2025 ஜூலை 09, புதன்கிழமை

இலங்கையில் Starlink சேவைகள் வெற்றியடையுமா?

S.Sekar   / 2025 ஜூலை 07 , மு.ப. 06:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

ச.சேகர்

உலகப் புகழ்பெற்ற வர்த்தகரான எலொன் மஸ்க் முன்னெடுக்கும் செய்மதி ஊடான இணைச் சேவைகளை வழங்கும் Starlink இலங்கையிலும் கடந்த வாரம் முதல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்தச் சேவை இலங்கையில் அறிமுகம் செய்யப்படவுள்ளமை தொடர்பில் கடந்த ஒரு வருடங்களாகவே பரவலாக பேசப்பட்டு வந்த போதிலும், பல்வேறு இழுபறி நிலைகளால், அறிமுகம் தாமதமடைந்து, கடந்த வாரம் முதல் உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த இணையச் சேவை இலங்கையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளமை தொடர்பில் சமூக வலைத்தளங்களிலும், தொழினுட்ப நிபுணர்கள் மத்தியிலும் பெருமளவு வரவேற்பு காணப்படுவதுடன், உள்நாட்டில் ஏற்கனவே இயங்கும் இணையச் சேவை வழங்குனர்களின் சேவைகளுக்கு இந்த Starlink அறிமுகம் சவாலாக அமையும் என எதிர்வுகூரப்படுகிறது.

ஆனாலும், இந்த Starlink சேவை எவ்வாறு இயங்குகிறது, அதற்கான கட்டணங்கள் என்பவற்றை எடுத்துக் கொண்டால், ஏற்கனவே இலங்கையில் பாவனையிலுள்ள இணையச் சேவைகள் தொலைத்தொடர்பு கோபுரங்கள் மற்றும் தொலைபேசி கம்பி வடங்களினூடாக கடத்தப்படுகின்றன. இவை தொடர்பில் பாவனையாளர்கள் மத்தியில் பல்வேறு விதமான கருத்துகள் நிலவுகின்றமை மறுப்பதற்கில்லை. விசேடமாக, வாடகைக்கு வீடு தேடுவோர் கூட, புதிய வீடொன்றை பார்க்கச் செல்லும் போது, மின், நீர் போன்ற அடிப்படை வசதிகள் பற்றி கேட்டறிவதுடன், தமது தொலைபேசிகளில் வலையமைப்பு சமிக்ஞைகள் எவ்வாறு உள்ளது என்பது பற்றியும் பரிசோதித்து வீட்டை வாடகைக்கு பெறுகின்றனர். அவ்வாறு மக்களின் வாழ்வில் கையடக்க தொலைபேசி மற்றும் இணையப் பாவனை என்பது மிகவும் இன்றியமையாத அங்கமாக அமைந்துள்ளது.

இவ்வாறான சூழலில், இலங்கையில் காணப்பட்ட தொலைத்தொடர்பாடல் சேவை வழங்குனர்கள் ஒரு காலகட்டத்தில் 5 முதல் 7 ஆக அமைந்திருந்தது. காலப்போக்கில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி நிலைகள் மற்றும் புறத்தாக்கங்களினால் இந்த சேவைகள் தற்போது மூன்று பிரதான நிறுவனங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளன. சில நிறுவனங்கள் இதர பிரதான நிறுவனங்களுடன் தமது சேவைகளை ஒன்றிணைத்துள்ளன. சில நிறுவனங்கள் தமது சேவைகளை முழுமையாக இடைநிறுத்தியுள்ளன.

இவ்வாறான சூழலில், ஏற்கனவே சந்தையில் காணப்படும் தொலைத்தொடர்பாடல் சேவை வழங்குனர்களும் பல பொருளாதார சவால்களுக்கு முகங்கொடுத்து வரும் நிலையில், அவற்றின் புதிய முதலீடுகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன. விசேடமாக நாடு பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்ததன் பின்னர், இந்நிறுவனங்களின் விரிவாக்க செயற்பாடுகள் பெரும்பாலும் தடைப்பட்டுள்ளன. அல்லது மிகவும் மந்த கதியில் நடைபெறுகின்றன.

