2025 ஓகஸ்ட் 09, சனிக்கிழமை

6 ஆவது நாளாக தொடரும் முள்ளிவாய்க்கால் போராட்டம்

George   / 2017 ஏப்ரல் 24 , மு.ப. 07:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

முல்லைத்தீவு, முள்ளிவாய்க்கால் பகுதியில் கடற்படையினர் வசமுள்ள 617 ஏக்கர் காணிகளையும் விடுவிக்கக்கோரி, அந்தப்பகுதி மக்களால் முன்னெடுக்கப்பட்டு வரும் தொடர் கவனயீர்ப்புப் போராட்டம்,  6ஆவது நாளாக இன்று முன்னெடுக்கப்படுகின்றது.

பொதுமக்களுக்குச் சொந்தமான 397ஏக்கர் காணி உள்ளடங்கலாக 617 காணி, கடந்த 2009ஆம் ஆண்டிலிருந்து கடற்படையினரின் கட்டுப்பாட்டில் இருந்து வருகின்றது.

அதனை விடுவிக்கமாறு கோரிக்கை விடுத்து பிரதேச மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

“இறுதி யுத்தத்தில் கடுமையான பாதிப்புக்களை எதிர்கொண்ட எமது வாழ்வாதாரத்துக்கு  ஆதரமாக இருந்த நிலங்களும் கடல்வளமும் படையினர் வசமுள்ளதால் நிர்க்கதி நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம். எங்களுடைய காணிகளை விடுவிப்பதற்கு பிரதமர், ஜனாதிபதி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர் தலையிடவேண்டும்” என , போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தெரிவித்துள்ளனர்.

“கடற்படை முகாம் அமைந்துள்ள பகுதி, மீனவ சமுகத்துக்கு இடையூறாகவும் அச்சுறுத்தலாகவும் காணப்படுவதால் தொழில் நடவடிக்கையில் ஈடுபட முடியவில்லை” எனவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

“எங்களுடைய காணிகளை படையினர் சுவீகரிப்பதற்காக இரண்டு தடவைகள் அளவீடு செய்யமுற்பட்ட போது, அதற்கு எதிர்ப்புத் தெரிவித்திருந்தோம். காணிகளை விடுவிப்பதாக கடந்த பெப்ரவரி மாதம் 20ஆம் திகதி பாதுகாப்பு அமைச்சில் நடைபெற்ற  கூட்டத்தின் போது தெரிவித்தனர். ஆனால் விடுவிக்கவில்லை. அதனால்  இந்தப்போராட்டத்தை 6ஆவது நாளாக முன்னெடுத்து வருகின்றோம்” என்ற அவர்கள் மேலும் கூறினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .