2025 மே 02, வெள்ளிக்கிழமை

இலங்கை பிள்ளைகளுடன் சச்சின் டென்டுல்கர்

Freelancer   / 2023 ஓகஸ்ட் 14 , மு.ப. 10:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

யுனிசெப்பின் தெற்காசியப் பிராந்தியத்தின் நல்லெண்ணத் தூதுவர் என்ற வகையில் சச்சின் டென்டுல்கர் இலங்கைக்கு விஜயம் செய்தார். சப்ரகமுவ மாகாணத்தில் யுனிசெப் அமைப்பினால் முன்னெடுக்கப்படும் நிகழ்ச்சித்திட்டத்துக்கு விஜயம் செய்த சச்சின், கொவிட் தொற்று நோய் மற்றும் 2022 பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்ட சிறுவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்களைச் சந்தித்தார்.

கிரிக்கெட் வீரராகவும், 2015ஆம் ஆண்டு யுனிசெப் அமைப்புடனும் இணைந்து, இலங்கைக்கு மேற்கொண்ட முன்னைய விடயங்களில் ஏற்பட்ட அனுபவங்களை டென்டுல்கர் நினைவுகூர்ந்தார். சவால் மிக்க சூழலுக்கு மத்தியிலும் சாதகமான மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு அரசாங்கம் மற்றும் அரசசார்பற்ற நிறுவனங்கள் எடுக்கும் முயற்சிகளையும் அவர் பாராட்டினார்.

கள விஜயத்தின் போது யுனிசெப் நிறுவனத்தின் உதவியுடன் சிறுவர்களுக்கு ஊட்டச்சத்துள்ள உணவுகளை வழங்கும் நோக்கில் முன்னெடுக்கப்படும் மதிய உணவுத் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும் முன்பள்ளிகளுக்கும் சச்சின் டென்டுல்கர் சென்றிருந்தார். 2022ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் முதல் நாடு முழுவதிலும் 1,400 பாடசாலைகளில் 50,000ற்கும் அதிகமான முன்பள்ளி மாணவர்களுக்கு ஊட்டமளிக்கும் யுனிசெப் நிறுவனத்தின் மதிய உணவுத் திட்டம் முன்னெடுக்கப்படுகிறது. இந்த உணவு வழங்கும் திட்டமானது முன்பள்ளி மாணவர்களின் வருகையை அதிகரிப்பதற்கும் உதவுகிறது.

“குழந்தைகள் தங்கள் முழுமையான திறனை அடைவதற்கு ஊட்டச்சத்து நிறைந்த உணவு மற்றும் தரமான கல்வி என்பன அவசியமாகின்றன. அவர்களின் கல்வி மற்றும் ஊட்டச்சத்தில் முதலீடு செய்வதன் மூலம், அவர்களின் எதிர்காலத்தில் மட்டுமல்லாது ஒவ்வொரு நாட்டினது எதிர்காலத்திலும் முதலீடு செய்கின்றோம்” என சச்சின் தெரிவித்தார்.

மற்றுமொரு பாடசாலைக்கு விஜயம் செய்த டென்டுல்கர், தரம் மூன்று மாணவர்களின் கற்பித்தல் மற்றும் கற்றல் செயற்பாடுகளைக் கண்காணித்ததுடன், இங்கு பல மாணவர்கள் பாடசாலைகளில் தங்கியிருந்து தமது கனவுகளைப் பின்பற்ற வேண்டும் என்ற விருப்பத்தைப் பகிர்ந்துகொண்டனர்.  அத்துடன், சிரேஷ்ட மாணவ மாணவியருடன் சச்சின் டென்டுல்கர் கிரிகெட் விளையாட்டிலும் இணைந்துகொண்டார்.

“நான் கலந்துரையாடிய பிள்ளைகள் மிகுந்த மன உறுதியுடன் இருப்பதுடன், சிறந்த எதிர்காலத்திற்கான அவர்களின் நம்பிக்கையும் வலுவாகக் காணப்படுகிறது. அவர்கள் தமது இலக்குகளை அடைவதற்கு நாம் தொடர்ந்தும் உதவ வேண்டும்” என சச்சின் குறிப்பிட்டார்.

பெருந்தோட்டப் பகுதிகளில் வாழும் மக்களின் வாழ்வாதாரம் குறித்து அறிந்து கொள்வதற்காக டென்டுல்கர் தேயிலைத் தோட்டங்களுக்கும் விஜயம் செய்தார். பொருளாதார மீட்சிக்கு வழங்கிவரும் ஒத்துழைப்பின் ஓர் அங்கமாக, இரண்டு வயது வரையிலான பிள்ளைகள் உள்ள 110,000 குடும்பங்களுக்கு குழந்தைகளுக்குத் தேவையான ஊட்டச்சத்துள்ள உணவு மற்றும் ஏனைய அத்தியாவசியப் பொருட்களைக் கொள்வனவு செய்வதற்காக யுனிசெப் நிதி வழங்கி வருகிறது.

இலங்கையின் இளைஞர்கள் அடங்கிய குழுவொன்றுடன் கலந்துரையாடுவதற்கு நேரத்தை ஒதுக்கியிருந்த டென்டுல்கர், ‘கிரிக்கெட் கட்ச்-அப்’ என்ற அமர்வில் வளர்ச்சி பெறுவது, தடைகளைத் தாண்டி முன்னேறுவது, தனது இலக்குகளை அடைவதில் எவ்வாறு உறுதியாக இருப்பது போன்ற விடயங்களில் தனது அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார். இந்த இளைஞர்கள் யுனிசெப் அமைப்பின் ஒத்துழைப்புடன் செயற்படும் நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்புச் சேவைகள் திணைக்களத்தின் சிறுவர் கழக வலையமைப்புடன் தன்னார்வத் தொண்டர்களாக செயற்படுகின்றனர்.

யுனிசெப் அமைப்பின் தெற்காசிய பிராந்தியத்துக்கான முதலாவது நல்லெண்ணத் தூதுவராக சச்சின் டென்டுல்கர் 2013ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டார். அன்றிலிருந்து தெற்காசியாவிலுள்ள சிறுவர்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றுவதற்கு அவர் முக்கிய பங்காற்றி வருகிறார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X