2025 மே 19, திங்கட்கிழமை

கொவிட்-19 ஒழிப்புக்கு ஊழியர் சம்பளத்தை ஒதுக்கும் நெஸ்லே

Editorial   / 2020 ஏப்ரல் 22 , பி.ப. 11:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொவிட்-19 க்கு எதிராகப் போராடுவதற்கான நெஸ்லேயின் பங்களிப்பு ரூ. 50 மில்லியனை எட்டியுள்ளதுடன், தேவைப்படுபவர்களுக்கு உதவுவதற்காக ஊழியர்கள் சம்பளத்தின் ஒரு பகுதியை நன்கொடையாக வழங்க முன்வந்துள்ளனர்

கொவிட்-19 பரவ ஆரம்பித்ததன் விளைவாக பாதிப்புக்குள்ளாகி, உதவிகளை எதிர்பார்த்துள்ள குடும்பங்களும் மற்றும் உலகளாவில் பரவி வருகின்ற இந்த தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதில் முன்னின்று உழைக்கும் பணியாளர்களும் மொத்தம் ரூபாய். 50 மில்லியன் பெறுமதியான உதவியை நெஸ்லே நிறுவனத்திடமிருந்து பெற்றுள்ளனர்.

தனது நிவாரண முயற்சிகளின், இரண்டாம் கட்டமாக நெஸ்லே தனது ஊழியர்களுடன் கைகோர்த்துள்ளதுடன், தேவைப்படுபவர்களுக்கு உதவுவதற்காக அவர்கள் தங்கள் சம்பளத்தின் ஒரு பகுதியை தாமாக பங்களிக்க முன்வந்துள்ளனர். அனைத்து ஊழியர்களின் பங்களிப்புக்களையும் ஒன்று திரட்டிய மொத்த தொகைக்கு ஈடான தொகையை நிறுவனம் தன் பங்குக்கு வழங்கவுள்ளது.

“'கடந்த 114 ஆண்டுகளாக இலங்கையுடன் நன்மையிலும், தீமையிலும் நாம் ஒன்றாகக் கலந்துள்ளோம். எங்கள் ஊழியர்கள், நுகர்வோர், விவசாயிகள், வணிக பங்காளிகள் மற்றும் ஒட்டுமொத்த சமூகத்தின் மீது நாம் எப்போதும் ஆழமான அக்கறை கொண்டுள்ளோம். மீண்டெழுதல், தைரியம், மற்றும் கருணை கொண்ட இதயத்துடன் உலகளாவியரீதியில் பரவி வருகின்ற இந்த தொற்றுநோய்க்கு எதிராகப் போராட எமது சக்திக்கு ஏற்ற வகையில் உதவிகளை வழங்கி, இன்று நாம் தொடர்ந்தும் அப்போராட்டத்துடன் கைகோர்த்துள்ளோம்” என்று நெஸ்லே லங்கா நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளரான ஃபேப்ரிஸ் காவலின் அவர்கள் கருத்து வெளியிட்டார்.

பெறுமதிச் சங்கிலியின் ஒட்டுமொத்த பங்குதாரர்களின் நலனைப் பாதுகாக்க நிறுவனம் விரிவான நிவாரண முயற்சிகளை தன்னால் முடிந்தவரை செயல்படுத்தியுள்ளது.

நுகர்வோர், சமூகம்: தனது நுகர்வோருக்கு சேவையை தொடர்ந்தும் வழங்கி, தங்குதடையின்றி உணவை வழங்குவதை உறுதி செய்ய நெஸ்லே அயராது உழைத்து வருகிறது. சமூகத்திற்கு உதவுவதற்காக, ரூபா 50 மில்லியன் தொகை பெறுமதியான தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள், உணவு மற்றும் பான வகை உற்பத்திகளை நிறுவனம் தனது பங்களிப்பாக வழங்கியுள்ளது.  கொவிட்-19 தொற்று பரவல் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கும், மற்றும் தேசிய தொற்றுநோயியல் வைத்தியசாலை, பொதுச் சுகாதார பரிசோதகர்கள், இராணுவம் மற்றும் பொலிஸ் அடங்கலாக உலகளாவியரீதியில் பரவி வருகின்ற கொவிட்-19 தொற்றுநோயை எதிர்த்துப் போராடும் செயலணி மையத்தில் உள்ள மருத்துவப் பணியாளர்கள் மற்றும் படைகளுக்கும் மேற்குறிப்பிட்ட நன்கொடைகள் வழங்கப்பட்டுள்ளன.

விவசாயிகள்: இந்த நிச்சயமற்ற காலங்களில் நெஸ்லே தனது 14,000 பாற்பண்ணையாளர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படுவதை உறுதிசெய்யும் வகையில் அவர்களிடமிருந்து தொடர்ந்து பாலைக் கொள்வனவு செய்து வருகின்றது. தமது பாலை விற்பனை செய்ய முடியாத நிலையிலுள்ள ஏனைய பாற்பண்ணையாளர்களும் தொடர்ந்தும் வருமானத்தை ஈட்டுவதற்கு வழிகோலும் வகையில், அவர்களுடைய பாலையும் கொள்வனவு செய்து நிறுவனம் அவர்களுக்கு உதவி வருகின்றது.