முன்னணி நிறுவனங்கள் கையகப்படுத்தல் செயற்பாடுகளில் அதிகளவு தொகையை செலவிட நேரிட்டதாலும், தாம் கையகப்படுத்திய வலையமைப்புடன் தமது பிரதான வலையமைப்பை இணைக்கும் செயற்பாடுகளில் அதிகளவு அக்கறை கொண்டுள்ளதாலும், அதன் வலையமைப்பு விரிவாக்கம் அல்லது மேம்பாடு என்பதை அதிகளவு அவதானிக்க முடியவில்லை.

5G வலையமைப்பு சேவையும் சில நகரங்களில் இன்னமும் பரீட்சார்த்த மட்டத்தில் உள்ளதை காண முடிகிறது. இன்னமும் 4G சேவைகள் மாத்திரமே பிரதானமாக வழங்கப்படுகின்றன. கம்பி வட இணையச் சேவைகளில் ஃபைபர் சேவைகள் விஸ்தரிக்கப்பட்ட வண்ணமுள்ளன. இவை ஒப்பீட்டளவில் வேகமான, தங்கியிருக்கக்கூடிய இணைய வசதிகளை வழங்கினாலும், பயணம் செய்கையில் இந்த இணைப்பை தம்முடன் கொண்டு செல்ல முடியாமை பாவனையாளர்களுக்கு பெரும் அசௌகரியமாக அமைந்துள்ளது.

அவ்வாறான ஒரு சூழலில் இந்த Starlink அறிமுகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த இணையச் சேவை வேகமான வலையமைப்பை கொண்டிருக்கும் என பலராலும் தெரிவிக்கப்பட்டாலும், ஆரம்பத்தில் இந்த சேவைக்கு இணைந்து கொள்வதற்கான கட்டணம் ஒரு இலட்சம் ரூபாய்க்கு அதிகமானதாக அமைந்துள்ளது. குறிப்பாக, இந்த சேவையை உபயோகிப்பதற்கான செய்மதி அலைவரிசையை பெறும் சாதனங்களை நிறுவுவதற்கு இந்தத் தொகை அறவிடப்படுகிறது. அத்துடன், மாதாந்த வாடகைத் தொகை ஆகக் குறைந்தது 12,000 ரூபாய் முதல் ஆரம்பிக்கிறது.

ஏற்கனவே சந்தையில் காணப்படும் நிலையான இணையச் சேவைக்கான மாதாந்தக் கட்டணம் சுமார் 1,500 ரூபாய் முதல் அமைந்துள்ளது. எனவே, பின்தங்கிய கிராமப் பகுதிகளில் கூட Starlink இணைய வசதியை மக்கள் பயன்படுத்தலாம். அங்கு சமிக்ஞைகளை பெறுவதில் சிக்கல்கள் இருக்காது எனக் கூறப்பட்டாலும், இந்த இணையச் சேவையை ஒரு இலட்சம் ரூபாய்க்கு அதிகமான தொகையை ஆரம்பத்தில் செலுத்தி, பின்னர் மாதாந்தம் 12,000 ரூபாய்க்கு அதிகமான தொகைக்கு பெற்றுக் கொள்வதற்கு, பின்தங்கிய கிராமப் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் ஆர்வம் காண்பிப்பார்களா என்பது பெரும் கேள்விக்குறியாக அமைந்துள்ளது.

