Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 17, சனிக்கிழமை
ச. சந்திரசேகர் / 2020 ஜூன் 13 , மு.ப. 07:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாட்டை முறையாக வழிநடத்திச் செல்வதற்கு, ஆட்சியிலுள்ள அரசாங்கத்திடம் கொள்கைகள் காணப்பட வேண்டும். அத்துடன், ஆரோக்கியமான பொருளாதாரத்தைப் பேணுவதற்காக, முறையாகத் திட்டமிடப்பட்ட பாதீட்டையும் வருடாந்தம் கொண்டிருக்க வேண்டும்.
ஒவ்வோர் ஆண்டும், அரசாங்கத்தால் வெளியிடப்படும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த கொள்கை ஆவணமாகப் பாதீடு அமைந்துள்ளது. இதில், அரசாங்கத்தின் கொள்கை முன்னுரிமைகள் உள்ளடக்கப்பட்டு இருப்பதுடன், அவற்றை நிறைவேற்றுவதற்குப் பொது மக்களின் நிதி எவ்வாறு ஒதுக்கீடு செய்யப்படும் போன்ற விடயங்கள் அடங்கியிருக்கும். எனவே, பாதீட்டைப் பின்தொடர்வதனூடாக, அரசாங்கம் வழங்கிய உறுதிமொழிகள், தவறாமல் பின்பற்றப்படுகின்றனவா, எந்தளவு அவை நிறைவேற்றப்படுகின்றன, இந்தக் கொள்கைகள் சாத்தியமானவையா போன்ற முக்கியமான விடயங்களை அறிந்து கொள்ளவும், பாதீடு ஏதுவாக அமைந்துள்ளது.
ஆசிய பிராந்தியத்தின் பொருளாதாரம், அரசியல், சட்டம், ஊடகம் தொடர்பான மூலோபாய ஆய்வுகளை மேற்கொள்வதில், சுயாதீன அமைப்பாகத் திகழும் Verité Research அண்மையில் வெளியிட்டிருந்த திறந்த பாதீட்டு ஆய்வு (Open Budget Survey (OBS)) அறிக்கையில், பிராந்தியத்தின் ஒவ்வொரு நாடுகளிலும் காணப்படும் பாதீடுகளின் வெளிப்படைத் தன்மை குறித்துக் கவனம் செலுத்தப்பட்டிருந்தது. இந்த ஆய்வு, இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை முன்னெடுக்கப்படுகின்றது. 2019ஆம் ஆண்டுக்காக மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் போது, ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட 117 நாடுகள் வரிசையில், இலங்கை 54ஆம் இடத்தில் தரப்படுத்தப்பட்டிருந்தது. இலங்கையின் பாதீட்டின் வெளிப்படைத் தன்மை 47/100 மதிப்பெண்களைப் பதிவு செய்திருந்தது.
இலங்கை படிப்படியாகத் தனது பாதீட்டு வெளிப்படைத் தன்மையை மேம்படுத்தி இருந்ததுடன், 2015ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் 39 மதிப்பெண்களையும் 2017ஆம் ஆண்டில் 44 மதிப்பெண்களையும் பதிவு செய்திருந்தது.
எவ்வாறாயினும், சர்வதேச நியமங்களின் பிரகாரம், பாதீட்டு வெளிப்படுத்தல் 'போதுமை' மட்டத்தைக் குறிக்கும் 61 மதிப்பெண்கள் என்பதை எய்துவதற்கு, இலங்கை தவறியிருந்தமை குறிப்பிடத்தக்கது. தெற்காசியாவில், ஆப்கானிஸ்தான் (50 மதிப்பெண்கள்), இந்தியா (49 மதிப்பெண்கள்) ஆகிய நாடுகளைத் தொடர்ந்து, இலங்கை தரப்படுத்தப்பட்டு உள்ளமை குறிப்பிடத்தக்கது.
2010ஆம் ஆண்டில், இலங்கை 67 மதிப்பெண்களைப் பெற்றிருந்தது. இது நியம மதிப்பெண்ணை விட, உயர்ந்த பெறுமதியாகும். ஆனாலும், அதைத் தொடர்ந்த வருடங்களில், இந்தப் பெறுமதி படிப்படியாகக் குறைவடைந்திருந்தது. ஏனைய நாடுகள், வேகமாக வளர்ச்சியைப் பதிவு செய்கின்றமை, தமது பாதீட்டுச் செயன்முறைகள், நடைமுறைப்படுத்தல், ஆலோசனை நியமங்களைப் மேம்படுத்துகின்றமை போன்றன இதில் பங்களிப்புச் செய்திருந்தன.
2019ஆம் ஆண்டில், இலங்கை முதன் முறையாக, குடிமக்கள் பாதீட்டை இணையத்தில் வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்க மாற்றமாக அமைந்துள்ளது. ஆனாலும், முன்னைய அரசாங்கத்தால் உறுதியளிக்கப்பட்ட நாடாளுமன்ற பாதீட்டு அலுவலகம் நிறுவப்படல் போன்ற பல இதர விடயங்கள், நிறைவேற்றப்படவில்லை. அரசாங்கத்தால் வெளியிடப்படும் அரையாண்டு அறிக்கைகளிலும் அரசாங்கத்தால் மேற்கொள்ளப்படும் திட்டங்களின் செலவீனங்களின் தொடர்ச்சித் தன்மையை வெளிக்கொணரத் தவறியிருந்தன. பல தகவல்கள், அரசாங்க அமைச்சுகள், திணைக்களங்களுடன் பகர்ந்து கொள்ளப்பட்ட போதிலும் பொது மக்கள் பார்வைக்கு அவை வெளியிடப்படவில்லை.