வணிக பங்காளர்கள்: வழங்குனர்கள் குறைந்த பட்ச ஊழியர்களுடன் பணிபுரியும் வகையில் அவர்களின் செயல்முறைகளை மாற்றியமைக்க உதவும் வகையில் நெஸ்லே அவர்களுடன் நெருக்கமாக இணைந்து செயற்பட்டு வருகிறது. தேசிய சுகாதார, பாதுகாப்பு பரிந்துரைகளுக்கு ஏற்ப, நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்குத் தேவையான நெறிமுறைகள் மூலம் அவர்களுக்கு உதவி, வழிகாட்டி வருகின்றது. தனது விநியோக பங்காளர்கள் மத்தியில் நிதியியல் ரீதியான தாக்கத்தைக் குறைக்க உதவ, நடமாடும் விற்பனை மையங்கள், மற்றும் வீட்டு விநியோக வணிக கட்டமைப்புக்களை அமைக்கவும், மின்னணு-வர்த்தகத் தளங்களுக்கு வழங்கவும் நெஸ்லே அவர்களுக்கு உதவி வருகிறது. நிறுவனம் தனது விநியோக விற்பனைப் பிரதிநிதிகளுக்கு முகக்கவசங்கள், சுத்திகரிப்பான்கள் (சானிடைசர்கள்), சுகாதார, பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த வழக்கமான வழிகாட்டுதல்களையும் வழங்கி வருகிறது.

ஊழியர்கள்: தனது ஊழியர்களுக்கு பாதுகாப்பான பணி ஏற்பாடுகளைச் செயல்படுத்த உலக சுகாதார ஸ்தாபனம் மற்றும் இலங்கை சுகாதார அதிகார சபைகளின் சுகாதார ரீதியிலான பரிந்துரைகளை நெஸ்லே தீவிரமாகப் பின்பற்றி வருகின்றது. பணியை ஊழியர்களிடையே வகுத்தல், சமூகத்தில் இடைவெளியைப் பேணுதல், பாதுகாப்பான போக்குவரத்து, உடல் வெப்பநிலை கண்காணிப்பு, சுத்திகரிப்பான்கள் (சானிடைசர்கள்), முகக்கவசங்களைப் பயன்படுத்துதல் மற்றும் வீட்டிலிருந்து வேலை செய்வது ஆகியவை இதில் அடங்கும். ஊழியர்களும் அவர்களுடைய குடும்பத்தினரும் தங்களை எவ்வாறு பாதுகாத்துக் கொள்ள முடியும் என்பது தொடர்பான வழக்கமான தகவல் தொடர்பு மற்றும் ஒரு ஊழியர் தங்களுக்கோ அல்லது ஒரு குடும்ப உறுப்பினருக்கோ தொற்று ஏற்படும் அபாயம் இருப்பதாக உணர்ந்தால் சுய-தனிமைப்படுத்துதலுக்கான வழிகாட்டுதல்கள் உதவிகளும் இதில் அடங்கியுள்ளன.

இணையத்தின் மூலமான மருத்துவ ஆலோசனைகள், மருந்து வழங்கல், பரிந்துரைக்கப்பட்ட கொவிட்-19 சோதனைகளை உள்ளடக்குவதற்காக நிறுவனம் தனது ஊழியர்களின் சுகாதார காப்புறுதி நன்மைகளையும் நீட்டித்துள்ளது. மேலும், ஊழியர்களின் உடல், உள மற்றும் உணர்வுபூர்வ நலனுக்கு உதவுவதற்காக பல மெய்நிகர் இடைத்தொடர்பாடல் நிகழ்ச்சித் திட்டங்கள் மற்றும் பிற துணை விதானங்கள் ஒவ்வொரு வாரமும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

“இத்தகைய நேரங்களில் நெஸ்லே போன்ற நிறுவனங்கள் தங்கள் விழுமியங்களை நிரூபித்து சொற்களை செயலில் காண்பிக்க வேண்டும். இந்த கடினமான நேரத்தில் எங்கள் நுகர்வோர் எமது உற்பத்திகளை தொடர்ந்தும் பெற்றுக்கொள்வதை உறுதிப்படுத்துவது மட்டுமல்லாது, எங்கள் மக்கள், விவசாயிகள், வழங்குனர்கள் மற்றும் வணிக பங்காளர்கள் மீது அக்கறை கொள்வதிலும், இந்த சூழ்நிலையில் மிகவும் பாதிக்கப்படக்கூடிய மற்றவர்களுக்கு உதவி அக்கறை செலுத்துவதிலும் நாங்கள் பெருமைப்படுகிறோம். எங்களால் முடிந்ததைச் செய்வதில் பெருமிதம் கொள்கிறோம்” என்று ஃபேப்ரிஸ் காவலின் அவர்கள் குறிப்பிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X