொழில் செய்வோருக்கான கோதுமை மா, அனைத்துத் தேவைகளுக்குமான மா, ஆட்டா மா, தவிடு நீக்கப்படாத மா (Wholemeal Flour), ரவை ஆகியவற்றை இந்நிறுவனம் அறிமுகப்படுத்தியதுடன்; இலங்கையில் அதிகரித்துச் செல்லும் தனது கோதுமை உற்பத்தி வகைகளில் மேலும் ஒன்றாக மிக அண்மைக்காலத்தில் 'கேக்' செய்வதற்கான மாவையும் அறிமுகம் செய்துள்ளது.

நாளொன்றுக்கு 1000 மெற்ரிக் தொன் மாவினை கையாளும் ஆற்றல் கொண்ட கோதுமை மா ஆலையை 56 மில்லியன் அமெரிக்க டொலர் முதலீட்டில் கொழும்புத் துறைமுகத்தில் நிறுவியதன் மூலம் செரண்டிப் ஃபளார் மில்ஸ் நிறுவனம் 2008 ஆம் ஆண்டில் இலங்கையில் வர்த்தக ரீதியான செயற்பாடுகளை ஆரம்பித்தது. மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் முன்னணி மா ஆலையாக திகழும் - அல் குரைர் குழுமத்தின் கீழியங்கும் National Flour Mills (LLC) ஆனது இந்நிறுவனத்திற்கு பக்கபலமாக செயற்பட்டு வருகின்றது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .