2026 ஏப்ரல் 07, செவ்வாய்க்கிழமை

செலான் வங்கியின் கடன் பத்திர வழங்கல் ஆரம்பாகிய தினத்திலேயே மிகையாக கோரப்பட்டது

A.P.Mathan   / 2013 மார்ச் 07 , பி.ப. 03:51 - 0     - {{hitsCtrl.values.hits}}


பெப்ரவரி 14ஆம் திகதி ஆரம்பமான செலான் வங்கியின் தொகுதிக் கடன் பத்திர வழங்கல் ஆனது, வழங்கல் ஆரம்பிக்கப்பட்டு ஒரு சில மணித்தியாலங்களுக்குள்ளேயே மிகையாக கோரப்பட்டுள்ளது.

செலான் வங்கி பி.எல்.சி. நிறுவனமானது ரூபா 1 பில்லியனை திரட்டிக்கொள்ளும் பொருட்டு, ஒவ்வொன்றும் ரூபா 100 பெறுமதியானதும் ஐந்து வருடங்களுக்கானதுமான பிணையற்ற (Unsecured), பிரதியீடான (Subordinated), மீட்கக்கூடிய (Redeemable) 10,000,000 தொகுதிக் கடன் பத்திர வழங்கலை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்தது. அத்துடன், மிகையாக வழங்கல் கோரப்படுமிடத்து மேலும் ரூபா 1 பில்லியனுக்கான கடன் பத்திரங்களை வழங்குவதன் மூலம் மொத்த வழங்கலை ரூபா 2 பில்லியனாக அதிகரித்து கொள்வதற்கான அங்கீகாரத்தையும் வங்கி பெற்றிருந்தது. இந்நிலையில், முதற்கட்ட வழங்கலின் அளவு மற்றும் கடன் பத்திர வழங்கலை அதிகரித்துக் கொள்வதற்காக காணப்பட்ட மேலதிக தெரிவு ஆகிய இரண்டுமே (ரூபா 2 பில்லியன்) விநியோகத்திற்காக கோரப்பட்டது மட்டுமன்றி, தொகுதிக் கடன் வழங்கல் ஆரம்பிக்கப்பட்டு ஒரு சில மணித்தியாலங்களுக்குள்ளேயே வழங்கலானது மிகை விநியோகம் செய்யப்பட்டு விட்டது.

2013ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின்படி வரி விதிப்பு முறையில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களின் சாதகத் தன்மையைப் பயன்படுத்தி முதன்முதலாக வழங்கப்பட்ட கடன் பத்திர வழங்கல்களில் ஒன்றாக செலான் வங்கியின் இவ்வழங்கலும் அமைந்திருந்தது. அதாவது இவ் வரவுசெலவுத் திட்ட முன்மொழிவுகளின் பிரகாரம், 01.01.2013 இற்குப் பின்னர் விநியோகிக்கப்படும் பட்டியலிடப்பட்ட கூட்டாண்மை பிணையங்களுக்கு (கடன் பத்திரங்களுக்கு) 'நிறுத்திவைத்தல் வரி' (WHT) மற்றும் வருமான வரி ஆகியவற்றிலிருந்து விலக்களிக்கப்பட்டுள்ளது.

செலான் வங்கியின் கடன் பத்திர வழங்கலானது 3 வகையான கடன்பத்திரங்களை உள்ளடக்கியிருந்தது. அதன்பிரகாரம், நிலையான வட்டி வீதம் - வருடாந்த அடிப்படையில் அல்லது அரையாண்டு அடிப்படையில் அல்லது மாதாந்த அடிப்படையில் கொடுப்பனவு செய்யப்படும். வட்டித் தொகை வருடாந்த அடிப்படையில் வழங்கப்படும் போது 15.50% வட்டியையும், வட்டிக் கொடுப்பனவு அரையாண்டுக்கு ஒருமுறை வழங்கப்படுமாயின் 15.00% வட்டியையும் (வருடாந்த விளைவு வீதம் AER- 15.56%), அதேநேரம் வட்டிக் கொடுப்பனவு மாதாந்த அடிப்படையில் வழங்கப்படும் பட்சத்தில் 14.50% (வருடாந்த விளைவு வீதம் AER- 15.50%) வட்டி வருமானத்தையும் பெற்றுக்கொள்ள முடியும்.

நிர்ணயிக்கப்பட்ட கடன் வளர்ச்சி இலக்குகளை அடைந்துகொள்ளும் எதிர்பார்ப்பின் அடிப்படையில், ஆரோக்கியமான 'மூலதன தகுதி வீதத்தை' பேணிக்கொள்ளும் பொருட்டு மூலதன தளத்தை விரிவுபடுத்துவதற்கு இத் தொகுதிக்கடன் பத்திர வழங்கல் செலான் வங்கிக்கு உதவி புரியும். அத்துடன் வங்கியின் Tier - 2 மூலதனத் தளத்தை பரந்துபட்டதாக மேம்படுத்திக் கொள்வதற்கும் உதவியாக அமையும். மேலும் செலான் வங்கியின் நடுத்தர கால கடன் வழங்கலுக்கு இணையாக, நடுத்தர கால நிதியிடல் தளத்தை அதிகரிப்பதற்கும் உதவும். அதேவேளை, அடுத்துவரும் ஐந்து வருட காலப்பகுதியில் ஒரு கிரமமான நிலையான வருமானத்தை பெற்றுக் கொள்வதற்கு மிகச்சிறந்த வாய்ப்பொன்றையும் முதலீட்டாளர்களுக்கு இந்த கடன் பத்திர வழங்கல் அளிக்கின்றது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .