2025 நவம்பர் 28, வெள்ளிக்கிழமை

இலங்கைக்கான விமான சேவைகளை ஜுலை நடுப்பகுதியில் மீள ஆரம்பிக்கத் தயார்

Editorial   / 2020 ஜூன் 16 , மு.ப. 10:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச பிரயாணிகளுக்கு, ஓகஸ்ட் முதலாம் திகதி முதல், இலங்கை மீளத்திறக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்ததைத் தொடர்ந்து, அதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்பிருந்தே, இலங்கைக்கான விமான சேவைகளை மீள ஆரம்பிப்பதற்குத் தாம் தயாராக இருப்பதாக, விமான சேவைகள் அறிவித்துள்ளன.  

பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவுடன், கடந்த வாரம் இடம்பெற்ற பிரயாணத் துறைசார் பிரதிநிதிகளுடனான சந்திப்பின் போது, கலந்து கொண்டிருந்த சர்வதேச விமான சேவைகளின் அங்கத்தவர்கள், தாம் இலங்கைக்கான விமான சேவைகளை ஜுலை 15ஆம் திகதி, மீள ஆரம்பிப்பதற்குத் தயாராக இருப்பதாகத் தெரிவித்திருந்தனர். 

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை, ஓகஸ்ட் முதலாம் திகதி முதல் மீள ஆரம்பிப்பதற்குத் திட்டமிட்டுள்ளதாக இலங்கை அரசாங்கம், இலங்கைச் சுற்றுலா சபை ஆகியன அண்மையில் அறிவித்திருந்தன. 

கொவிட்-19 பரவல் கட்டுப்படுத்தப்பட்ட பின்னரான சூழலில், இந்த நோய்ப் பரவல் மேலும் ஏற்படுவதைத் தவிர்க்கும் வகையில் முன்னேற்பாடுகளைப் பின்பற்றுவது தொடர்பான நடவடிக்கைகளை சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, தேசிய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் அனில் ஜாசிங்க, சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபை ஆகியவற்றுடன் கலந்துரையாடி, முறையான பாதுகாப்பு வழிமுறைகள் ஏற்படுத்தப்பட்டு இருப்பதை உறுதி செய்யுமாறு பிரதமர் இந்தச் சந்திப்பில் தெரிவித்திருந்தார். 

கொவிட்-19 தொற்றுப் பரவலுடன், தமது எல்லைகளை மூடியிருந்த பல்வேறு நாடுகள், கடுமையான சுகாதாரப் பாதுகாப்பு விதிமுறைகள், செயன்முறைகளைத் தொடர்ந்து, தமது எல்லைகளைப் படிப்படியாக மீளத்திறந்துள்ளன. 

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம், பயணிகள் பயன்பாட்டுக்கு மீளத்திறக்கப்பட்ட பின்னர், நாட்டுக்குள் வரும் விமான சேவைகள் உடனடியாக ஆரம்பிக்கப்படாமல், உள்நாட்டிலிருந்து வெளிநாடுகளுக்கான விமான சேவைகள் முதலில் ஆரம்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X