2024 ஏப்ரல் 28, ஞாயிற்றுக்கிழமை

கண்ணிவெடி அகற்றும் பணிகளுக்கு ஜப்பான் மீண்டும் உதவி

Freelancer   / 2023 ஓகஸ்ட் 18 , மு.ப. 09:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையின் வட மாகாணத்தில் மனிதநேய கண்ணிவெடி அகற்றும் பணிகளை முன்னெடுப்பதற்கு ஜப்பானிய அரசாங்கம் மொத்தமாக 547,443 அமெரிக்க டொலர்களை (சுமார் ரூ. 170 மில்லியன்) Skavita Humanitarian Assistance and Relief (SHARP) திட்டத்துக்கு வழங்கியிருந்தது.

 

இந்தத் தொகை வழங்குவதற்கான உடன்படிக்கை கைச்சாத்திடும் நிகழ்வு கிளிநொச்சி மாவட்டத்தின் SHARP கள அலுவலகத்தில் அண்மையில் நடைபெற்றது. இந்நிகழ்வில், இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் மிசுகொஷி ஹிதேகி, மற்றும் SHARP இன் பணிப்பாளர் / கள அறிக்கையிடல் அதிகாரி ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் சுமதி ரஞ்ஜன் பாலசூரிய ஆகியோர் உடன்படிக்கையில் கைச்சாத்திட்டனர்.

 

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு தொடர்ச்சியாக ஆதரவளிப்பதற்கான ஜப்பானின் அர்ப்பணிப்பை தூதுவர் மிசுகொஷி வெளிப்படுத்தியதுடன், அதனூடாக ஒருமைப்பாட்டை ஏற்படுத்தி, இலங்கையில் நிலைபேறான அபிவிருத்தியை ஊக்குவிக்க எதிர்பார்ப்பதாக தெரிவித்தார்.

 

இலங்கை கண்ணிவெடி அகற்றல் நிகழ்ச்சித்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது முதல், ஜப்பானிய அரசாங்கத்தினால் தொடர்ச்சியாக அப்பணிகளுக்கு ஆதரவளிக்கப்பட்டுவருவதுடன், இதுவரை வழங்கப்பட்டுள்ள மொத்த உதவித் தொகை 43 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு அதிகமானதாக அமைந்துள்ளது. இலங்கைக்கான ஜப்பானிய உத்தியோகபூர்வ அபிவிருத்தி உதவிக் கொள்கையின் பிரகாரம் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பிராந்தியங்களின் அபிவிருத்திக்கு ஆதரவளிப்பது முக்கியத்துவம் பெறுகின்றது.

 

இந்த நிதியாண்டின் செயற்திட்டத்தினூடாக சுமார் 400க்கும் அதிகமான இடம்பெயர்ந்து வசிப்போரை தமது சொந்தப் பகுதிகளில் மீளக்குடியேற்றி, அவர்களின் வாழ்வாதாரங்களை மேம்படுத்தும் வகையில் ஊக்குவிப்புகளை வழங்க எதிர்பார்க்கப்படுகின்றது. கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் கண்ணிவெடி பாதிப்புகள் காணப்படும் பகுதிகளை விடுவித்து, சுமார் 2300க்கும் அதிகமானவர்களுக்கு நேரடியாக அல்லது மறைமுகமாக உதவுவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது.

 

இந்த உதவித் தொகை ஒதுக்கீடு தொடர்பில் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுமதி ரஞ்ஜன் பாலசூரிய குறிப்பிடுகையில்; 

“2016 ஆம் ஆண்டில் கண்ணிவெடி அகற்றும் பணிகளை முன்னெடுக்க SHARP ஆரம்பித்தது முதல் தொடர்ச்சியாக 6 வருடங்களாக SHARP மீது நம்பிக்கை கொண்டு ஆதரவளிக்கின்றமைக்காக ஜப்பானிய தூதரகத்துக்கு SHARP நன்றி தெரிவிக்கின்றது. 2023 ஜுலை வரையில், ஜப்பானிய அரசாங்கத்திடமிருந்து கிடைத்திருந்த உதவிகளினூடாக SHARP இனால் மொத்தமாக 2,414,199 சதுரஅடிப் பகுதி விடுவிக்கப்பட்டுள்ளதுடன், மொத்தமாக 11,471 நபர்களை தாக்கும் கண்ணிவெடிகள், 168 தாங்கி தகர்ப்பு கண்ணிவெடிகள், 4166 UXOகள் மற்றும் 19647 க்கு அதிகமான SAA க்கள் போன்றன மீட்கப்பட்டுள்ளன. 2596க்கு அதிகமான குடும்பங்களின் அல்லது 10300 நபர்கள் நேரடியாக மற்றும் மறைமுகமாக அனுகூலம் பெற்றுள்ளனர்.  SHARP இனால் விடுவிக்கப்பட்டுள்ள மொத்தப் பகுதிகளில் 90 சதவீதத்துக்கும் அதிகமான பகுதியை இது கொண்டுள்ளது.

கண்ணியத்துடன், வினைத்திறனான வகையில் ஜப்பானிய தூதரகத்தின் முழு ஆதரவுடன் தமது செயற்பாடுகளை SHARP முன்னெடுக்கும். வழங்கப்படும் நிதிக்கு முழுமையாக பொறுப்புக்கூரலை வெளிப்படுத்தி, எமது அனுசரணையாளர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில் செயலாற்றுவோம்.

SHARP இன் அங்கத்தவர்களின் மனமார்ந்த நன்றியை தூதுவர் மிசுகொஷி ஹிதேகி, ஜப்பானிய தூதரகத்தின் GGP சகல ஊழியர்கள் மற்றும் ஜப்பானிய மக்களுக்கும் தெரிவித்துக் கொள்கின்றோம். முக்கியமாக, நாட்டில் முன்னெடுக்கப்படும் கண்ணிவெடி அகற்றும் பணிகளுக்கு தொடர்ச்சியாக ஆதரவளிக்கும் ஜப்பானிய தூதரகத்தின் செயற்பாடுகளுக்கும், நாட்டு மக்களின் நலனில் அக்கறை காண்பிக்கின்றமைக்காகவும் நன்றி தெரிவிக்கின்றோம்.” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X