2025 மே 09, வெள்ளிக்கிழமை

யூனியன் வங்கி ரூ. 285 மில்லியனை வரிக்கு முந்திய இலாபமாக பதிவு

Freelancer   / 2025 மே 05 , மு.ப. 04:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

யூனியன் வங்கி, 2025 மார்ச் 31 ஆம் திகதியுடன் நிறைவடைந்த நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில், உறுதியான கடன் வளர்ச்சி மற்றும் ஐந்தொகை விரிவாக்கம் போன்றவற்றை பதிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளது.

மூலோபாய நோக்கு மற்றும் மீட்சி ஆகியவற்றை வெளிப்படுத்தி தேறிய கடன்களில் 14% வருடாந்த வளர்ச்சியை யூனியன் வங்கி பதிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளது. அதனூடாக, கடன் வழங்கல் மற்றும் சில்லறை, சிறிய, நடுத்தரளவு தொழில்முயற்சியாண்மைகள் மற்றும் கூட்டாண்மை துறைகள் போன்றவற்றுக்கு ஆதரவளிக்கும் அதன் அர்ப்பணிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. நிதிச் சேவைகள் துறையில் வங்கியின் உறுதியான நிலையை வெளிப்படுத்துவதாக ஆரோக்கியமான கடன் வளர்ச்சி அமைந்துள்ளது. இந்த கடன் வழங்கல் போக்கை பிரதிபலித்து, வங்கியின் மொத்த சொத்துகள் ரூ. 161 பில்லியனாக உயர்ந்திருந்தது. 2024 டிசம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் இது 10% அதிகரிப்பாகும். வங்கியின் நிதி வசதியளிப்ப இருப்பை பிரதிபலித்து வைப்புகள் 2% இனால் உயர்ந்து ரூ. 106 பில்லியனாக வளர்ச்சியடைந்திருந்தது. சொத்துக்களின் தரம் முன்னேற்றமடைந்து, நிலை 3 மதிப்பிறக்க விகிதம், முன்னைய ஆண்டின் நிறைவில் பதிவாகியிருந்த 12.26% இலிருந்து 11.0% ஆக குறைந்திருந்தது. அதனூடாக, வங்கியின் உறுதியான மீட்சி நோக்கு வெளிப்படுத்தப்பட்டிருந்தது. மேலும், வங்கி தொடர்ச்சியாக தனது மூலதன போதுமை விகிதத்தை 14.33% ஆக பேணியிருந்தது.

 

தேறிய தொழிற்பாட்டு வருமானம் வருடாந்த அடிப்படையில் 11% இனால் உயர்ந்து ரூ. 1.75 பில்லியாக பதிவாகியிருந்தது. இதில், மேம்பட்டிருந்த சொத்தின் தரம் மற்றும் வினைத்திறனான இடர் முகாமைத்துவம் போன்றன பங்களிப்புச் செய்திருந்தன. தேறிய கட்டணம் மற்றும் தரகு வருமானம் 3% இனால் உயர்வடைந்து ரூ. 284 மில்லியனாக பதிவாகியிருந்தது. இதில் டிஜிட்டல் வங்கியியல், கார்ட் சேவைகள் மற்றும் வர்த்தக-தொடர்புடைய செயற்பாடுகள் போன்றவற்றில் ஏற்பட்ட வளர்ச்சி பங்களிப்புச் செய்திருந்தன. நிகர வருமானம் மற்றும் தேறிய வட்டி வருமானம் ஆகியன மாற்றமடையும் சந்தை சூழல்கள் மற்றும் வட்டி வீத நகர்வுகள் போன்றவற்றினால் பாதிக்கப்பட்டிருந்த போதிலும், வங்கியின் வருமான நிலை ஆரோக்கியமானதாகவும் மூலோபாய ரீதியில் பன்முகப்படுத்தப்பட்டதாகவும் அமைந்திருந்தது. வங்கியின் மட்டத்தில் ரூ. 285 மில்லியனை வரிக்கு முந்திய இலாபமாக யூனியன் வங்கி பதிவு செய்திருந்தது. வருமான அழுத்தங்கள் மற்றும் டிஜிட்டல் கட்டமைப்பு மற்றும் செயற்பாட்டு விரிவாக்கம் போன்றவற்றில் மேற்கொள்ளப்படும் முதலீடுகள் காணப்பட்ட போதிலும், வருமான உறுதித்தன்மையை பேணியிருந்தது.

 

குழும மட்டத்தில், யூனியன் வங்கிக் குழுமம் ரூ. 329 மில்லியனை வரிக்கு முந்திய இலாபமாகவும், குழுமத்தின் மொத்த சொத்துக்களின் பெறுமதி ரூ. 171 பில்லியனையும் பதிவு செய்திருந்தன. யூனியன் வங்கிக் குழுமத்தில் 95% ஆன பங்கை யூனியன் வங்கி கொண்டிருப்பதுடன், குழுமத்தில் துணை நிறுவனங்களான நஷனல் அசெட் மனேஜ்மன்ட் லிமிடெட் மற்றும் UB ஃபினான்ஸ் பிஎல்சி போன்றன அடங்கியுள்ளன. இவை, குழுமத்தின் திரண்ட செயற்திறன் மற்றும் மூலோபாய பன்முகப்படுத்தல் போன்றவற்றில் பங்களிப்புச் செய்யும்.

 

வாடிக்கையாளர்களின் சௌகரியத்தை மேம்படுத்தும் வகையில் Video KYC (VKYC) வசதியை வங்கி தனது டிஜிட்டல் மயமாக்கல் பயணத்தின் அங்கமாக அறிமுகம் செய்துள்ளது. மேலும், சிறிய நடுத்தரளவு தொழில்முயற்சியாண்மை மற்றும் நிதிசார் உள்ளடக்கம் ஆகியவற்றுக்கான வங்கியின் அர்ப்பணிப்பை உறுதி செய்யும் வகையில், ‘Power HER’ பிரிவு அமைந்துள்ளது. இலங்கையின் முதலாவது பெண்களுக்காக வங்கியியல் பிரிவாக அமைந்திருப்பதுடன், அவர்களுக்கு இலவச, முழுமையாக ஒன்றிணைக்கப்பட்ட பண முகாமைத்துவ தீர்வை இது வழங்குகிறது.  மொரட்டுவ பல்கலைக்கழகம் மற்றும் தேசிய புத்தாக்க முகவர் அமைப்பு (NIA) ஆகியவற்றுடன் இணைந்து முதலாவது தேசிய தொழில்முயற்சியாண்மை நிகழ்ச்சித் திட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X