இலங்கை சுற்றுலாத் துறையில் பெரிதும் தங்கியுள்ள நிலையில், கிராமப் பகுதிகளின் அனுபவத்தை பெற்றுக் கொள்வதில் ஆர்வத்துடன் சமூகமளிக்கும் சுற்றுலாப் பயணிகளுக்கு சிறந்த அனுபவத்தைப் பெற்றுக் கொடுப்பதற்கு அல்லது வெளி உலகுடன் அவர்களுக்கு தொடர்பை ஏற்படுத்திக் கொள்ள வசதியை வழங்க இந்த Starlink சேவை உதவியாக அமையலாம். அதற்கும், இந்தளவு தொகையை முதலீடு செய்வதில் சாதாரணமாக குறிப்பிடத்தக்களவு வருமானத்தைப் பெறும் வியாபாரங்கள் அல்லது ஹோட்டல்கள் அக்கறை செலுத்தும். எவ்வாறாயினும், மேலே தெரிவிக்கப்பட்ட 12,000 ரூபாய் மாதாந்த கட்டணம் என்பது இல்லங்களில் பாவனைக்கான குறைந்த தொகையாகும். வர்த்தகங்களுக்காக அறவிடும் கட்டணம் இதனை விட உயர்வானது என்பது குறிப்பிடத்தக்கது.

அத்துடன் செய்மதிகளினூடாக இந்த இணையச் சேவை இணைக்கப்பட்டுள்ளதால், மேக மூட்டங்கள், மழையுடனான வானிலைகளின் போது இந்தச் சேவையில் தடங்கல்கள் ஏற்பட அதிகம் வாய்ப்புள்ளது. நகரப் பகுதிகளிலும் இந்த சேவையை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரிக்கும் போது வலையமைப்பு நெரிசல் ஏற்பட்டு இணைப்பின் வேகம் குறைவடையலாம்.

மேலும், உள்நாட்டில் இந்த சேவையை வழங்குவதற்காக அல்லது இந்த சேவையில் ஏற்படும் பிரச்சனைகள் குறித்து அறிவிப்பதற்கு, மேலதிக தகவல்களைப் பெறுவதற்கு உள்நாட்டில் வாடிக்கையாளர் சேவை நிலையம் ஒன்று இதுவரையில் அமைக்கப்படவில்லை. உள்நாட்டில் சேவை விநியோகத்தர் ஒருவரும் நியமிக்கப்படவில்லை. நேரடியாக Starlink இணையத்தளத்தினூடாக இந்த சேவைக்கு விண்ணப்பிக்க வேண்டிய ஒரு நிலை காணப்படுகிறது. இதுவும் இந்தச் சேவைக்கு ஒரு பின்னடைவாக அமைந்துள்ளது. சாதாரணமாக இணைய இணைப்பு சேவைகள் வழங்கும் நிறுவனமொன்றுக்கு நாளொன்றில் பல நூற்றுக் கணக்கான அழைப்புகள், கோரிக்கைகள் வாடிக்கையாளர்களிடமிருந்து வருகின்றமை வழமை.

இந்த Starlink இணைய சேவையில் மற்றுமொரு பிரதான பின்னடைவாக அதன் பாதுகாப்பு அம்சங்களை குறிப்பிடலாம். செய்மதிகளினூடாக வழங்கப்படும் இந்த சேவை, பல மூன்றாம் தரப்பு தொடர்புகளையும் கொண்டுள்ளது. எனவே, இந்த சேவைகளின் பாதுகாப்பு தன்மை தொடர்பில் நிச்சயமற்ற தன்மை நிலவுகின்றமை குறிப்பிடத்தக்கது. அண்மையில் மத்திய கிழக்கில் ஏற்பட்ட நெருக்கடி நிலையின் போதும், ஈரானில் இணையச் சேவைகள் முடக்கப்பட்டிருந்தாலும், இந்த Starlink செய்மதிச் சேவையை பயன்படுத்தி அந்நாட்டிலிருந்து தகவல்கள் பரிமாறப்பட்டமை தொடர்பான செய்திகளும் வெளியாகியிருந்தன.

எனவே, இலங்கை போன்ற அபிவிருத்தியடைந்து வரும், பொருளாதார நெருக்கடியிலிருந்து மீண்டு வரும் ஒரு நாட்டுக்கு இணையச் சேவை என்பது முக்கியமானதாக அமைந்திருந்தாலும், Starlink போன்ற பல பாதக அம்சங்களைக் கொண்ட இணைப்புகளுக்கு மக்கள் செல்வார்களாக என்பது கேள்விக்குறியாக அமைந்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .