2025 மே 19, திங்கட்கிழமை

ஏப்ரல் மாதத்தில் சுற்றுலாப் பயணிகள் வருகையில் சாதனை

Editorial   / 2020 மே 19 , மு.ப. 11:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலகளாவிய ரீதியில் கொரோனாவைரஸ் தாக்கம் ஏப்ரல் மாதத்தில் உச்ச கட்டத்தில் காணப்பட்ட நிலையில், பல விமான சேவைகள் தமது பயண நடவடிக்கைகளை இடைநிறுத்தியிருந்த நிலையில், ஏப்ரல் மாதத்தில் இலங்கைக்கு எந்தவொரு சுற்றுலாப் பயணியும் வருகை தரவில்லை என இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு அதிகார சபையினால் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2020 மார்ச் 18ஆம் திகதி முதல், இலங்கையின் எல்லைப் பிரவேசப்பகுதிகள் அனைத்தும் சுற்றுலாப் பயணிகளுக்கு மூடப்பட்டிருந்த நிலையில், உலக நாடுகள் சர்வதேச பிரயாணங்களுக்கு விதித்திருந்த கட்டுப்பாடுகள் போன்றன இதில் பங்களிப்பு வழங்கியிருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மே மாதத்திலும் இந்த எண்ணிக்கை தொடர்ந்தும் பூஜ்ஜியமாக பதிவாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதன் பிரகாரம் ஏப்ரல் மாதத்துடன் நிறைவடைந்த ஆண்டின் முதல் நான்கு மாத காலப்பகுதியில் சுற்றுலாப் பயணிகளின் வருகை முன்னைய ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 44.1 சதவீதத்தால் குறைந்து 507,311 ஆக பதிவாகியிருந்தது.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருந்ததாவது, கொரோனாவைரஸ் பரவல் காரணமாக அனைத்து நாடுகளிலும் பெப்ரவரி மாதத்தின் நடுப்பகுதியிலிருந்து சுற்றுலாப் பயணிகளின் வருகையில் வீழ்ச்சி பதிவாகியிருந்தது. ஆனாலும், கசகஸ்தான் (92.7 %), பூட்டான் (43.4 %),ரஷ்யா (15.2 %), போலந்து (11.2 %) மற்றும் துருக்கி (3.2 %) போன்ற நாடுகளிலிருந்து வருகை தந்தோரின் எண்ணிக்கை அதிகரிப்பை பதிவு செய்திருந்தது.

குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் பிரகாரம், சுமார் 11,000 சுற்றுலாப் பயணிகள் தற்போதும் நாட்டினுள் தங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், ஜுன் 11ஆம் திகதி வரை இவர்களுக்கான வீசாக்கள் நீடிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனாவைரஸ் உலகளாவிய ரீதியில் தொற்றாக அமைந்துள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் அறிவித்த, மார்ச் 12ஆம் திகதி இலங்கையில் 76,224 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X