2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

பாவற்குளம் படிவம்-1 இல் பூர்வீக நிலங்களை சுவீகரிக்க முயற்சி

Kogilavani   / 2014 மார்ச் 09 , மு.ப. 06:48 - 0     - {{hitsCtrl.values.hits}}


-நவரத்தினம் கபில்நாத்   


வவுனியா மாவட்டத்தில் வெங்கலச்செட்டிகுளம் பிரதேச செயலகத்திற்குட்பட்ட சூடுவெந்தபுலவு கிராமசேவையாளர் பிரிவிலுள்ள பாவற்குளம் படிவம்-1 இல் உள்ள நூறு ஏக்கரிற்கு மேற்பட்ட காணிகள் இராணுவகுடியிருப்பு அமைப்பதற்காக மிகவும் சூசகமான முறையில் சுவீகரிப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது என வட மாகாண சுகாதார அமைச்சர் வைத்தயிகலாநதி ப.சத்தியலிங்கம் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் கருத்து தெரிவிக்கையில்.

பாவற்குளம் படிவம்-1 கிராமமானது தமிழர்களின் பாரம்பரிய பிரதேசமாகும். இப்பகுதியில் தமிழ்மக்கள் சேனைப்பயிர்ச்செய்கை மேற்கொண்ட வந்துள்ளனர். நாட்டில் ஏற்பட்ட யுத்த நிலைமை காரணமாக வேறுபகுதிகளுக்கு இந்த மக்கள் இடம்பெயர்ந்த நிலையில் இந்தக்காணிகளை மிகவும் சூட்சுமமான முறையில் இராணுவ குடியிருப்பு அமைப்பதற்கான முயற்சிகள் நடைபெற்று வருவதாக பொதுமக்களிடமிருந்து முறைப்பாடு கிடைத்ததையடுத்து வெள்ளிக்கிழமை (7) நானும் சக மாகாண சபை உறுப்பினரான ஆர்.இந்திரராஜாவும் நேரடியாக சென்று நிலைமையை அவதானித்தோம்.

ஏறக்குறைய நூறு ஏக்கரிற்கு அதிகமான காணிகளை சுவீகரித்து இராணுவ குடியிருப்பு அமைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. ஏற்கனவே இராணுவத்தின் உதவியுடன் பாதைகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதில் வேடிக்கையான விடயம் என்னவெனில் வெங்கலச்செட்டிகுளம் பிரதேச செயலகத்தின் நிர்வாகத்திலுள்ள இந்த கிராமத்தின் காணியை அரசாங்க நில அளவையாளரை கொண்டு அளவீடு செய்ய வவுனியா தெற்கு சிங்கள பிரதேச செயலாளரின் கோரிக்கையின் பிரகாரம் காணி வரைபடம் தயாரிக்கப்பட்டுள்ளது.

இதற்கான காணி எல்லைகள் சிங்களப்பிரதேச செயலகத்தைச் சேர்ந்த கிராம சேவகர், குடியேற்ற உத்தியோகத்தர்களால் இனங்காட்டப்பட்டுள்ளது. அத்துடன் மீள்குடியேற்றம் என்ற பெயரில் மாவட்ட காணி பயன்பாட்டுக்குழுவின் அனுமதியின்றி ஒட்டுமொத்தமாக அனைத்து காணி வழங்கல் தொடர்பான நியமங்கள் எதுவும் பின்பற்றப்படாமல் இரகசியமான முறையில் இந்த காணி சுவீகரிப்பு முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இதற்கு பின்னணியில் அரசாங்கக் கட்சியின் சில அரசியல்வாதிகளும் துணைபோவதாக தெரிய வருகின்றது. இதுதொடர்பில் தீர்க்கமான முடிவொன்றை எட்டுவதற்காக இந்த விடயத்தை  வடமாகாண முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டுவரவுள்ளேன்' என்று தெரிவித்தார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .