2025 ஜூலை 12, சனிக்கிழமை

8 ஆண்டுகளாக அமைச்சர் ராஜித உறக்கமா?

Niroshini   / 2017 பெப்ரவரி 18 , மு.ப. 06:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

முல்லைத்தீவு - பிலக்குடியிருப்பு மக்களின் காணி கோரிக்கைக்கு ஒரு இரவில் தீர்வினை வழங்க  இயலாது என சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன கூறிய கருத்துக்கு பிலக்குடியிருப்பு மக்கள் கடுமையான எதிர்ப்பினை தெரிவித்துள்ளதுடன், போர் நிறைவடைந்து 8 ஆண்டுகளாக அமைச்சர் ராஜித உறக்கத்தில் இருந்தாரா? எனவும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

பிலக்குடியிருப்பு மக்கள் தமது காணிகளில் இருந்து விமானப்படையினர் வெளியேறவேண்டும் எனவும் தமது காணிகளில் தம்மை மீள்குடியேற்ற வேண்டும் எனவும் கோரி கடந்த 19 நாட்களாக தொடர்ச்சியான கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்டிருந்த மத்திய சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன, பிலக்குடியிருப்பு மக்களின் காணி களை ஒரு இரவில் வழங்கிவிட முடியாது என கூறியிருந்தார்.

அமைச்சரின் மேற்படி கருத்து தொடர்பாக, பிலக்குடியிருப்பு மக்கள் கருத்து தெரிவிக்கையில்,

“போர் நிறைவடைந்ததன் பின்னரான 8 வருடங்கள் எங்களுடைய காணிகளை எங்களிடம் வழங்குமாறுகோரி தொடர்ச்சியாக கேட்டு வருகின்றோம். அதனை விட கடந்த 19 நாட்களாக வீதியில் நின்று போராட்டம் நடத்தி கொண்டிருக்கின்றோம். இத்தனை நாட்களில் எத்தனை இரவுகள் வந்திருக்கும் என்பதை அமைச்சர் அறியவேண்டும். அதனை விட நாங்கள் எங்களுடைய சொந்தக் காணிகளையே கேட்கிறோம். பிலக்குடியிருப்பு மக்கள் 354 பேர் இந்த போராட்டத்தில் பங்கெடுத்திருக்கின்றார்கள். அவர்களில் கடைசியாக ஒருவர் உள்ளவரையில் போராட்டம் நடக்கும் முடிந்தால் உதவி செய்யுங்கள். இல்லையேல் ஒதுங்கி நில்லுங்கள்” என, மக்கள் கூறியுள்ளனர்.

இதேவேளை, மாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன் கூறுகையில்,

8 வருடங்களாகவும் கடைசியாக 19 நாட்களும் இந்த மக்கள் தங்கள் காணிகளை கேட்கிறார்கள். இது அமைச்சருக்கு தெரியாதா? போராட்டம் தொடங்கி 4ஆம் நாள் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் இங்கே வருகைதந்து சகல ஆவணங்களும் அரசாங்கத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டிருப்பதாக கூறினார். அப்போதும் அமைச்சருக்கு தெரியவில்லையா? இந்த 8 வருடங்களிலும், 19 நாட்களிலும் எத்தனை இரவுகள் வந்து போயிருக்கின்றன என்பதை அமைச்சர் கவனத்தில் கொள்ளவேண்டும். இதேபோல் கும்பகர்ணன் என்றொரு அரக்கன் இருந்ததாக கதைகள் கூறுகின்றன. அவன் பல நாட்கள் தொடர்ச்சியாக தூங்குவானாம். அப்படி அமைச்சரும் நீண்டநாட்கள் தூங்கிவிட்டு, இப்போது தான் தூக்கத்தில் இருந்து விழித்திருக்கிறார்போல் தெரிகிறது” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .