2025 ஜூலை 17, வியாழக்கிழமை

இலங்கை சனத்தொகையில் 25 வீதமானோர் முதியவர்களாக மாறுவார்கள்

Gavitha   / 2014 ஓகஸ்ட் 18 , மு.ப. 08:42 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வி.தபேந்திரன்


2025ஆம் ஆண்டு இலங்கை சனத்தொகையில் நான்கில் ஒரு பங்கினர் முதியவர்களாக இருப்பார்கள் என இலங்கை சமூக பாதுகாப்பு சபையின் தலைவர் திருமதி சுமனா ஆரியதாச, திங்கட்கிழமை (18) தெரிவித்தார்.

இலங்கை சமூக பாதுகாப்புச் சபையில் இணைந்தவர்களில் இலங்கையில் அதிகூடியவர்களை இணைத்த (1800 பேர்) பிரதேச செயலகமாக கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி பிரதேச செயலகம் விளங்குகின்றது.

அதிகூடியவர்களை இணைவதற்காக செயற்பட்டவர்களைக் கௌரவிக்கும் நிகழ்வு பூநகரிப் பிரதேச செயலகத்தில் திங்கட்கிழமை (18) இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே சுமனா அரியதாச மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

'இலங்கையில் முதியவர்களின் எண்ணிக்கை அதிகரித்துச் செல்வதையிட்டு அரசாங்கத்தால், இலங்கை சமூக பாதுகாப்பு ஓய்வுதியத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் இலங்கையில் முதியவர்கள் அதிகரிக்கவுள்ளனர்' என்றார்.

அத்துடன், 'அவர்களின் அதிகரிப்பைத் தாங்கும் பொருட்டு அவர்களுக்கான திட்டங்களை அரசாங்கம் செயற்படுத்தி வருகின்றது. அந்த வகையில், அரசாங்கம் உத்தியோகம் அல்லாதவர்களும் ஓய்வூதியம் பெற்றும்வகையில் சமூக பாதுகாப்பு ஓய்வுதியத்திட்டம் உதவுகின்றது.

இதன்மூலம் எதிர்காலத்தில் முதியவர்கள் தங்கள், முதுமைக் காலத்தை வளப்படுத்திக் கொள்ளலாம். இந்தத் திட்டத்தில் இலங்கையில் அதிகம் பேரை இணைத்தவர்களாக பூநகரிப் பிரதேச செயலகம் இருக்கின்றது.

இதேபோல், வடமாகாணத்தின் மற்றைய மாவட்டங்களும் மாறவேண்டும். வளங்கள் குறைந்த பூநகரிப் பிரதேசத்தில் அதிகம் பேர் சமூக பாதுகாப்பு ஓய்வூதியத் திட்டத்தில் இணைந்தமை வரவேற்கத்தக்கது.

வடமாகாணத்தில் மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் அண்மையில் இந்த ஓய்வூதியத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில், பூநகரிப் பிரதேசத்தில் அதிகம் பேர் ஓய்வூதியத் திட்டத்தில் இணைவதற்கு நெறிப்படுத்திய மாவட்டச் செயலாளர் ரூபவதி கேதீஸ்வரன், அதனை வழிப்படுத்திய பிரதேச செயலாளர் எஸ்.சத்தியசீலன், மற்றும் சமுர்த்தி உத்தியோகத்தர்கள், கிராமஅலுவலர்கள் உள்ளிட்டவர் கௌரவிக்கப்பட்டனர்.

இந்நிகழ்வில் இலங்கை பாதுகாப்புச் சபையின் பணிப்பாளர் ஆரியபெரும உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X