பாதீட்டில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களை, நடைமுறைப்படுத்தலில் இலங்கை பின்னடைவைப் பதிவு செய்திருந்தது. பாதீட்டுத் தயாரிப்பு, அனுமதி பெறுவதிலும் குறைந்த மதிப்பெண்களைக் கொண்டுள்ளது. அமைச்சுகளால் தகவல்கள் உடனுக்குடன் வெளியிடப்படாமை, பாரிய பிரச்சினையாக அமைந்திருப்பதுடன், இவ்வாறான குறைகளுடனான கொள்கைகள், பாதீட்டில் உள்வாங்கப்பட்டு, பின்னர், அவை நீக்கப்படுவதை அவதானிக்க முடிந்தது. இதற்கு உதாரணமாக, கடந்த அரசாங்கத்தால் முன்மொழியப்பட்டிருந்த Exim வங்கியைக் குறிப்பிடலாம். குறைந்த வருமானமீட்டும் குழுக்களின் தேவைகள், அவர்களின் நிலைப்பாடுகள் பற்றிய விடயங்கள் தொடர்பில், பெருமளவு கவனம் செலுத்தப்படுவதில்லை. குறிப்பாகப் பெருந்தோட்டத்துறையை எடுத்துக் கொள்ளலாம். மாறாக, தனியார்துறை போன்ற சக்தி வாய்ந்த பங்குதாரர்கள், கொள்கை வடிவமைப்பாளர்களின் கவனத்தைப் பெருமளவு ஈர்ப்பதையும் காண முடிந்தது. பாதீட்டுக் கணக்காய்வைப் பொறுத்தமட்டில் இலங்கை 100 க்கு 33 மதிப்பெண்களை மட்டுமே பதிவு செய்திருந்தது.
இலங்கை, தனது பெருமளவு கடன், ஆட்சி தொடர்பான சிக்கல்களுக்கு முகங்கொடுத்துள்ள நிலையில், வினைதிறனற்ற பாதீடுகளைக் கொண்டிருக்க முடியாது. அரச நிறுவனங்களை மீளக்கட்டமைப்பது, ஏற்றுமதிகளை மேம்படுத்துவது, இறக்குமதிகளை மேம்படுத்துவது, சமூக நலன்புரிக் கட்டமைப்புகளை உருவாக்குவது போன்ற விடயங்கள், பாதீட்டில் உள்ளடக்கப்பட்டு, சகல பங்குதாரர்களுக்கும் தமது திட்டமிடல்களை உறுதியாக மேற்கொள்வதற்கு, உறுதியான அடித்தளத்தை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.
இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள பரிந்துரைப்புகளில், முழுமையானதும் அதிகளவு தொடர்ச்சியானதுமான ஆவண அறிக்கையிடல்கள், நாடாளுமன்ற மேற்பார்வையை வலிமைப்படுத்தல், பாதீட்டு நடைமுறைப்படுத்தலில் பொது மக்களின் பங்குபற்றலை மேம்படுத்தல் போன்ற விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
தற்போதைய அரசாங்கத்தின் கவனத்தை, இந்த விடயங்கள் ஈர்க்க வேண்டும்; ஏனெனில், இந்த ஆண்டில் மாத்திரம், இதுவரை அரச செலவீனங்களின் மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டு, நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. சாதாரணமாக, நவம்பர் மாதமளவில் பாதீடு தொடர்பாக, அதிகளவு கவனம் செலுத்தப்படுவதுடன், திறைசேரியிலிருந்து நிதியை மீள மாற்றியமைப்பதற்கு நிதி அமைச்சுக்குக் காணப்படும் அதிகாரங்களைக் குறைத்து, ஊறுபடத்தக்க சமூகங்களுக்கு, உறுதியான குரல் எழுப்புவதற்கான வாய்ப்பை வழங்கும் வகையில், பொதுப் பங்குதாரர்களின் ஈடுபாட்டைப் பாதீட்டு நடைமுறைப்படுத்தலில் உள்வாங்குவதற்கான காலத்தை நீட்டிக்க வேண்டும்.
ஓகஸ்ட் மாதம், புதிதாகத் தெரிவு செய்யப்படவுள்ள புதிய அரசாங்கத்தால் அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு, உறுதியான அடித்தளத்தை அமைக்கும் முதலாவது உறுதியான பாதீடாக, 2021ஆம் ஆண்டுக்காக பாதீடு அமைந்திருக்க வேண்டும். இதன்போது வரிச் சுமை, நிவாரணங்கள், அரசாங்கத்தின் நிதியைத் திரட்டிக் கொள்வது போன்ற பல முக்கிய அம்சங்கள் தொடர்பில், பெருமளவு சவால்களுக்குப் புதிய நிதி அமைச்சருக்கு முகங்கொடுக்க வேண்டியிருக்கும். தூரநோக்குச் சிந்தனையுடைய தகைமையும் அனுபவமும் வாய்ந்த நபருக்கு, இந்த முக்கியத்துவம் வாய்ந்த பொறுப்பு வழங்கப்படும் என்பது, பொது மக்களின் எதிர்பார்ப்பாகவும் அமைந்துள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
8 hours ago
16 May 2025